Monday, 29 May 2017

ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதை !   ஆங்கிலேயர்  மெக்காலே  செய்த சூழ்ச்சி ?


ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் செய்தபொழுது, மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய கிராக்கி இருந்தது. இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் மிஷனரிகளாகவும் இருந்தனர். இவர்கள் அந்தந்த வட்டார மொழியையும் கற்றுக் கொண்டனர். அங்கு இருந்த மத நம்பிக்கைகளையும் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்டு அதைக் கிறிஸ்துவத்தில் புகுத்தி தாங்கள் கிறிஸ்துவம்தான் முதன்மையானது என்று மூளைச் சலவை செய்து மதம் மாற்றினர். அப்படி செய்து பலன் கண்டவர் முன்னரே சொன்ன நொபிலி என்பவர். இவர் தமிழ் வளர்த்த மதுரையில் உட்கார்ந்து, உங்கள் இந்துமதம் தான் எங்கள கிறிஸ்துவமும் என்று சொல்லி வேலையைக்  காண்பித்தார்.

முல்லர் இங்கிலாந்தில் உள்ள சம்ஸ்க்ருதம் மொழி ஆராய்ச்சியாளர். மெக்காலே அவரைப் பிடித்தார்.  இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது. அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம். இந்தக் கருத்தை தன் மனைவிக்கு 1866 -ஆம் வருடம் எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.

'ரிக் வேதம் தான் இந்தியர்கள் மதத்தின் ஆதாரம். அந்த ரிக் வேதத்திற்கு  ஆதாரம் எது என்று நாம் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பித்தால்தான் மூவாயிரம் வருடங்களாக அவர்களைத் தன் பிடியில் வைத்திருந்த அந்த மதத்தை வேரோடு பிடுங்க முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணுகிறேன்" என்று எழுதினார்.
இதோ அக்கடிதக் குறிப்பு ஆங்கிலத்தில்..

 “The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3000 years”
Source:- Müller, Georgina, The Life and Letters of Right Honorable. Friedrich Max Müller, 2 vols. London: Longman, 1902.)

Source: https://en.wikiquote.org/wiki/Max_M%C3%BCller


அந்த ரிக் வேதத்திற்கு ஆதாரம் என்று அவர் கண்டு பிடித்து சொன்னது ஆரியப் படைஎடுப்பு. படையெடுத்து வந்த ஆரியர்கள் கொடுத்ததுதான்  வேதமும், வேத மதமும் என்றார் அவர். ஆரியர்கள் எப்படியெல்லாம் இங்கிருந்த மக்களை அழித்தார்கள் என்று விளக்குகிறது  ரிக் வேதம் என்று சொல்லி, ஞான வழியாக விளங்கிய வேதத்தையும், இந்து மதத்தையும் கொச்சைப் படுத்தினார்.

 இந்தக் கருத்து மொழி ஆராய்ச்சியாக மட்டுமல்ல, மிஷனரி பிரசாரமாகவும்  ஆனது. இதன் மூலம் மக்களுக்கு இந்து மதத்தின் மீது இருந்த பற்றை அழிக்கப் பார்த்தனர். அது மட்டுமல்ல, ஆரியர் விரட்டிய மக்கள் திராவிடர்கள் என்றும் கூறி, இன்றைய இந்தியாவில் இருக்கும் மக்களை ஆரியர்- திராவிடர் என்று பிரித்து ஒரு பகைமை உணர்ச்சியை மூட்டப் பார்த்தனர். ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆரிய- திராவிடப் பகை உரமானது.

ஆக, மொழி ஆராய்ச்சி என்ற பெயரில், நம் மதத்தை அழித்து, கிறிஸ்துவத்திற்கு மத மாற்றம் செய்வதற்கும், ஆங்கிலேயக் கூலிகளாக நம் மாறுவதற்குமே மாக்ஸ் முல்லர் பாடுபட்டார். இது சரித்திரம் சொல்லும் செய்தி. அப்படி அவர் சொன்னதை நம்பி, ஆரியப் படையெடுப்பில் ஓடி வந்த  திராவிடன் நாம் என்று சொல்லித் திரிவது தமிழனுக்கு மானக் கேடு.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆரியன் வந்தான். வட இந்தியாவில் இருந்த தாச்யுக்களை  விரட்டினான். வந்த இடத்தில் உட்கார்ந்து விட்டான். ஆக்கிரமிப்பாளனாக வந்த ஆரியன் கங்கைக் கரையில் உட்கார்ந்ததும் அமைதியாளனாக   ஆகிவிட்டான். வேதம் படைத்தான். இந்து மதத்தைத் தோற்றுவித்தான் என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படியும் ஆரிய இன வாதத்தைத் தங்களுக்கு வசதியாக இருக்கும் போதெல்லாம் ஆங்கிலேயன் சொல்லிக் கொண்டு நம்மை ஆண்டு வந்தான். இப்படித்தான் ஆரிய இன வாதமும், ஆரியப் படையெடுப்பும் அரசியல் ஆதிக்கத்துக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்டன. இதில் முளைத்த திராவிட இன வாதம் இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு ஊறுகாயாக உதவுகிறது.

No comments:

Post a Comment