Friday 6 September 2019


சங்க தமிழர் திருநாள் - ஓணம்

vamanna deva pali க்கான பட முடிவு

பெரும்பாலானவர்கள் ஓணம் என்பது கேரளா தேசத்தவர்கள் கொண்டாடும் பண்டிகை என நினைத்துள்ளார். அது தவறு. ஏனெனில், ஓணம் என்பது தமிழர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகை என நமது பண்டைய தமிழ் நூல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஓணம் பண்டிகை வரலாறு :

ஒருமுறை மஹாபலி சக்ரவர்த்தி இந்திரபதவியை அடைவதற்காக 100 அஸ்வமேத யாகம், அவரது அசுர குரு சுக்ராச்சாரியார் அறிவுறுத்தலின் படி செய்கிறார். இதனால், இந்திரன் பயந்து விஷ்ணுவிடம் முறையிடுகிறார். பகவான் விஷ்ணு இதை தாம் தடுத்து நிறுத்துவதாக கூறுகிறார்

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்..

சங்க இலக்கியங்களில் ஓணம் பற்றி கூறுவது !

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக் காஞ்சி (590 - 599)

          திருவோணத் திருநாளில் யானை அணிவகுப்புத் திருவிழா நடைபெறும். அதனைக் காணவரும் மக்கள் கூட்டம் விரைந்து வரும் யானையைப் பார்த்து அஞ்சி ஓடும். அப்போது அவர்கள் தம் மார்பில் அணிந்துள்ள காழகம் என்னும் அணிகலன் .ன்று விழுவதையும் பொருட்படுத்தாமல் ஓடுவர். அவை நிலத்தில் கிடந்து ஓடுபவர்களின் காலில் உருத்தும். அவுணரைக் கடந்ததாகப் பாடல் கூறுவதற்கு இந்தக் கதையே அடிப்படை. மதுரையிலும் இந்த நன்னாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது உலாவந்த யானைகளின் பெருமை பாடலில் சொல்லப்படுகிறது.

“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” 
                                                            - பெரியாழ்வார் திருமொழி 6

பொருள்:நான், என் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் பாட்டனார் தொடங்கி முதல் வந்த இந்த ஏழு தலைமுறைகளாக நாங்கள் வழிவழியாக வந்து இறைவனுக்கு திருத்தொண்டுகள் செய்கின்றோம். திருவோணத் திருநாளன்று அந்தி மாலைப் பொழுதில் ஆளரி (ஆளரி - ஆள்+அரி, மனிதன்+சிங்கம்) வடிவில் திருவவதாரமெடுத்து இரண்யகசிபு என்னும் அசுரனை  அழித்த நரசிங்கத்தின் அசதித்தீரப் பல்லாண்டு பல்லாண்டென்று பாடுவோமாக!

தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய் - தேவாரம் 503, திருமறை 2

          வாமனஅவதாரம். இந்த திரிவிக்ரம அவதாரத்தை பல மேற்கணக்கு நூல்கள் மட்டுமன்றி பெரும்பாணாற்றுப்படையிலும் (29-31), கலித்தொகை, உலகப்பெ்துமறை, பரிபாடலிலும் கூறப்படுகின்றது.

திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார்
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே?     - பரிபாடல்-55

திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர்.”

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல       - முல்லைப்பாட்டு (1-3)

தனது பெரிய கரங்களில் சங்கும், சக்கரமும் உடையவனாகிய திருமால் அன்றொருநாள் மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு வந்து , தானமாகப் பெற கையில் தாரை நீரை வாங்கிக் கொண்டே தனது குள்ள உருவிலிருந்து ப்ரமாண்டமாக த்ரிவிக்ரமனாக  வளர்ந்தார். அவரைப் போல கடலிலிருந்து நீரை உறிந்து கொண்டு வானத்தில் மழை மேகங்கள் எழுந்தன

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு       - திருகுறள் 610

மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக வின்னையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.

சிலப்பதிகாரத்தில்...

இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும் அவனது வாமன அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.

மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே - (சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)

திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன் தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான். மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க, இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.

இப்பாடல் மூலம்  வாமன அவதார நிகழ்வானது பண்டைய தமிழர் அறிந்து , பதிவு செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்தவர்கள் இன்று மலையாளிகளாக மாறிபோனார்கள்.. இதற்குக்காரணம் நாம் நம் இனத்தின் பெருமையையும், மொழியின் பெருமையையும் அறியாது இருந்ததே!