Tuesday 4 February 2020


விவாஹ மந்த்ரார்த்தம்
(திருமண மந்திரங்கள்)

 Image result for sitha ram விவாஹ

            விவாஹம் என்பது, வி +வாஹம் என்று பிரிக்கப்பட்டு பொருள் சொல்கிறார்கள். விசேஷமானது தங்குதல்/மேன்மையாக வஹித்தல் . மனமொத்த பிள்ளையும் பெண்ணும் ஒன்று சேர்ந்து க்ருஹஸ்த தர்மங்களை, ஸாஸ்த்ர ஸம்மதமாக வகிப்பது, விவாஹம். விவாஹ மந்த்ரங்களுக்கு ஆதாரம், பெரும்பாலும் ”ஆபஸ்தம்ப க்ருஹ்ய ஸுத்ரம்.” இது ஆயிரக்கணக்கான வருஷங்களாக வழக்கத்தில் இருக்கும் ஸம்ப்ரதாயம் .இவை,”ருக்-வேதத்தில், ஸோமன் –ஸூர்யா” விவாஹத்தில் உள்ளதாகச் சொல்வர். நமது ஸம்ப்ரதாயத்தில் ,முக்யமானவை.:
           
ஸமாவர்த்தனம்
கந்யகா தானம்
திருமாங்கல்ய தாரணம்
பாணிக்ரஹணம்
ஸப்தபதீ
ப்ரதான ஹோமம்
அம்மி மிதிப்பது
லாஜஹோமம்
ப்ரவேஸ்ய ஹோமம்
த்ருவஅருந்ததீ நக்ஷத்ர தர்ஸனம்

சாயங்கால வேளையில்
நலங்கு
ரிசப்ஷன் மற்றும் பல-
           

முதல் ப்ரச்நம் - முதல் கண்டம்

வரப்ரேஷணமாவது விவாஹம் செய்துகொள்ள விரும்புகிறவன் நல்ல ப்ராஹ்மணர்களை பெண் பார்த்து வரச்சொல்லி, (நல்ல பெண் கிடைத்ததும்) அவள் பெற்றோரிடம் இது விஷயமாகப் பேசி முடித்து வருவதற்காக அனுப்புவதே வரப்ரேஷணம் ஆகும்.

ப்ரஸுக்மந்தா தியாஸாநஸ்ய ஸக்ஷணி வரேபிர் வராகும் அபிஷுப்ரஸீதத .அஸ்மாகமிந்திர உபயம் ஜூஜோஷதி யத்சொளம்ய ஸ்யாந்த ஸோ புபோததி

துரிதமாகச் செல்லக் கூடியவர்களும் எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்களும் ஆன ப்ராஹ்மண உத்தமர்களே! நீங்கள் உடனே புறப்பட்டுச் சென்று கன்யையின் பிதாவைச் சந்தியுங்கள். அந்த கன்யையை நான் மணப்பதை இந்த்ர தேவனும் விரும்பி அநுக்ரஹிக்கிறான். ஏனெனில், கல்யாணமாகி தம்பதிகளாக நாங்கள் நடத்தப் போகும் ஸோம யாகத்தில் இந்த்ரனின் ப்ரீதிக்கான ஆகாரங்களை அளிப்போம் என்பதை அவன் அறிந்துள்ளான்.

தனக்காகப் பெண் தேடப்போகும் ப்ராஹ்மணர்களுக்கு வழியில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்க தேவதைகள் ப்ரார்த்திக்கப்படுகிறார்கள்.

         
அந்ருக்ஷரா: :- தேவதைகளே! எனக்காகப் பெண் தேடச் செல்லும் ப்ராஹ்மணர்கள் செல்லும் வழியில் கல், முள் போன்ற தொந்திரவுகள் ஏதுமின்றி நல்ல பாதையாக இருக்கச் செய்யுங்கள். அர்யமா, பகன் போன்ற தேவதைகள் எங்கள் தாம்பத்திய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கட்டும்.

கல்யாணம் நிச்சயமானபின் வரன் கன்னிகையைப் பார்த்துச் சொல்லும் மந்திரம்:

அப்ராத்ருக்நீம் :- அப்ராத்ரு, அபதி, அபுத்ர என ஸஹோதரர்களின் நலனுக்காகவும், கணவனாகிய தன்னுடைய நலனுக்காவும், பெறப்போகும் புத்ரர்களின் நலனுக்காகவும் முறையே வருணன், ப்ருஹஸ்பதி, இந்ரனாகிய தேவர்களிடம் ப்ரார்த்தித்து இந்தக் கன்னிகையிடம் ஏதேனும் தோஷமிருந்து மேற்சொன்னவர்களை பாதிக்கக்கூடுமானால் அவற்றை நீக்கி நல்ல சுபலக்ஷணங்களை அளித்து அனைவருக்கும் க்ஷேமத்தை ப்ரார்த்திக்கிறான்.


பெண்ணின் ஒவ்வோர் அங்கத்தையும் வரன் பார்ப்பதற்கான மந்த்ரம்:

அகோர சக்ஷூ :- பெண்ணே! உன் கண்களால் பார்க்கப்படும் பார்வை தோஷங்களற்றவையாகவும் மங்களகரமாகவும் இருக்கட்டும். உன் கணவனை துன்புறுத்தாதவளாய் இரு. கணவனுக்கும், கணவனின் ஸஹோதரர்களுக்கும் இசைவான கருத்துடையவளாக விளங்குவாயாக. தூய நல்லெண்ணங்கள் கொண்டவளாயிரு. க்ரூரமான பார்வையின்றி சாந்தமான குளிர்ந்த நோக்குடையவளாய், கணவனின் இல்லத்தைச் சேர்ந்தோர்க்கு மங்களங்களைச் சேர்ப்பவளாய், நல்ல மனதும், மஹாலக்ஷ;மி போன்ற வதனமும், நீண்ட ஆயுளுடன் சிறந்த மக்களை பெறும் பாக்யவதியாகவும், தன்புக்ககத்திலுள்ள பசு, பக்ஷி உள்ளிட்ட அனைவரிடத்தும் பற்றும் பாசமும் உள்ளவளாய் இந்த கன்னிகை திகழவேண்டும் என்று மேலும் ப்ரார்த்திக்கிறான்.

பெண்ணிடம் உள்ள அவலக்ஷணங்களைத் தர்பத்தால் துடைத்து நீக்குவதற்கான மந்த்ரம்:

இதமஹம் :- பெண்ணே! உன்னிடம் என்னைக் கொல்லக்கூடிய அலக்ஷ்மீ எனப்படும் அமங்கலத்தன்மை இருந்தால் அதை இந்த மந்திரத்தை ப்ரயோகித்து இந்த தர்பத்தால் துடைத்து அதை உன்னைவிட்டு அகலும்படியாகச் செய்கிறேன் (என்று பெண்ணின் இரு புருவங்களுக்கு மத்தியில் தர்ப்பையின் நுனியால் துடைத்து மேற்குப்புறம் எறிகிறான்).


தங்களைப் பிரிந்து புக்ககம் செல்லும் பெண்ணின் பிரிவால் கண்ணீர்விடும் தாய் மற்ற பந்துக்களைப் பார்த்து ஆறுதலாகச் சொல்லப்படும் மந்த்ரம் :-


ஜீவாம்ருதந்தி :- இந்த திருமணம் என்னும் சுபகாரியத்தினால் பித்ருக்களும், தேவர்களும் த்ருப்தியடைந்து அநுக்ரஹமும், ஆசீர்வாதமும் செய்கிறார்கள். தம்பதிகளுக்கும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழும் ஆனந்தத்தையும், ஒருவருக்கொருவர் ஆதரவையும் அடைகிறார்கள். எனவே ஆனந்தமான இந்நேரத்தில் அபசகுனமாக அழுதல் கூடாது. கன்னிகையின் தாய் மற்றும் பந்துக்களே! ‘இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து எங்களை ஆசீர்வதிக்கின்றனர் என ஆண்டாள் அருளிச்செய்துள்ளதை எண்ணிப்பாருங்கள். இவளை நான் மணந்து கொள்வதால் இந்த்ராதி தேவர்கள் மற்றும் இரு குடும்பத்தின் பித்ருக்களுக்கும் ஆனந்தம் அடைந்துள்ளனர், எனவே இந்த சுபமான வேளையில் இவளின் பிரிவுக்காக வருந்துவதை விடுத்து எங்கள் க்ஷேமத்துக்காக அனைவரும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.


மணப்பெண்ணை நன்னீராட்ட  நால்திசைத் தீர்த்தங்களைக் கொண்டுவரும்படி பார்பனச் சிட்டர்களை ப்ரார்த்தித்தல்:


வ்யக்ஷத் க்ரூரம் :- இந்த ஜலத்தினால் இவளிடம் உள்ள கெடுதல் ஏற்படுத்தக்கூடிய தோஷங்கள் விலகட்டும். அப்படிப்பட்ட பரிசுத்தமான ஜலங்களை ப்ராஹ்மணர்கள் கொண்டு வரட்டும். இந்த ஸ்நாநத்தினால் இவள் ஸந்ததிகளை பாதிக்கக்கூடிய எந்த தோஷங்கள் இருந்தால் அனைத்தும் விலகட்டும். ஹே ப்ராம்மணோத்தமர்களே நீங்கள் நான்கு திசைகளிலும் சென்று கன்னிகையின் தோஷங்களை முற்றிலுமாக நீக்க வல்ல புனித தீர்த்தங்களை சேகரித்து வாருங்கள்.


பெண்ணின் தலையில் தர்பத்தால் செய்யப்பட்ட வளையத்தையும், அதன்மீது நுகத்தடியை வைத்து, அதன்மீது தங்கத்தை (திருமங்கல்யத்தை) வைத்து அதன்வழியாக தீர்த்தவிடும்போது சொல்லப்படும் மந்த்ரம்.

அர்யம்ண: :- இந்த தர்ப வளையம் சுற்றியிருப்பதுபோல், விவாஹ அக்னியைச்சுற்றி ஆதித்யன் முதலான தேவர்களும் அனைத்து பந்துக்களும் இவளைச் சுற்றியிருந்து இந்த விவாஹ பந்தத்தை கண்டு ஆசீர்வதிக்கட்டும். சூர்யனை க்ரணங்கள் சூழ்ந்திருப்பதுபோல் பந்துக்களும் நண்பர்களுமாகிய இந்த ஸபையில் உள்ளோர் அனைவரும் எங்களைச் சூழ்ந்திருந்து சூர்யாதி தேவர்களின் அநுக்ரஹத்திற்காக ப்ரார்த்திக்கும் இந்த வேளையில் என் கோரிக்கைகளை முழுமையாக அருளவேண்டும்படி தேவதைகளை நீங்களும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.

நுகத்தடி வைக்க மந்த்ரம்:

கேநஸ: கேரத: :- சசீ தேவியின் கணவனான இந்த்ர தேவனே! ‘அபாலா" என்ற பெண்ணின் சரும நோயை, உம் தேரின் சக்கரம் - தேர் தட்டு - நுகத்தடி இவற்றிலுள்ள துவாரங்களின் வழியாக ஜலம் விட்டு அவளை நோயிலிருந்து விடுவித்து அழகுள்ள சரீரத்தை அடையும்படிச் செய்தாய். (அதுபோல் இந்தக் கன்னிகையின் சிரசில் வைக்கப்பட்டுள்ள நுகத்தடி துவாரத்தின் வழியாக சேர்க்கப்படும் புனித நீரால் இவளது தோஷங்களையும் போக்கியருளவேண்டும்.


ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அபாலையின் கதை அல்லது வரலாறு:

தொழுநோய், சொரி, சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அபாலை என்ற பெண்ணை எவரும் மணம்புரிய முன்வரவில்லை. அவள் மணம்புரிந்து கணவனுடன் ஸோமனை வழிபட ஆவலாய் இருந்தாள். இந்நிலையில் ஒரு தினம் அவள் ஒரு நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். அவ்வெள்ள நீரில் ஸோம தேவனுக்கு மிகவும் ப்ரியமான ஸோமரஸத்தைக் கொண்ட ஸோமலதை எனும் கொடி அவள் கையில் தற்செயலாகக் கிட்டியது. அவள் அதன் ரஸத்தை பல்லால் கடித்துப் பிழிந்து ஸோமனை த்யானித்து அவனுக்குச் ஸமர்ப்பித்தாள். இதனால் த்ருப்தியடைந்த இந்த்ரன், அவளை தன் தேர் சக்கரம், தேர்த்தட்டு, நுகத்தடி இவற்றின் வாயிலாக மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தைச் செலுத்தி அவளை நல்ல அழகுள்ள ரூபவதியாக்கினான்.

நுகத்தடியில் ஸ்வர்ணத்தை (தற்போது திருமாங்கல்யம்) வைக்கும் மந்த்ரம்:

சந்தே ஹிரண்யம் :- பெண்ணே! மந்திர ஜலத்தின் ஸ்பரிசத்திற்காக உன் தலையில் வைக்கப்படும் இந்த ஸ்வர்ண மயமான தங்கமானது உனக்கு எல்லாவித நலன்களையும் அளிக்கட்டும். அபாலையை பரிசுத்தப்படுத்திய அதே மந்திரத்தால் நுகத்தடி வழியாக செலுத்தப்பட்டு, தங்கத்தில் தோய்ந்து உன் அங்கங்களை வந்தடையும் இந்த ப்ராஹ்மணர்களால் கொண்டுவரப்பட்ட பரிசுத்தமான புண்ணிய ஜலம் உன்னை ஸகலவிதமான தோஷங்களிலிருந்தும் விடுவித்து பரிசுத்மாக்கி என்னுடன் இரண்டறக் கலந்து எல்லா மங்கலங்களையும் அநுபவிப்போமாக.


பெண்ணை ப்ரோக்ஷிக்க ஐந்து மந்திரங்கள் :

1. ஹிரண்ய வர்ணா: :- ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று பெரிய பிராட்டியாரை வேதம் வர்ணிப்பதுபோல், திருமகளைப்போன்ற ஒளிபொருந்திய, தான் எப்போதும் சுத்தமானதும், அனைவரையும் சுத்தப்படுத்தி அனைத்துவித பாபங்கள் தோஷங்களிலிருந்தும் விடுவிக்க வல்லதுமான இந்த புண்ணிய தீர்த்தங்களால் ஸவிதா தேவன் உன்னை பரிசுத்தமாக்கட்டும்.

2. ஹிரண்யவர்ணா: :- இப்படிப்பட்ட தீர்த்தங்களால்தான் கச்யபன் எனும் சூரியன் உண்டானான். அக்நியும் இதிலிருந்துதான் தோன்றினார். எந்த தீர்த்தங்கள் தன்னுள் அக்னியை வைத்துள்ளதோ அந்த சுபமான தீர்த்தங்கள் உனக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் வழங்கட்டும். (அக்நின் கர்பம் ததிரே - என்று ஜலம் அக்னியைத் தன் கர்பத்தில் வைத்துள்ளது என வேதம் உத்கோஷிக்கிறது. இதன் பொருள் : ஜலம் என்பது இரண்டு ஹைட்ரஜன், மற்றும் ஒரு ஆக்ஸிஜன் ஆகிய வேதிப்பொருட்காளல் ஆனது என விஜ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். ஆக்ஸிஜன் இல்லாமல் அக்னி இல்லை).

3. யாஸாம் ராஜா :- தீர்த்தத்திற்கு அதிபதியான வருண தேவன் ஜல மத்தியில் இருந்து கொண்டு, ஜனங்களின் புண்ய பாபங்களை பரிபாலித்து வருகிறாரோ, அந்த வருணனின் அநுக்ரஹத்தால் உனக்கு நன்மைகள் ஏற்படட்டும்.

4. யாஸாம் தேவா: :- எந்த தீர்த்தத்தை தேவர்களும் ஆஹாரமாக ஏற்கிறார்களோ, எந்த தீர்த்தங்கள் ஆகாயத்தில் மேக ரூபமாய்த் தவழ்கின்றனவோ, அந்த புண்ணிய ஜலங்களால் உனக்கு எல்லா சுகங்களும் கிட்டட்டும்.

5. சிவேநத்வா:- பெண்ணே இந்த ஜலங்கள் உன்னை மங்கலகரமான சுபபார்வையை உன்மேல் செலுத்தட்டும். பரிசுத்தமான புண்ணியகரமான தன் தேஹங்களால் உன் தேஹத்தை நனைக்கட்டும். நெய் தாரையாய் விழுவதுபோல் உன்மேல் விழும் இந்த தீர்த்தங்கள் உனக்கு எல்லா அநுக்ரஹங்களையும் செய்யட்டும். வதுவே மிகவும் மஹிமையுள்ள மங்களகரமான புனிதமான இந்த தீர்த்தங்கள் என் ப்ரார்த்தனைக்காக இங்கு சூழ்ந்துள்ள தேவதைகள் மற்றும் பெரியோர்களின் அருளாசியுடன் உன் சாரீரத்தைச் சேர்ந்தவுடன் நீ இனி இம்மியளவும் தோஷங்களற்றவளாய் மிகவும் புனிதமானவளாய் பரிசுத்தையாய் ஆக்கப்பட்டுவிட்டாய் இனி அனைத்தும் உனக்கு மங்களங்களேயாகும்.


கூறைப்புடவை வழங்குதல்

குறிப்பு:- கூறை வஸ்த்ரம், கோடி வஸ்த்ரம் என்றால் புதிய துணி என்று பொருள்.

பரித்வா கிர்வணோ கிர: தேவேந்த்ர தேவனே! எப்படி அனைவரிலும் உயர்ந்தோரான தேவ தேவர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்து துதிக்கின்றனரோ, அதுபோல் இந்த புதிய புடவையானது இவளது மேனியைச் சூழ்ந்திருந்து இவள் எப்போதும் ஸெளபாக்யம் நிறைந்தவளாக இருக்கவேண்டும் என்று அநுக்ரஹிக்கவேண்டும். பரிசுத்தமான மரகதம் வைரம் போன்றவற்றையும் சாளக்ராம பெருமாளையும் நாம் பட்டு வஸ்திரத்தில் வைத்து பாதுகாப்பதுபோல, மிகவும் பரிசுத்தமான மங்களகரமான இந்த வதுவை வரன் ஒரு புதிய பட்டு வஸ்திரத்தை கொடுத்து வாங்கிக் கொள்கிறான். அந்த வஸ்திரத்தைக் கொடுக்கும்போது இவளை பரிசுத்தம் செய்ய அநுக்ரஹித்த தேவதைகளைஇந்த வதுவை இந்த பட்டு வஸ்த்ரம் சூழ்ந்திருப்பதுபோல் என்னுடைய ஸ்தோத்திரங்கள் தேவதைகளான உங்களைச் சூழ்ந்திருக்கட்டும், நாங்கள் எப்போதும் க்ஷேமமாக இருக்க அநுக்ரஹியுங்கள்" என்று வேண்டிக்கொண்டு புடவையை வதுவுக்கு ஆசீர்வதித்துக் கொடுக்கிறான்.


திருமாங்கல்ய தாரணம்

பெண் புடவையை உடுத்திக்கொண்டு வந்ததும்

திருமாங்கல்யம் புஷ்பம் வகையறாவை தாம்பாளத்தில் வைத்து பெரியவர்களிடம் காட்டி அவர்கள் தொட்டு அநுக்ரஹம் செய்வது வழக்கம். பின்னர், பெண்ணின் தகப்பனார் மடியில் மணப்பெண்ணைக் கிழக்கு நோக்கி உட்கார வைத்து, மணமகன் மேற்கு நோக்கி இருந்து,

“மாங்கல்யம் தந்துநா அநேந மம ஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி சுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்"

என்ற ச்லோகத்தினால் மாங்கல்ய சூத்ரம் அணிவிக்கிறான்.

“நான் ஜீவித்திருப்பதற்கு ஹேதுவாக கயிற்றினால் ஆன இந்த மங்கள சூத்திரத்தை உனது கழுத்தில் அணிவிக்கிறேன் நீ நூறாண்டுகள் சுமங்கலியாக வாழ்வாயாக" என்று வாழ்த்தி அணிவிக்கிறான்.

இந்த மங்களத்தை ரக்ஷித்தருளும்படி பகவான் விஷ்ணு, மதுசூதனன், புண்டரீகாக்ஷன், கருடத்வஜன் என்னும் திருநாமங்களால் எம்பெருமானை ப்ரார்த்திக்கிறான்.

பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் பொழுது மாப்பிள்ளை ஒரு முடிபோடுவதென்றும், பின்னர் மாப்பிள்ளையின் சகோதரி அதாவது பெண்ணின் நாத்தனார் மேலும் இரு முடிகள் போடுவதென்றும் ஸம்பிரதாயம்.


பெண்ணுக்கு யோக்த்ரம் எனும் தர்பக் கயிறு கட்டும் மந்த்ரம்:

ஆசாஸாநா :- (முதல் காண்டம் முதல் ப்ரச்நம்) அக்னி தேவனே! உம்மை நான் ஆராதிக்கும்போது என்னுடன் இருந்து ஒத்துழைக்கும் இந்த கந்யைகைக்கு, மனஅமைதி, நல்ல பிள்ளைச் செல்வங்கள், தேவையான செல்வம், நிறைந்த அழகு, இல்லறம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் இவள் உம்மிடம் வேண்டுகிறாள். இவைகளை நீர் இவளுக்கு அநுக்ரஹிக்கவேண்டும் என்பதற்கர்கவும், இந்த இல்லற வேள்வியில் இவளை இணைத்து பந்தப்படுத்திக்கொள்வதற்காகவும், இவளை இந்த தர்பக் கயிற்றினால் கட்டுகிறேன்.

நல்ல மனது, குழந்தைகள், ஐஸ்வர்யம், அழகுள்ள சரீரம் என எண்ணிறந்த ஆசைகளுடன் என்னை அடைந்திருக்கும் இந்த வதுவை அவற்றை அளிக்கவல்ல தேவதைகளின் ஆராதனமான இந்த விவாஹ ஹோமத்திற்காக இந்த தர்பக் கயிற்றினால் சுபமாக கட்டுகிறேன்.

(இல்லறத்தான் (க்ருஹஸ்தன்) மட்டுமே வேள்விகள் செய்ய அதிகாரம் உள்ளவன் என சாஸ்த்ரம் பகர்வதால், இன்று முதல் என் ஆயுள் உள்ளவரை இவள் என்னுடன் இணைந்து அனைத்து வேள்விகளிலும் பங்கேற்றுப் பெறும் நன்மைகளை இருவரும் சமமாக அநுபவிப்போமாக.)


பெண்ணை விவாஹ அக்னியின் ஸமீபத்தில் (அக்னிக்கு மேற்கே கணவனுக்கு வலது பக்கத்தில் முதன் முதலாக உட்கார வைக்க மந்த்ரம்:


          பூ॒ஷா த்வே॒தோ ந॑யது ஹஸ்த॒க்ருʼஹ்யா॒ஶ்விநா॑ த்வா॒ ப்ர வ॑ஹதாம் ரதே॑ந
க்ரு॒ʼஹாந்க॑ச்ச க்ரு॒ʼஹப॑த்நீ யதாஸோ॑ வ॒ஶிநீ॒ த்வம் வி॒தத॒மா வ॑தாஸி ’’ரிக்வேதம் 10. 85.26

‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’ – ரிக்வேதம் 10. 85.26

  
ப்ரஹ்மாவை வரிப்பது, அக்னி கார்யத்திற்கு தேவையான பாத்திரங்களை சுத்தி செய்வது போன்ற பூர்வாங்க விவாஹ அக்னி கார்யம் ஆனதும் வரன் வதுவைத் தொட்டுக் கொண்டு சொல்லவேண்டிய மந்த்ரம்

கந்யா அபிமந்த்ரணம்

          சோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:  I
த்ரிதீயோ அக்னி இஷ்டேபதி: துரீய மனுஷ்யஜா II

சோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே  I
ரயிம் புத்ரான் தாதாத் அக்னி மஹ்ய மதோ இமாம்  II – ரிக்வேதம் 10. 85, 40. 41


"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான், பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான், மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான், நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இவ்வாறு சந்திரன் கந்தர்வனிடமும் கந்தர்வன் அக்னியிடம் உன்னை பாதுகாத்து ஒப்படைத்தான். அப்படி உன்னை பெற்ற அக்னி, எனக்கு செல்வத்தையும் புத்திர பாக்கியத்தையும் அளிக்கட்டும் " – ரிக்வேதம் 10. 85, 40 & 41
  
பிறந்தது முதல் பருவ காலம் வரை ஒரு கன்னிப்பெண்ணுக்கு தேவையான குணம், சாரீர லக்ஷ;ணங்களையும், பாதுகாப்பையும், போஷாக்கையும் கொடுக்க முறையே ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களின் அருளால் கிடைக்கப்பெறுகிறது. ஸோமன் (சந்திரன்) குளிர்ந்த மனத்தையும், கந்தர்வன் யௌவனத்தையும் (பருவகால அழகு), அக்னி ஒளிவிடும் ரூபத்தையும் அளித்துவருவதையே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறாள் என்று கூறுகிறோம். ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவதைகளை எங்களுக்குத் தேவையான தனங்கள் மற்றும் புத்ர ஸந்தானங்களை அளித்து ஆசீர்வதிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்.
  
பாணிக்ரஹணம்

பாணிக்கிரஹணம் என்பது பெண்ணின் கையைப் பிடித்தல் என்பது பொருளாகும். கைப்பற்றி உரிமையாக்கிக்கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். பெண்ணின் வலது கையிலுள்ள ஐந்து விரலையும் குவித்த முறையில் சேர்த்து மணமகன் பிடிக்க வேண்டுமென்பது விதியாகும். மணமகனின் கை மேலேயும் பெண்ணின் கை அதில் அடங்கியும் இருக்க வேண்டும். இந்தப் பாணிக்கிரஹணம், நல்ல சத்புத்திரர்களைப் பெறுவதற்கும் அதனால் தேவர்களும், ரிஷிகளும், பித்ருகளும் சந்தோஷம் அடைவதற்கும் ஹேதுவாக விளங்குகிறதென்று சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன், சந்திரன், தேவேந்திரன் முதலான தேவர்கள் இந்தப் பாணிக்கிரஹணத்தால் சிறப்பு அடைந்திருக்கிறார்கள். ஸரஸ்வதி, லட்சுமி, இந்திராணி முதலான தேவதைகளும் பாணிக்கிரஹணத்தை ரக்ஷித்து, சகல சௌபாக்கியங்களையும் அளித்து இல்லற வாழ்க்கையை இனிது நடத்தி சத்புத்திரர்களைப் பெற உதவட்டும் என்று ப்ராத்திக்கப்படுகிறார்கள்.


மிகவும் போற்றி வணங்குகின்ற இராமாயணத்தில் சீதையின் கையை இராமன் கையால் சேர்த்துப் பிடிக்க வேண்டுமென்று வால்மீகி கூறுகிறார். ஜனகன் வம்சமும் - தசரதன் வம்சமும் தழைத்தோங்க இந்தப் பாணிக்கிரஹணம் உதவட்டும் என்ற கருத்தில்இயம் சீதா மமசுதா" என்ற ஸ்லோகம் மூலம் குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
  
பாணிக்ரஹண 4 மந்த்ரங்கள்

          க்ருப்ணாமி தே ஸுப்ரஜாஸ்த்வாய ஹஸ்தம் மயா பத்யா ஜரதஷ்டி: யதா : |
பகோ அர்யமா ஸவிதா புரந்த்ரி : மஹ்யம் த்வாது :கார்ஹபத்யாய தேவா: ||

வதுவே! தர்மத்தின் வழி நடக்கும்படியான நல்ல குழந்தைகளைப் பெறுவதற்காக உன் திருக்கரங்களைப் பற்றுகிறேன். கணவனாகிய என்னுடன் கிழத்தன்மை அடையும்வரை சேர்ந்து வாழ்ந்து இல்லற சுகங்களைத் துய்ப்பாயாக. பகன், அர்யமா, ஸவிதா, இந்த்ரன் ஆகிய தேவர்கள் சிறந்த இல்லறத்தை நடத்தும் பொருட்டு உன்னை எனக்கு மனைவியாகவும், உற்ற தோழியாகவும் அளித்துள்ளார்கள்.”

          தே பூர்வே ஜனாஸோ யத்ர பூர்வவஹோ ஹிதா ; |
மூர்த்தன்வான் யத்ர ஸௌப்ரவ: பூர்வா தேவேப்ய ஆதபத் ||

“இந்த விவாஹ தர்மத்தை ஏற்படுத்தியவர்களான முன் சொன்ன தேவர்களும், முன்னோர்களும் அந்த தர்மத்தை அநுஷ்டித்து வந்தனர். தேவர்களில் தலையாயவனான அக்நியும், முன்னவனான ஸூர்யனும் இந்த விவாஹ தர்மங்களில் ஸம்பந்தம் உடையவர்களாவர்.”

         ஸரஸ்வதி ப்ரேதமவ ஸுபகே வாஜிநீவதி |
தாம் த்வா விச்வஸ்ய பூதஸ்ய ப்ரகாயாமஸ்யக்ரத : ||

“சுபமான அழகுள்ளவளும், அன்னத்தைக் கொடுப்பவளுமான ஸரஸ்வதி தேவியே! நீயும் இந்த பாணிக்ரஹண வைபவத்தை ரக்ஷித்துக் காப்பாயாக. நாங்கள் இந்த ஸபையிலுள்ளோர் அனைவரின் முன்னிலையில் அனைத்து ஜீவராசிகள் சாட்சியாக உன்னைத் துதிக்கிறோம்.”

          ஏதி ப்ரதிசஸ்ஸர்வா தி ஸோனு பவமாந : |
ஹிரண்ய ஹஸ்த ஐரம்மஸ்ஸத்வா மன்மனஸம் க்ருணோது ||

“எந்த வாயு தேவன், திக்குகள் - உப திக்குகள் என்று எல்லா திசைகளிலும் தடையின்றிச் ஸஞ்சரிக்கிறானோ, அன்னத்தைக் கொடுக்கும் அக்நியின் தோழனும், ஹிரண்யத்தை (தங்கத்தை) கையில் அணிந்திருப்பவனுமான அந்த வாயுதேவன் வதுவே! உன்னை என்னிடம் மாறாத, உறுதியான அன்புள்ளவளாகச் செய்யட்டும்.”


ஸப்தபதி

பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை இடது கையால் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைப்பதை ஸப்தபதி என்று குறிப்பிடப்படுகிறது. விவாஹ க்ரியைகளிலேயே இது மிகவும் பொருள்பொதிந்தது. ஒரு பெண்ணும், ஆணும் இல்லற வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கவேண்டும் என்பதுபற்றி வேதம் மிக உயர்ந்த உதாரணங்களைக் கொண்டு அழகாக விளக்கிக் கூறியுள்ளது.

வரன் வதுவைப் பார்த்து பெண்ணே, உன் கையை வேதமந்திர பர்வமாகப் பற்றி என் சொத்தாக ஆக்கிக்கொண்டபின், என் தர்ம பத்திநியாக என்னுடன் முதன் முதலாக அடி எடுத்து நடந்து வரப்போகிறாய். உன்னை எனக்கு தர்மபத்தினியாக்கிக் கொடுத்த அந்த தேவர்களின் முன்னிலையில் நான் விஷ்ணு பகவானை, உன்னுடனான இல்லறத்திற்கு எனக்குத் தேவையான ஏழுவிதமான பாக்கியங்களை அருளும்படி கோரப்போகிறேன்" என்று அவளுடைய காலைப் பற்றி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஒவ்வொரு விண்ணப்பமாக வெளியிடுகிறான்....

மணமகள் மணமகனிடம் சொல்வது:

முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது

தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது

உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது

வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை (கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது

நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன். உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது

நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது

மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது

அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
  
ஹோதா, ப்ரசாஸ்தா, ப்ராஹ்மணாச்சம்ஸீ, போதா, நேஷ்டா, அச்சாவாக, ஆக்நீத்ர என்ற 7விதமான ருத்விக்குகளை (யாகத்தில் பங்ககேற்போர்) கொண்டு செய்யப்படுகிற ஸோம யாகாதி ஸத்கர்மாக்களை அநுஷ்டிக்கும்படியான பாக்யம் ஏற்பட ஸ்ரீமந்நாராயணன் தொடர்ந்து வந்து அநுக்ரஹிக்கட்டும்.
   
7ம் அடி முடிந்ததும் தொடர்ந்து ஜபிக்கப்படவேண்டிய மிக உயர்ந்த கருத்துடைய மந்த்ரம்:

‘ஸகா ஸப்தபதாபவ..." என்கிற மந்திரத்தால் தன் புதிய இளம் மனைவியிடம் நாம் எப்படிஎப்படி இருக்கவேண்டும் என்பதை பகிர்ந்துகொள்கிறான்...

          ஸகா ஸப்தபதா பவ , ஸகாயௌ ஸப்தபதா பபூவ ,ஸக்யந்தே கமேயம்
ஸக்யாத்தே மா யேஷாம், ஸக்யாந்மே மாயோஷ்டா :ஸமயாவ ஸங்கல்பாவஹை ,
ஸம்ப்ரியௌ ரோசிஷ்ணோ ஸுமனஸ்ய மாநௌ |
இஷமூர்ஜமபிஸம்வஸாநௌ , ஸந்நௌ மனாகும்ஸி ஸம்வ்ரதா ஸமுசித்தாந்யாகரம் |
ஸாத்வமஸ்ய மூஹமமூஹமஸ்மி ஸாத்வம் ,த்யௌரஹம் ,ப்ருதிவீ த்வம் ரேதோஹம்
ரேதோப்ருத்த்வம் ,மனோஹமஸ்மி வாக்த்வம் , ஸாமாஹமஸ்மிருக்த்வம்,
ஸா மா அனுவ்ரதாபவ , புகும்ஸே புத்ராய வேத்தவை ,ச்ரியை புத்ராய வேத்தவா
ஏஹி ஸுந்ருதே ||

வதுவே, ஏழு காலடி வைத்து என்னுடன் தொடர்ந்த நீ, இன்றுமுதல் எனக்கு வேதப்ரமாணமான ஸகி (ஸம்ஸ்க்ருதத்தில் நண்பனுக்குஸகா" என்றும் அதற்கு பெண்பால்ஸகி" என்றும் பெயர்) ஆகிவிட்டாய். நாம் பரஸ்பரம் நண்பர்காளகிவிட்டோம். இந்த நட்பிலிருந்து நான் ஒருபோதும் நழுவமாட்டேன். நீயும் நம் நட்பில் இந்தப் பாராங்கல்லைப்போல் (அம்மி போல்) உறுதியுடன் இருப்பாயாக. நான் விஷ்ணுவிடம் வேண்டிப்பெற்ற அனைத்தையும் நாம் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். இவ்வுலகில் ஒன்றைத் தவிர்த்து மற்றொன்று நிலைக்காததான பல்வேறு தத்துவங்கள் போல் நாம் இருவரும் இணை பிரியாதிருப்போம். நான் ஆகாயமானால் நீ பூமியாக இரு, நான் உயிரணுவானால் நீ உயிரைத் தாங்கும் கர்பக்ருஹமாய் இரு, நான் மனமானால் நீ வாக்கு எனும் சொல்லாக இரு (மனதால் நினைக்காத எதையும் வாயினால் பேச இயலாது), நான் ஸாம கானமானால் அந்த கானத்திற்கு கருப்பொருளான ருக்காக விளங்கு, இப்படி அநுஸரணையாய் இருவரும் இருந்து இன்பத்தின் சிகரங்களை எட்டுவோம், ஈடுஇணையில்லா புத்திரர்களையும், மஹாலக்ஷ;மிபோன்ற பெண் மகவையும் பெற்று கிழத்தன்மை அடையும்வரை சுகித்துக்கிடப்போம் வா என் ஸூந்ருதே"

விவாஹ ஹோம மந்த்ரங்கள்

4ம் கண்டம் - 16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்

        ஸோமாய ஜநிவதே ஸ்வாஹா |
கந்தர்வாய ஜநிவதே ஸ்வாஹா| ,
அக்நயே ஜநிவதே ஸ்வாஹா| |


ஸோமாய :- இந்த கந்யகையை முதலில் அடைந்த ஸோமதேவனுக்கு இந்த ஹோமம் செய்கிறேன். இரண்டாவதாக கந்தர்வனுக்கும், மூன்றாவதாக அக்நிக்கும் ஹோமம் செய்கிறேன்.”

          கன்யலா பித்ருப்யோ யதீ பதி லோகம் அவதீக்ஷாமதாஸ்த ஸ்வாஹா |

“இவள் பிறந்த வீட்டை விட்டு கணவனின் இல்லத்தை அடைவதால் இவன் தன் கந்யை என்ற தீiக்ஷ அதாவது நியமத்திலிருந்து நீங்கிவிட்டாள்.”

ப்ரேதோ முஞ்சாதி நாமுதஸ் ஸுபத்தாம முதஸ்கரத் |
யதேயம் இந்த்ர மீட்வஸ் ஸுபுத்ரா ஸுபகா ஸதி ||

இஷ்டங்களை பூர்த்தி செய்து வைக்கும் இந்த்ர தேவனே! இவளுக்கு அவள் பித்ரு க்ருஹத்திலுள்ள அபிமானங்களை (பற்றுதலை) விடுவிக்கவேண்டும். கணவனாகிய என்னுடைய குலத்தில் பற்றுதல் மிகவேண்டும் (பற்றுதல் இல்லாமல் போய்விடக் கூடாது). இவளுக்கு நல்ல புத்திரர்களும், நல்ல ஸம்பத்துக்களும் வழங்கி இவளை இந்த புக்ககத்தில் மனம் லயித்துப்போகும்படியாகச் செய்வீராக.”

          இமாம் த்வமிந்த்ர மீட்வ : ஸுபுத்ராகும் ஸுபகாம் குரு |
தசாஸ்யாம் புத்ரானாதேஹி பதிமேகாதசம் க்ருதி ||

வேண்டியவர்களின் அனைத்து வேண்டுதலையும் மழை போல் பொழிந்து நிறைவேற்றும் இந்த்ரனே! இவளுக்கு நிறை பிள்ளைச் செல்வங்களை ஆசீர்வதியும். பத்து குழந்தைகளை இவள் பெற்றாலும் 11வதாக (கடைசியாக)ப் பெற்ற குழந்தையிடத்தில் அன்பு செலுத்துவதுபோல் என்னிடம் எப்பொழுதும் இவள் அன்பு செலுத்தவேண்டும்.”

          அக்னிரைது ப்ரதமோ தேவதாநாகும் ஸோஸ்யை ப்ரஜாம் முஞ்சது ம்ருத்யுபாசாத் |
ததயகும் ராஜா வருணோபி நுமத்யதாம் யதேயகும் ஸ்த்ரீ பௌத்ரமகம் , ரோதாத் ||

அக்நி மற்றும் வருண தேவர்களே! இந்த பெண்ணிடம் பிறக்கவுள்ள புத்திரர்களுக்கு அபம்ருத்யு எனும் அகால மரணம், துர்மரணம் எதுவும் நேரிட்டுவிடாமல், இவள் எக்காரணம் கொண்டும் புத்ர சோகத்தினால் இவள் கண்ணீர்விட்டு அழும்படியான நிலை இவளுக்கு ஏற்படாமலிருக்க ஆசீர்வதிப்பீர்களாக.”

          இமாம்அக்னி : த்ராயதாம் கார்ஹபத்ய : ப்ரஜாமஸ்யை நயது தீர்க்கமாயு : |
அஸூந்யோபஸ்தா ஜீவதாம் அஸ்து மாதா பௌத்ரம் ஆனந்தம் அபிப்ரபுத்யதாம் இயம் ||

“விவாஹ அக்னி இவளை ரக்ஷிக்கட்டும். இவளிடம் பிறக்கும் பிள்ளைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்காளக இருக்கட்டும். இவள் மடியில் எப்பொழுதும் ஒரு குழந்தை தவழந்த வண்ணம் இருந்து - அவள் மடியை ஒருபோதும் வெறுமையாக்காமல் இருக்கட்டும். நீண்ட ஆயுளை உடைய அந்தக் குழந்தைகளை தினமும் காலை உறங்கி எழுந்தும் கொஞ்சி உறவாடும்படியான பாக்யத்தைக் கொடும்.”

மா தே க்ருஹே நிசி கோஷ உத்தாத் அந்யத்ர த்வத்ருதத்ய : ஸம்விசந்து |
மாத்வம் விகேசீ உர ஆவதிஷ்டா ஜீவபத்நி பதிலோகே விராஜ பச்யந்தி ப்ரஜாகும் ஸூமனஸ்யமாநாம் ||

“ஹே கல்யாணி! உன் வீட்டில் நள்ளிரவில் அழுகுரல் கேட்கவேண்டாம். அழச் செய்யும் அனைத்து துர்தேவதைகளும் உன்னிடமிருந்து விலகி வேறிடத்திற்குச் செல்லட்டும். தலைவிரி கோலமாய் மார்பிலடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை உனக்கு எப்போதும் வரவேண்டாம். உன் கணவன், குழந்தைகள் நீண்ட ஆயுளுள்ளவர்களாகவும் அவர்களுடன் காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பாயாக.”

த்யௌஸ்தே ப்ருஷ்டகும் ரக்ஷது ,வாயுரூரு ,அச்விநௌ ஸ்தனம் தயந்தகும் ஸவிதாபிரக்ஷது |
ஆவாஸஸ: பரிதாநாத் ப்ருஹஸ்பதி : விச்வேதேவா அபிரக்ஷந்து பச்சாத் ||

“உன் ப்ருஷ்டத்தை (முதுகு, ஆஸனம் ஆகிய பின் பகுதிகள்) ஆகாசம் ரக்ஷிக்கட்டும். உன் இரு துடைகளையும் வாயு ரக்ஷிக்கட்டும். அச்விநீ தேவர்கள் உன் ஸ்தனங்களை (மார்பகங்களை) ரக்ஷிக்கட்டும். உன் குழந்தையை ஸவிதா எனும் சூரிய தேவன் காப்பாற்றட்டும். பிறந்த குழந்தை துணி உடுத்தும் காலம் வரும் வரை ப்ருஹஸபதி தேவன், அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டு;ம்.”

அப்ரஜஸ்தாம் பௌத்ரம்ம்ருத்யும் பாப்மாநமுத வாகம் |
சீர்ஷ்ண : ஸ்ரஜமிவ உந்முச்ய த்விஷத்ப்ய : ப்ரதிமுஞ்சாமி பாசம் ||

உன்னிடம் குழந்தை பெறமுடியாத மலட்டுத்தன்மை இருந்தாலும், உனக்கு பிறந்த குழந்தைக்கு கேடுவிளைவிக்கும் புத்ர தோஷம் இருந்தாலும் மற்ற எந்த பாபகரமான தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வாடிய பூவை தலையிலிருந்து எடுத்து எறிவதுபோல் உன் சத்ருக்களாகிய பகைவர்களிடம் எறிகிறேன்.”

          இமம்மே வருண ச்ருதி ஹவமத்யா சம்ருடய |
த்வாமவஸ்யுராசகே ||

          ஹே வருண தேவனே ! என்னுடைய இந்த ஸ்தோத்ரத்தைக் கேட்டு, இப்போதே சுகத்தை அளிப்பீராக ! உம்மால், காப்பாற்றப்படுவதை விரும்பி, உம்மை நன்றாக ஸ்தோத்ரம் செய்கிறேன்

          தத்வா யாமி ப்ரஹ்மணா வந்தமாநஸ் ததாசாஸ்தே யஜமாநோ ஹவிர்பி : |
அஹேட மாநோ வருணோஹ போதி உரசகும்ஸ மா ஆயு :ப்ரமோஷீ : ||

          பாபங்களை விரட்டி, இடையூறுகளை அகற்றி, சுகத்தைப் பிரார்த்தித்து, ஸந்த்யாவந்தன உபஸ்தானத்தில் வருணதேவனை வேண்டுகிறோம். ஆபத்துக்களை அகற்றி, அருள்பவன்.வைதீக கர்மாக்களில், வருணனுக்கு ஹோமம் இல்லாத கர்மாவே இல்லை எனலாம்.

“ஹே வருண தேவனே ! யாகத்தில், யஜமானன் தன்னைக்காக்குமாறு வேண்டி, ஹோமம் செய்வதுபோல், நான் வேதமந்த்ரங்களால்,உன்னைத் துதிக்கிறேன் வேதம்செய்என்று சொன்னதைச் செய்யாமலும்,”செய்யாதேஎன்று சொன்னதைச் செய்தும் ,இது போன்ற குற்றங்களால், என்னைக் கோபிக்காமல், எங்கள் உயிரைப் போக்காமல் காப்பாற்றவேண்டுகிறேன்

          த்வந்நோ அக்னே வருணஸ்ய வித்வான் தேவஸ்ய ஹேடோ அவயாஸிஷீஷ்டா |
யஜிஷ்டோ வஹ்நிதம: சோசுசாந : விச்வா த்வேஷாகும்ஸி ப்ரமுமுக்த்யஸ்மத் ||

“ஹே, அக்னி தேவனே ! எல்லாவற்றையும் அறிந்தவரே . பூஜிக்கத் தக்கவரும் பெரும் ப்ரகாஸமும் உள்ளவரே. யாக, யஜ்ஞ ,ஹோமாதிகளில் எல்லா தேவர்களுக்கும்அளிக்கப்படும்ஹவிஸ் ஸை எடுத்துச் சென்று அவரவர்களுக்கு அளிப்பவரே .வருணதேவனுக்கு ,எங்களிடம் உள்ள கோபத்தை அகற்ற வேண்டுகிறோம். எங்களிடம் உள்ள எல்லா தோஷங்களையும் (குற்றங்கள் ) அகற்றி எங்களைக் காக்க வேண்டுகிறோம்.”

ஸத்வன்னோ அக்னே அவமோ பவோதி நேதிஷ்டோ அஸ்யா உஷஸோ வ்யுஷ்டௌ |
அவயக்ஷ்வ நோ வருணகும் ரராணோ வீஹி ம்ருடீககும் ஸுஹவோ ஏதி ||
  
“ஹே அக்னே ! நீங்கள் தேவர்களுள் , தொடக்கத்திலிருந்தே இருப்பவர்; அன்பும் பண்பும் உள்ளவர்; உம்மை வேண்டி அழைக்கும்போது, வருகை புரிந்து, புரோடாசம் போன்றவைகளைத் தாங்களும் உண்டு எங்களுக்கும் தரவேண்டும்

 விடியற்காலையில் இருந்து எங்களுடன் இருந்து, வரும் ஆபத்துக்களை அகற்றி, வருணன் துன்பம் கொடுக்காமல் தடுத்து,வருணபாசத்தில் நாங்கள் சிக்காமல், புரோடாசம் முதலியவற்றை விரும்பி ஏற்று, காப்பாற்றுமாறு அக்னிதேவன் வேண்டப்படுகிறார். எல்லாத் தேவர்களுக்கும்ஹவிஸ்ஸைக் கொண்டுபோய்க்கொடுக்கும் இவருக்கு, க்ருதஜ்ஜையைத் தெரிவிக்கபுரோடாசம்என்பதை இவருக்கு ஹவிஸ் ஸாக ஹோமம் செய்வர் இவற்றையெல்லாம், அடியேன், கேட்பதும் சொல்வதும் என்கிற தலைப்பில் 1008 கேள்வி பதிலில் சொல்லியிருக்கிறேன்.
  
த்வமக்னே அயாஸி அயாஸந்மனஸா ஹித : |
அயாஸந் ஹவ்யமூஹிஷே அயாநோ தேஹி பேஷஜம் ||

“ஹே அக்னே ! தாங்கள் உபாஸகர்களால் அடையத் தகுந்தவர்; அதனால், மனஸ் ஸா லும் அடையப்பட்டவர் . எங்களால் ஹோமம் செய்யப்படும்ஹவிஸ் ஸை தேவர்களிடம் சேர்ப்பிக்கச் சுமக்கிறீர் . எங்களால், சுலபமாக அடையத் தகுந்தவர் , நீர்.எங்களுக்கு பாபக்ஷயம்என்கிற மருந்தைக் கொடுப்பீராக”
         

அம்மி மிதித்தல்

வரன், கன்னிகையின் வலது கால் கட்டை விரலைத் தனது வலது கையால் பிடித்து, அக்னி குண்டத்துக்கு வடக்கே இருக்கும் அம்மிக்கல்லின் மேல் அவளுடைய வலது கால் பாதத்தை எடுத்துவைத்து, மந்த்ரம் சொல்லவேண்டும்.

ஆதிஷ்ட மேமச்மானம் அஸ்மேவ த்வக்குஸ்திராபவ |
அபிதிஷ்ட ப்ருதந்யத : ஸஹஸ்வ பருதநாயத : ||

“பெண்ணே ! நீ, இந்தக்கல்லின்மீது ஏறி நிற்பாயாக !இந்தக் கல்லைப்போல நிலையாக இருப்பாயாக. உனக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து நிற்பாயாக.தவறுகளைப் பொறுத்துக்கொள்வாயாக .”

லாஜஹோமம் (பொரியிடுதல் )

அக்னிக்கு மேற்காக வதுவரர்கள், அவரவர் இடத்தில் உட்கார்ந்துகொண்டு பொரியிடுதல் அக்னியைப் ப்ரதக்ஷணம் செய்தல், அம்மி மிதித்தல் மூன்றையும், மூன்று முறை மந்த்ரங்களுடன் செய்யவேண்டும்.

பெண்ணின் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, அதில் இரண்டு தடவை நெய்யைத் தடவி, நெல்பொரியை இரண்டு தடவை அந்தக் கையில் சேர்த்து அந்தப் பொரிமேல் மறுபடியும் கொஞ்சம் நெய் சேர்த்து, வரன் மந்த்ரத்தைச் சொல்ல, வரன் அவள் கைகளைப் பிடித்தபடியே அவளையே நுனிவிரல்களால், பொரியை அக்னியில் சேர்க்குமாறு செய்தல்

முதல் தடவைபொரிஇடுவது , அக்னிவலம், அம்மி மிதிப்பது

இயம் நாரீ உபப்ரூதே குல்பான்யாவபந்திகா |
தீர்க்காயுரஸ்து மே பதிர்ஜீவாது சரதச்சதம் |

இந்தப் பெண் , எனது கணவன் நீண்ட ஆயுஸோடு நூறு ஆண்டுகளாவது வாழவேண்டும் என்று பிரார்த்தித்து, இந்தப் பொரியை ஹோமம் செய்கிறாள்

அக்னிவலம்

துப்யமக்ரே பர்யவஹந்த் ஸுர்யாம் வஹது நா ஸஹ |
புந : பதிப்யோ ஜாயாம் தா அக்னே ப்ரஜயா ஸஹ ||

ஹே அக்னே ! முதலில், உனக்கு ,ஸூர்யன் தனது பெண்ணை ஸ்த்ரீ தனத்துடன் கொடுத்தான். இப்போது என்னைப்போன்ற பதிக்கு, பிள்ளைகளுடன் மனைவியைக் கொடுப்பாயாகஅதாவது, என் மனைவிக்கு புத்ரபாக்யம் உண்டாக அருள்வாயாக

புந : பத்நீம் அக்னிரதாத் ஆயுஷா ஸஹவர்ச்சஸா |
தீர்க்காயுரஸ்யா : பதி : ஏது சரதச்சதம் ||

அக்னிதேவன் , ஆயுள், காந்தி (ப்ரகாஸம் ) உள்ளவளான ,மனைவியை அளித்துள்ளான். இவளது கணவன் நீண்ட ஆயுளுடன் நூறு ஆண்டு வாழவேண்டும்.”

விச்வா உத த்வயா வயம் தாரா உதன்யா இவ |
அதிகாஹேமஹி த்விஷ : ||

“நாங்கள் எல்லாவிதமான சத்ருக்களையும் , வெள்ளத்தில் மூழ்கச் செய்வதுபோல் மூழ்கச் செய்யவேண்டும்.”

அம்மி மிதிப்பது வரன், கன்னிகையின் வலது கால் கட்டை விரலைத் தனது வலது கையால் பிடித்து, அக்னி குண்டத்துக்கு வடக்கே இருக்கும் அம்மிக்கல்லின் மேல் அவளுடைய வலது கால் பாதத்தை எடுத்துவைத்து, மந்த்ரம் சொல்லவேண்டும்

ஆதிஷ்ட மேமச்மானம் அஸ்மேவ த்வக்குஸ்திராபவ |
அபிதிஷ்ட ப்ருதந்யத : ஸஹஸ்வ பருதநாயத : ||

“பெண்ணே ! நீ, இந்தக்கல்லின்மீது ஏறி நிற்பாயாக !இந்தக் கல்லைப்போல நிலையாக இருப்பாயாக. உனக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து நிற்பாயாக.தவறுகளைப் பொறுத்துக்கொள்வாயாக.”

இரண்டாவது தடவைபொரியிடுதல், அக்னி வலம் , அம்மி மிதிப்பது

பொரியிட மந்த்ரம்

அர்யமணம் து தேவம் கன்யா அக்னிமயக்ஷத |
இமாம் தேவோ அத்வர : ப்ரேதோ முஞ்சாதி நாமுத : ஸுபத்தாம் அமுத ஸ்கரத் ||

“பெண்கள் அக்னியை உபாஸிக்கிறார்கள் . அந்த அக்னி தேவன், இந்தப் பெண்ணை, பிறந்தகத்திலிருந்து விடுவித்து, கணவனுடன் எப்போதும் பிரியாதிருக்குமாறு அருளவேண்டும்

            அக்னி, இல்லறத்தார்க்கு மிக முக்கியமானவன்,அதுவும் பெண்களுக்கு. கணவன் செய்யும்ஒளபாஸனம்போன்ற அக்னிகார்யங்களுக்கு , பத்னீ முக்கியம். இவள் இல்லாவிடில் ,அருகதையைஇழக்கிறான்.

பிறகு , அக்னியை வலம் வந்து, முன்போல அம்மி மிதிக்க வேண்டும். (மந்த்ரத்துடன் )

மூன்றாம் முறைபொரியிடுதல், அக்னி வலம், அம்மி மிதிப்பது

பொரியிட மந்த்ரம்
த்வமர்யமா பவஸி யத்கனீநாம் நாம ஸ்வதாவத்ஸ்வர்யம் பிபர்ஷி |
அஞ்ஜந்தி வ்ருக்ஷகும் ஸுதிதம் கோபி : யத்தம்பதீ ஸமனஸா க்ருணோஷி |\

ஹே அக்னே ! நீர் கன்னிகையை, அன்னஸம்ருத்தியுடனும் ஸ்வர்க்கத்துக்குச் சாதனமாகவும் செய்துள்ளீர் .விவாஹமான பெண்ணும் பிள்ளையும் ஒற்றுமையாகவும் ஒரே மனம் உள்ளவர்களாகவும் செய்கின்றீர்.எனவே, நன்கு ,பசுவின் நெய்யால் ஹோமம் செய்கிறார்கள் பிறகு , அக்னியை வலம் வந்து, முன்போல அம்மி மிதிக்க வேண்டும். (மந்த்ரத்துடன் )

பெண்ணின் இடுப்பில் கட்டிய தர்ப்பக் கயிற்றை அவிழ்த்தல்

இப்போது சொல்லும் மந்த்ரம்

ப்ரத்வா முஞ்சாமி வருணஸ்ய பாசாத் யமபத்நீத ஸவிதா ஸுகதே : |
தாதுச்ச யோநௌ ஸுக்ருதஸ்ய லோகே ஸ்யோனம் தேஹஸ பாத்தியா கரோமி ||
இமம் விஷ்யாமி வருணஸ்ய பாசம் யமபத்நீத ஸவிதா ஸுசேவ : |
தாதுச்ச யோநௌ ஸுக்ருதஸ்ய லோகே அரிஷ்டாம் த்வா ஸஹ பத்யா க்ருணோமி ||

ஹே ,பெண்ணே ! நல்ல மனமுடைய ஸவிதா இந்தத் தர்ப்பத்தின் மூலமாக எந்த வருண பாசத்தினால் கட்டினாரோ, அதிலிருந்து உன்னை விடுவிக்கிறேன்.புண்யம் செய்பவர்கள் இருப்பிடமான பிரும்ம லோகத்தில், கணவனான என்னுடன் சுகமாக இருப்பாயாக . சுகத்தைக் கொடுக்கும் எந்த ஸவிதா உன்னை வருண பாசத்தால் கட்டினாரோ அதனை அவிழ்த்து, வருணபாச பயமில்லாமல் பிரும்ம லோகத்தில், கணவனான என்னுடன் சுகமாக இருப்பாயாக .”
  
த்ருவன்அருந்ததி நக்ஷத்ர தர்ஸனம்

ஆகாயத்தில் நக்ஷத்ரம் தெரிய ஆரம்பித்ததும் ,கிழக்கு அல்லது வடக்குத் திசைக்குச் சென்று,வரன், வதுவுக்கு த்ருவன் , அருந்ததி நக்ஷத்ரங்களைக் காண்பிக்கவேண்டும். த்ருவ நக்ஷத்ரத்தைக் காண்பிக்கும்போது கணவன் சொல்லவேண்டிய மந்த்ரம்:

த்ருவக்ஷிதிர் த்ருவ யோனி : த்ருவமஸி த்ருவத: ஸ்திதம் |
த்வந்நக்ஷத்ராணாம் மேத்யஸி மா பாக்ஷி ப்ருதன்யத ||

,த்ருவனே ! நீர் நிலையான இடத்தில் இருக்கிறீர்;நிலையான பிறப்பைப் பெற்றுள்ளீர் ; மற்ற எல்லா நக்ஷத்ரங்களும் நிலைத்து இருப்பதற்குக் காரணமாக இருக்கிறீர் .இத்தகைய மஹிமை உள்ள நீர், பகைவர்களிடமிருந்து காப்பீராக.”

அருந்ததி நக்ஷத்ரத்தைக் காண்பிக்கும்போது கணவன் சொல்லவேண்டிய மந்த்ரம்
ஸப்தர்ஷய: ப்ரதமாம் க்ருத்திகாநாம் அருந்ததீம் |

யத்த்ருவதாகும்ஹ நிந்யு: ஷட்க்ருத்திகா
முக்யயோகம் வஹந்தீயம் அஸ்மாகம் ஏதது அஷ்டமீ ||

காச்யபர் போன்ற ரிஷிகள், க்ருத்திகை என்று பொதுப்பெயருள்ள பார்யைகளில் சிறந்தவளாக அருந்ததியை ,மற்ற க்ருத்திகைகளைக் காட்டிலும் மேலான ஸ்தானத்தையும் ,கீர்த்தியையும் அடையும்படி செய்தார்களோ, அந்த அருந்ததியின் தர்ஸனத்தால் ,என்னுடைய மனைவி எட்டாவதாக பெற்று விளங்குவாளாக

விவாஹ தினத்தன்று ப்ருஹஸ்பதி , எந்த எந்த மந்த்ரங்களைச் சொல்லுமாறு வரனிடம் சொல்கிறாரோ, அந்த வரன் , மந்த்ரங்களை ஹிருதயஸுத்தியுடன் சொன்னால், இல்லறம் என்கிற குடும்ப வாழ்க்கை, அந்தந்த தேவதைகள், முன்னோர்கள், பெரியவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ,ஸர்வலோக ஸரண்யனான ஸ்ரீமந் நாராயணனின் அநுக்ரஹம் பெற்று, யோகத்தையும் க்ஷேமத்தையும் பெற்று, சத்புத்ர ,பௌத்ராதிகளுடன்
வாழ்வாங்கு வாழ்வர்

தவிர்க்க வேண்டியவை

1. விவாஹ மேடையில், காலணி அணிந்து வருவதைத் தவிர்க்கவேண்டும் .
2. போட்டோ எடுப்பவர்கள்,மற்றவர்கள், இவர்களெல்லாம் விவாஹத்துக்கு வந்திருப்பவர்கள்,
விவாஹமேடையைப் பார்க்க இயலாதவாறு , சுவர் போல மறைத்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. விவாஹத்துக்கு வருகை தந்துள்ளவர்கள்செல்போன்உபயோகித்து உரக்கப்பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
4. திருமாங்கல்ய தாரணம் ஆனவுடன், மேடைக்குச் சென்று, மணமக்கள்,கரங்களைப் பிடித்துக் குலுக்குவதும், பரிசுகளைக் கொடுத்து, போட்டோவுக்கு நிற்பதும் தவிர்க்கவேண்டும்.
இது, விவாஹம் முழுவதும் முடிவு பெறாத நிலை.ஸப்தபதிலாஜஹோமம் , அம்மி மிதித்தல் வரையில் முடிந்தால்தான்,விவாஹம் பூர்த்தியான நிலை.பிறகுதான் புதுமணத்தம்பதியரை அணுகவேண்டும்;கைகுலுக்க வேண்டும்;

விரலில் பவித்ரத்தை அணிந்து கொண்டு, பிறரிடம் கை குலுக்குவது, பரிசைப் பெறுவது, போட்டோவுக்குப்போஸ்கொடுப்பது இவையெல்லாம், மேடையில் ப்ரஸன்னமாகியிருக்கும் தேவதைகளை அவமதிக்கும் செயலாகும். வைதீக கார்யங்களுக்கு முக்யத்வம் கொடுப்பது, வாழ்நாள் முழுதும் , வளத்தைக்கொடுக்கும்.