Friday, 7 September 2018


பகவான் கிருஷ்ணரிடமிருந்து ஆரம்பித்த ஜல்லிக்கட்டு !


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் அடக்கி பேரழகியான சத்யாவை திருமணம் செய்த இந்நிகழ்ச்சி, தெய்வத்திரு .. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின்கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கோசல நாட்டு மன்னனின் பெயர் நக்னஜித், அவன் மாபெரும் தர்மவான், வேத நெறிப்படி நடப்பவன். அவனின் மகளான சத்யா பேரழகி. நக்னஜித்தின் மகளாகையால் நக்னஜிதி என்றும் அழைக்கப்பட்டாள். நக்னஜித் தன்னிடமிருந்த பலம் வாய்ந்த ஏழு காளைகளை அடக்கக்கூடிய வீரனுக்கு மட்டுமே தன் மகளை மணம் முடிக்க விரும்பினார். ஆயினும், அரச வம்சத்தினர் எவராலும் அக்காளைகளை அடக்க முடியவில்லை

எனவே, சத்யாவை எவராலும் திருமணம் செய்ய முடியவில்லை. மிகவும் பலம் வாய்ந்த அந்த காளைகள், எந்த அரச குமாரனையும் தம்மிடம் அணுகவிடவில்லை. பல அரச குமாரர்கள் கோசல நாட்டிற்கு வந்து காளைகளைப் பணிய வைக்க முயன்று தோற்றுப் போனார்கள். இந்தச் செய்தி எங்கும் பரவி கிருஷ்ணரை எட்டியது. சத்யாவை மணக்க ஏழு எருதுகளை அடக்க வேண்டுமென்ற செய்தி கிருஷ்ணரை அடைந்தபோது, அவர் கோசல நாட்டிற்குச் செல்ல தயாரானார். பல வீரர்கள் புடைசூழ கிருஷ்ணர் கோசல நாட்டின் பகுதியான அயோத்தியாவிற்கு அரச முறையில் பயணம் மேற்கொண்டார்.

சத்யாவைக் கரம் பிடிக்க கிருஷ்ணர் வந்திருப்பதை அறிந்த கோசல நாட்டு மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தகுந்த மரியாதைகளுடன் அவர் கிருஷ்ணரைச் சிறப்பாக வரவேற்றார். கிருஷ்ணருக்கு தகுந்த ஆசனமளித்து தக்க முறையில் உபசரித்தார். கிருஷ்ணரும் தம் வருங்கால மாமனாரான கோசல மன்னருக்கு உரிய மரியாதைகளை வழங்கினார்.

லக்ஷ்மியின் கணவரான கிருஷ்ணரே தன்னை மணம்புரிய வந்திருப்பதையறிந்த நக்னஜிதி மகிழ்ந்தாள். அவரை மணம்புரிய வேண்டுமென்று வெகு நாள்களாக ஆவல் கொண்டிருந்த அரசகுமாரியான நக்னஜிதி தன் ஆவல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விரதங்களை அனுஷ்டித்து வந்தாள். அவள் எண்ணலானாள்: “நான் நற்செயல்கள் புரிந்து கிருஷ்ணரை என் கணவராக அடைய வேண்டுமென்று உண்மையாகவே விரும்பியிருந்தால், கிருஷ்ணர் என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகட்டும்.”

அவள் மனதிற்குள் கிருஷ்ணரிடம் பிரார்த்திக்கலானாள்: “புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்னிடம் பிரியம்கொள்ளுமாறு செய்வது எப்படியென்பதை நான் அறியேன். அவர் எல்லாருக்கும் எஜமானர். அவருக்கு இரண்டாவது ஸ்தானத்தை வகிக்கும் லக்ஷ்மி உட்பட, சிவபெருமான், பிரம்மதேவர் மற்றும் பல தேவர்களும் பகவானை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக பகவானும் சிலசமயங்களில் பூமியில் அவதரிக்கிறார். அவர் மிகவும் உன்னதமானவர் என்பதால் அவரை திருப்தி செய்வது எப்படியென்பது எனக்குத் தெரியவில்லை.” புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் காரணங்களுக்கு அப்பாற்பட்ட தம் கருணையை பக்தரிடம் காட்டினால் அல்லாது அவரைத் திருப்திப்படுத்துவது சாத்தியமல்ல என்று அவள் எண்ணினாள். சேவை மனப்பான்மையுடன் பணிந்து நடப்பது மட்டுமே பகவானைத் திருப்திப்படுத்துவதற்கு ஒரே வழியாகும்.

பக்திமானான நக்னஜித் கிருஷ்ணர் தாமே தன் அரண்மனைக்கு வந்ததால் மகிழ்ச்சியடைந்து தனக்குத் தெரிந்த முறைகளில் தம் சக்திக்கு உட்பட்ட வகைகளில் அவரை வழிபட்டார். பகவானிடம் அவர் இவ்வாறு பிரார்த்தித்தார்: “அன்பார்ந்த இறைவனே, நீங்கள் பிரபஞ்சம் முழுமைக்கும் உடைமையாளர், உயிரினங்களின் புகலிடமான நாராயணர், நீர் தம்மில் நிறைவு பெற்றவர், ஐஸ்வர்யங்கள் நிரம்பப் பெற்றவர். எனவே, உமக்கு நான் தரக்கூடியது என்ன இருக்கிறது? நீர் திருப்தியடையும் வகையில் நான் என்ன தரக்கூடும்? அது சாத்தியமல்ல; ஏனெனில், நான் முக்கியத்துவமற்ற ஒரு பிறவி. உமக்கு சேவை செய்யக்கூடிய சக்தி என்னில் எதுவுமில்லை.”

கிருஷ்ணர் எல்லா உயிரினங்களிலும் உறையும் பரமாத்மா. எனவே, அவர் சத்யாவின் உள்ளக்கிடக்கையை அறிந்திருந்தார். மன்னன் நக்னஜித் தமக்களித்த சேவையால் அவர் திருப்தியடைந்திருந்தார். தந்தையும் மகளும் தம்முடன் நெருங்கிய உறவுகொள்ள விரும்பியது அவருக்கு திருப்தியளித்தது. அவர் புன்னகை செய்து பெருமிதம் கொண்ட குரலில் பேசினார்: அன்பார்ந்த நக்னஜித் மன்னரே, அரச பரம்பரையைச் சார்ந்து நெறிவழுவாது நடக்கும் ஒருவன் யாரிடமும்அவன் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருப்பவனாயினும்எதையும் வேண்டிப் பெறுவதில்லை

ஒரு சத்திரிய அரசன் யாரிடமும் எதையும் விரும்பிக் கேட்பதை வேத சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை. இந்த நெறியிலிருந்து தவறும் சத்திரிய அரசன் கற்றறிந்த பண்டிதர்களின் நிந்தனைக்கு உள்ளாகிறான். இருப்பினும், இந்த கண்டிப்பான நியமத்தையும் மீறி நான் உங்களிடம் உங்களுடைய அழகிய மகளின் கரத்தை வேண்டுகிறேன். நீங்கள் எமக்களித்த உயர்வான வரவேற்பிற்கு ஈடுசெய்து உங்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் நான் இதை வேண்டுகிறேன். எங்கள் குடும்பப் பாரம்பரிய வழக்கப்படி உங்களது மகளை ஏற்றுக்கொள்வதற்கு பிரதியுபகாரமாக நான் எதுவும் உங்களுக்குத் தருவதற்கு இல்லை. அவளை நான் ஏற்றுக்கொள்வதற்காக, எந்தவொரு நிபந்தனையையும் நான் ஏற்கப் போவதில்லை.”

அதாவது ஏழு காளைகளையும் அடக்க வேண்டுமென்ற நிபந்தனையைப் பின்பற்றாமல் சத்யாவைப் பெற விரும்புவதாக கிருஷ்ணர் நக்னஜித்திடம் கூறினார். கிருஷ்ணரின் பேச்சைக் கேட்ட நக்னஜித் கூறினார்: “அன்பார்ந்த இறைவா, நீர் எல்லா இன்பங்களும் ஐஸ்வர்யங்களும் தகுதிகளும் நிரம்பியவர். உமது மார்பில் லக்ஷ்மி எப்போதும் வாசம் செய்கிறாள். இவ்வாறிருக்க எனது மகளுக்கு உம்மை விடச் சிறந்த கணவர் யார் இருக்க முடியும்?

இந்த வாய்ப்பிற்காக நானும் என் மகளும் நெடுங்காலமாகப் பிரார்த்தித்து வந்திருக்கிறோம். நீர் யது வம்சத்தின் தலைவர். நான் ஏற்படுத்தியிருக்கும் போட்டியில் வெற்றியடைபவருக்கே என் மகளைத் தருவதென்று முதலிலேயே அறிவித்திருக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். எனது வருங்கால மருமகனின் வலிமையையும் அந்தஸ்தையும் அறிவதற்காக நான் இப்போட்டியை ஏற்படுத்தியிருக்கிறேன். நீர் பகவான் கிருஷ்ணர், வீராதி வீரர், நீர் எவ்வித சிரமமுமின்றி இந்த ஏழு காளைகளையும் அடக்கக் கூடியவர் என்பதை நான் அறிவேன். எந்த அரசகுமாரனாலும் இதுவரை இவற்றை அடக்க முடியவில்லை. இவற்றைப் பணியச் செய்ய முயன்றவர்களெல்லாம் அங்கங்கள் முறியப் பெற்றுத் தோற்றுப் போனார்கள். நீர் தயவுசெய்து இந்த ஏழு காளைகளுக்கும் கயிறு பூட்டி அடக்க வேண்டும். அப்போது நீர் சத்யாவின் கணவராக அறிவிக்கப்படுவீர்.”

இதைக் கேட்ட கிருஷ்ணர், மன்னர் தன் பிரகடனத்தை மாற்ற விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். எனவே, மன்னரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அவர் காளைகளுடன் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார். உடனடியாக, அவர் தம்மை ஏழு கிருஷ்ணர்களாக வியாபித்துக் கொண்டார், ஒவ்வொரு கிருஷ்ணரும் ஒரு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்.

கிருஷ்ணர் தம்மை ஏழாகப் பிரித்தது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணர் ஏற்கனவே பல மனைவியரை அடைந்திருந்தார் என்பதை நக்னஜித் மன்னரின் மகளான சத்யா அறிவாள். எனினும், அவள் கிருஷ்ணரிடம் பிரியம் கொண்டிருந்தாள். அவளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்காக அவர் ஏழு வடிவங்களில் தம்மை வியாபித்துக் கொண்டார். கிருஷ்ணர் ஒருவரேயானாலும் அவர் எண்ணற்ற உருவங்களில் வியாபிக்க வல்லவர் என்பது கருத்து. அவர் ஆயிரக்கணக்கான மனைவியரை மணந்தார். ஒரு மனைவியுடன் அவர் இருந்தபோது மற்றவர்கள் தனித்திருந்தார்கள் என்பதல்ல. அவர் தன் வியாபகங்களின் மூலம் ஒரே சமயத்தில் அனைத்து மனைவிகளுடனும் இருந்தார்.

ஏழு காளைகளையும் கிருஷ்ணர் கயிறிட்டு அடக்கியபோது அவற்றின் பலமும் பெருமையும் நொறுங்கிப் போயின. அவற்றிற்கு ஏற்பட்டிருந்த பெயரும் புகழும் உடனடியாக மறைந்தன. கிருஷ்ணர் அவற்றிற்குக் கயிறிட்டு, ஒரு குழந்தை மரத்தாலாகிய பொம்மை காளையைக் கட்டி இழுப்பது போல பலமாக இழுத்தார். கிருஷ்ணரின் மேன்மையைக் கண்ட நக்னஜித் ஆச்சரியமடைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மகளான சத்யாவை வரவழைத்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரும் அவளை ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் மிக விமரிசையாக திருமணம் நடந்தது. தம் மகளான சத்யா கிருஷ்ணரைத் தன் கணவனாக அடைந்ததில் நக்னஜித் மன்னரின் மனைவியருக்கும் மிகுந்த திருப்தி. மன்னரின் மனைவியரும் மன்னனும் அந்த சுபவேளையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

முதல் ஜல்லிக்கட்டு வீரன் கிருஷ்ணனே!

ஜல்லிக்கட்டு பற்றிக் குறிப்பிடும் முதல் தமிழ்ச்சங்கப் பாடலே கிருஷ்ணனைக் குறிப்பிடும் மர்மம் என்ன?

மாயோன் முல்லை நிலத் தெய்வம் ஆவான். ஏறுதழுவுதல் முல்லை நில பண்பாடு.
கிருஷ்ணன் ஏறுதழுவியே நப்பின்னை என்ற பெண்ணை மணந்தார் என்ற செய்தியை நம்மாழ்வார் தம் பெரியதிருவந்தாதியில் குறிப்பிடுகிறார்... அதே போல பாகவதத்தில் கிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கிய செய்தியை 'வ்ருஷப ஜில்லாப்யாம்' என்று குறிப்பிடப்படுகிறது.

சங்கத்தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் வழங்கப்பட்டுவந்தனவா?

கலித்தொகை -103 வது பாடலில் வரும் வரிகள்

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு!

இந்த பாடல் ஏறுதழுவும் வீரனை வர்ணிக்கின்றது. தோழியானவள் தலைவியிடம் இளம் காளையினை தழுவுகின்ற உன் நாயகனைப் பார். அன்றொரு நாள் கம்சனால் ஏவப்பட்ட 'கேசி' எனும் குதிரை வடிவில் வந்த அசுரனை வாய் பிழந்து கொன்றழித்த கண்ணன் கூட இவ்வாறு தான் வீரத்தை வெளிப்படுத்தினானோ? என்று தலைவனது வீரத்தையும், அழகையும் திருமாலோடு ஒப்பிடுகிறாள்.

இதன்மூலம் நாம் அறிவது யாதெனின் புராணங்கள் ஆரிய பிராமணர்களால் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட புரட்டுகளல்ல.. கிருஷ்ணனைப் பற்றிய புராணங்கள் தமிழ்மண்ணில் காலம்காலமாக வழங்கி வந்தவையே! சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இராமன், கிருஷ்ணன் முதலியோரைப் புகழும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் தமிழரது ஏறுதழுவும் கலாசாரத்தின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றது.


No comments:

Post a Comment