Monday 29 May 2017

மனுஸ்ம்ருதி மூலம் திராவிடன் எப்படி வந்தான்?

ஒரு குறிப்பிட்ட வர்ணத்தவர் தங்கள் வர்ண சுபாவத்தைக் கடைப் பிடிக்கவில்லை என்றால் அதனால் அவர்கள் அந்த வர்ணத்தவர் என்னும் அடையாளத்தை இழக்கின்றனர். அப்படி உருவானதுதான் ”திராவிடன்” என்பது.
மனுஸ்ம்ருதி 10-22 ஆம் ஸ்லோகத்தின் மூலம்,  திராவிடன் எப்படி உருவாகிறான் என்று தெரிகிறது.

க்ஷத்திரியனாகப் பிறந்தவன்,  அதாவது க்ஷத்திரிய சுபாவத்துடன் பிறந்தவன், க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை என்றால், அவனுக்குப் பிறக்கும் பிள்ளை ‘க்ஷத்திரியன்’ எனப்பட மாட்டான். அவன் ‘கல்லன்’ எனப்படுவான்.

அவனும் க்ஷத்திரிய சுபாவத்துடன், க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை என்றால் அவன் ‘மல்லன்’ எனப்படுவான்.
இவ்வாறே ஒவ்வொரு தலைமுறையிலும், க்ஷத்திரியம் வெளிப்படவில்லை என்றால் அவர்க்ள் க்ஷத்திரியத்தை இழப்பார்கள். இப்படி ஆறு தலைமுறை சென்றுவிட்டால் அதற்குப் பிறகு பிறப்பவன் திராவிடன் என்ப்படுவான்.

அந்த வரிசை:-  க்ஷத்திரியன்

1. கல்லன், 2. மல்லன், 3. லிக்கிவி, 4. நடன்., 5. கரணன், 6. கஸன்,7. திராவிடன்.

திராவிடனுடன் இந்த வரிசை முடிந்து விடுகிறது. எனவே ஏழாவது தலை முறையில் க்ஷத்திரிய சுபாவமானது முழுதும் மறைந்து விடுகிறது என்று தெரிகிறது. இப்படி வர்ண சுபாவம் மறைந்து போவது மூன்று வர்ணத்தவருக்குமே உண்டு. அவர்களுள் க்ஷத்திரிய சுபாவம் மறைந்தவன் திராவிடன் எனப்பட்டான் என்பது மனு ஸ்ம்ருதி தரும் விளக்கம்.

சுபாவம் மறைந்து போவதால்,  அந்த வர்ணத்தவர்கள் செய்யும் செயல்களைச் செய்வதில்லை. ஹோமம் உட்பட எந்தக் கிரியையும் செய்யாமல் போவதால் அவர்கள் சூத்திரர்களது சுபாவத்தை அடைகிறார்கள். (10- 43)

ஆனால் அவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லவில்லை. ஏனெனில் சூத்திரர்களும் ஆரியர்கள். அவர்கள் வேத மத நம்பிக்கைகள் கொண்டவர்கள்.  தியானம், பக்தி எல்லாம் உண்டு. ஆனால் திராவிடர்களோ வேத மதத்திற்குப் புறம்பாகச் சென்றவர்கள். வேத மத வழக்கங்களைக் கைவிட்டவர்கள்.

இந்த விதத்தில் க்ஷத்திரியர்கள் திராவிடர்களாக மாறியது பரசுராமர் கலத்தில்தான் ஏற்பட்டது என்று சொல்லும் வண்ணம் மஹாபாரதத்தில் ஓரிடம் உள்ளது. பரசுராமர் க்ஷத்திரிய வம்சத்தைப் பூண்டோடு ஒழிக்கிறேன் என்று 21 முறை க்ஷத்திரியர்களை அழித்தார்.  அவரிடமிருந்து தப்ப விரும்பிய க்ஷத்திரிய மக்கள்,  தாங்கள் க்ஷத்திர்யர்கள் என்று மறைக்க விரும்பி, தங்கள் க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை. இவ்வாறு ஆறு தலைமுறை சென்றவுடன் அவர்கள் திராவிடர்கள் ஆனார்கள்.

பரசுராமருக்குப் பயந்து க்ஷத்திரியத்தை விட்டவர்கள் திராவிடன், அபிரன், புண்டரன், சவரன் என்பவர்கள் என்கிறது மஹாபாரதம் 14-29
மேலும் இரண்டு இடங்களில், ப்ராம்மணர்கள் கோபத்துக்குப் பயந்து திராவிடர்கள் உட்பட கலிங்கர்கள்,புளிந்தர்கள்,உசீனரர்கள்,கோலிசர்பர்கள்,மஹிஷகர்கள், மேகலர்கள்,லதர்கள்,பௌண்டரர்கள்,கொன்வாஸிரர்கள்,சௌண்டிகர்கள், தரதரர்கள்,தர்வர்கள்,சௌரர்கள்,ஸவரர்கள்,வர்வரர்கள்,கிராடர்கள், யவனர்கள், போன்றோர் க்ஷத்திரிய தர்மத்தை விட்டு சூத்திரர்கள் போலானார்கள் என்கிறது மஹாபாரதம் 13 – 33 & 35.

இங்கு பிராம்மணர்கள் என்றது, பிராம்மணரான பரசுராமரை. இவரது தந்தையான ஜமதக்னியை, ஹேஹய அரசனான கார்த்தவீர்யார்ஜுனன் என்பவன் கொன்று விடவே,  க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழித்து விடுவதாக சபதம் எடுக்கிறார்.   அதன்படி கார்த்த வீர்யார்ஜுனனையும், அவனுக்கு உதவிய மன்னர்களையும் கொன்றார். மொத்தம் 21 முறை பல அரச பரம்பரைகளையும் கொன்று அவர்கள் நாடுகளைக் கைப்பற்றினார். அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகத்தையும் செய்து, தன்னை எதிப்பவர்கள் யாரும் இல்லாமல் செய்தார்.
அவருக்குப் பயந்து தலையைக் காட்டாமல் மறைந்து வாழ்ந்த க்ஷத்திரியர்கள் நாளடைவில் திராவிடர்கள் ஆனார்கள்.

அவர்கள் சூத்திர தர்மத்தைக் கொண்டவர்கள் ஆனார்கள் என்னும் இந்த விவரத்தை, பிராம்மணர்கள், திராவிடர்களை அடக்கு முறை செய்ததாகவும் அந்தத் திராவிடர்கள் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும், இதனால், பிராம்மணர்கள் சூத்திரர்களை அடக்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், ஆங்கிலேய மிஷனரிகள் ஒரு சித்தாந்தத்தைப் பரப்பினார்கள்.
இதன் மூலத்தை ஆராயாமல், கிளிப்பிள்ளை போல எடுத்துக் கொண்டார்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள்.

No comments:

Post a Comment