சாத்தான் இறைவனின் போட்டியாளனா?
சில மத நம்பிக்கைகளில், இறைவனுக்கு எதிரான காரியங்கள் சாத்தானால் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், இப்புவியினை மட்டுமே சாத்தான் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது என்றும், கடவுள் பணியில் ஈடுபடுகின்றவர்களை இந்த சாத்தான் திசை திருப்பவும் தடுக்கவும் முயலும் என்றும் கூறி வருகின்றனர்.
இத்தகைய தகவல்கள் இறைவனின் உன்னத நிலை மற்றும் அவரது உன்னத சக்தியைப் பற்றிய ஞானமில்லா தன்மையினை வெளிப்படுத்துகின்றது. இந்த உலகில் ஏற்படும் தீமைகளுக்கு முறையான தத்துவ விளக்கம் வழங்க இயலாதபோது புனையப்பட்ட கற்பனையான கதையே சாத்தான் எனப்படும் கருத்து.
இறைவன் சர்வ வல்லமை படைத்தவர்
இறைவன் சர்வ சக்திகளையும் பெற்றவராவார்; அவருக்கு சமமாகவோ அவரை விட உயர்வாகவோ அவருக்கு போட்டியாகவோ யாரும் இருப்பதில்லை, அவ்வாறு இருப்பதும் இயலாத ஒன்று. அவ்வாறு யாரேனும் கடவுளுடன் போட்டியிடும் அளவிற்கு திறன் படைத்தவராக அல்லது உயர்ந்தவராக இருப்பாரேயாயின், அந்தக் கடவுள் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்பது அடிப்படை அறிவாகும்.
எனவே, அவரால் கட்டுப்படுத்த முடியாமல் தீமைகளை இழைப்பவர் என்று யாரும் இருக்க முடியாது. கடவுள் தனக்கு எதிராக ஒருவனைப் படைத்தார், அவன் கடவுளை எதிர்த்து அனைவரையும் ஒன்று கூட்டி புரட்சி செய்கிறான் என்று கூறுபவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்! ஒருவன் புரட்சி செய்யும்போது, அவனை ஒன்றும் செய்ய இயலாது கையைப் பிசைந்து கொண்டிருக்க கடவுள் ஒன்றும் திறமை இல்லாதவர் அல்லவே.
நமக்கு துன்பம் வருவது ஏன்?
கடவுளுக்கு போட்டியாக சாத்தான் என்று யாரும் இல்லை. அப்படியெனில், மக்களுடைய துயரத்திற்கு காரணமாக இருப்பது என்ன?
ஒவ்வொரு ஜீவனுக்கும் தனித் தன்மை உள்ளது, கொஞ்சம் சுதந்திரமும் உள்ளது. இறைவன் பூரண சுதந்திரம் கொண்டவர், அவரது அம்சங்களான ஜீவன்களுக்கு சிறிதளவு சுதந்திரம் உள்ளது.
இந்த ஜீவராசிகள் அனைவரும் கடவுளைப் போன்று நிரந்தரமானவர்கள். இறைவனுக்குப் பல்வேறு சேவைகளைப் புரிய வேண்டிய ஜீவன்கள், சுயமாக அனுபவிக்க விரும்பும் வேளையில், கருணைக் கடலாக விளங்கும் இறைவன், இவர்களுக்கென தனி இடத்தினை உருவாக்கி இவர்களை அங்கே அனுப்புகின்றார். இறைவனே உன்னத அனுபவிப்பாளர், நாம் அவரால் அனுபவிக்கப்பட வேண்டியவர்கள். இதுவே நமது உண்மையான நிலை. இதனை மறுத்து சுயமாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் வந்த பொழுதிலே, அத்தகைய எண்ணம் தவறு என சுட்டிக் காட்டுவதற்காகவும், நம்மைத் திருத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இடமே இந்த ஜடவுலகம்.
இந்த ஜடவுலகம் பார்ப்பதற்கு தனித்து செயல் புரிவது போன்று தோன்றினாலும், இந்த ஜட சக்தியினை இறைவனே இயக்குகின்றார்.
ஜீவன்களை மீண்டும் தன்னகத்தே அழைக்க விரும்பும் பகவான், ஜட சக்தியினை துன்பம் நிறைந்ததாகவும் தற்காலிக மானதாகவும் படைத்துள்ளார். ஜடவுலகில் நாம் துன்புறுவதற்கு இதுவே இறுதி காரணம். நாம் இவ்வுலகில், எந்த உடலை எடுத்தாலும் அது தற்காலிகமானதே, எந்த மகிழ்ச்சியைப் பெற்றாலும் அது தற்காலிகமானதே. எனவே, துன்பங்கள் என்பது நம்மைத் திருத்துவதற்கான தண்டனையே தவிர, கடவுளுக்கு எதிராக நிகழக்கூடியவை அல்ல.
ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்தின்படி குணங்களில் சிக்கி மாயையினால் வசப்படுத்தப்பட்டுள்ளனர், இதில் இறைவனின் சதியும் இல்லை, இறைவனது போட்டியாளரது (சாத்தானது) சதியும் இல்லை–ஜீவனின் ஆசையே காரணமாக அமைந்துள்ளது. மாயை என்பது இறைவனின் கட்டுப்பாட்டில் செயல்படும் சக்தியே தவிர, இறைவனுக்கு போட்டியாக செயல்படும் சாத்தான் அல்ல. தங்களின் உள்ளே ஏராளமான ஜட ஆசைகளைக் கொண்டுள்ள ஒருவன், தன்னுள்ளே ஏராளமான குப்பைகளை வைத்துக் கொண்டு, உண்மையான தத்துவ நிலைகளை அறிந்திடாமல், சாத்தானின் மேல் கல்லெறிவதும் யாரேனும் ஒருவனை சாத்தான் எனக் குறிப்பிடுவதும் உசிதமான செயல்கள் அல்ல.
நமது துன்பத்திற்கு நாமே காரணம் என்பதை உணர்ந்து, கிருஷ்ணரிடம் சரணடைவோமாக. அவ்வாறு நாம் சரணடைந்தால், மாயை உடனே நம்மைவிட்டு விலகிவிடும். மாயையை வெல்வது மிகவும் கடினம் என்றபோதிலும், கிருஷ்ணரிடம் சரணடைவோர் அதனை எளிதில் வெல்லலாம் என்று பகவத் கீதை (7.14) நமக்கு உறுதியளிக்கின்றது. எனவே, வீண் குழப்பங்கள் ஏதுமின்றி, மற்றவர் மீது பழி போடாமல், பக்தித் தொண்டில் ஈடுபடுவோமாக.
No comments:
Post a Comment