Thursday, 27 September 2018


கலியுகத்தில் இறைவனை அடையும் வழி

மக்கள்  மனித வாழ்க்கையின் குறிகோளாக  அதிகமா பணம் சேர்ப்பதோ, பிரபலமாவதோ அல்லது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையோ அடைய முயற்சி செய்கிறார்கள். ஆனால் இதில் கவனம் செலுத்தாமல், நான் யார் ? வாழ்வின் நோக்கம் என்ன ? நாம் ஏன் போராடுகிறோம் , துன்பப்படுகிறோம் ? மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா ?

கடவுள் இருக்கிறாரா ? கடவுளுடனான நமது உறவு என்ன ? கடவுள் யார் ? நாம் அவரை எப்படி புரிந்து கொள்வது ?  ஆகிய மிகவும் முக்கியமான கேள்விகளை பலரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். 

இந்த புதிருக்கு இப்போதைய பிரபல குருமார்களின் வார்த்தை ஜாலங்களினால் பற்பல கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்தியாவில் பல்வேறு வகையான கோவில்கள், வழிபடும் மக்கள், சடங்குகள் இவைகளெல்லாம் நம்மை குழப்பமடைய வைக்கிறது. இதற்க்கு கரணம் வேதங்களில் சிக்கலான விளக்கங்களை முறையாக புரிந்து கொள்ள முடியாததுமே முக்கிய காரணம் ஆகும்.

அணைத்து வேதங்களின் சாரமான பகவத் கீதை கூறுவது என்னவெனில், பரம புருஷர் ஒருவரே ! அவரே அனைத்திற்கும் மூலமாவர், அவரே அனைவருக்கும் செயல்பட்டுவதற்கான சக்தியை அளிக்கிறார்  என கூறுகிறது .

இதை வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் ஸ்ரீபாத ராமனுசாரியார், ஸ்ரீபாத மத்வாச்சாரியார், ஸ்ரீ சைதன்யா மகாபிரபு ஆகிய பல ஆச்சரியர்களாலும் நமக்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்கள். அதாவது கடவுள் ஒருவரே ! அவரது பெயர் கிருஷ்ணர்.  பிற அனைவருமே அவருடைய சேவகர்கள் என்கிற உண்மையை வெளிப்படுத்தினார்கள்.

ஸநாதன கோஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம், ஒவ்வொர் உயிர்வாழியின் உண்மைநிலை (ஸ்வரூபம்) என்ன என்று வினாவிய போது, உயிர் வாழியின் ஸ்வரூப, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதே என்று அவர் பதிலளித்தார். பகவான் சைதன்யரின் இந்த கூற்றை ஆய்ந்து நோக்கினால், ஒவ்வொரு உயிர்வாழியும் மற்றொரு உயிருக்கு சேவை செய்வதில் எப்போதும் ஈடுபட்டுள்ளதை நம்மால் எளிதாகக் காண முடியும். ஓர் உயிர்வாழி மற்ற உயிர்வாழிகளுக்கு பல்வேறு விதங்களில் சேவை செய்கிறான், அவ்வாறு செய்வதால் வாழ்வை அனுபவிக்கிறான். சேவகன் எஜமானுக்கு சேவை செய்வதைப் போல, கீழ் நிலை மிருகங்கள் மனிதனுக்கு சேவை செய்கின்றன. ஒருவன் தனது எஜமானருக்கு சேவை செய்ய, அவர் அடுத்தவருக்கும், அடுத்தவர் மற்றொருவருக்கும் என தொடர்ந்து ஒவ்வொருவரும் சேவை செய்து கொண்டுள்ளனர்.

உண்மையில், நாம் முழுமுதற் கடவுளுடன் சேவையின் மூலம் உறவு கொண்டுள்ளோம். முழுமுதற் கடவுள் பரம அனுபவிப்பாளராவார். உயிர்வாழிகளான நாம் அவரது சேவகர்கள். நாம் அவரது ஆனந்திற்காகப் படைக்கப்பட்டுள்ளோம், பரம புருஷ பகவானின் அந்த நித்திய இன்பத்தில் பங்குபெற்றால் நாமும் மகிழ்ச்சியுடையவராக ஆவோம்.


கலியுகத்தில் இறைவனை அடையும் ஒரே வழி !

நமது வேத சாஸ்திரங்களில் ஒவ்வொரு யுகத்திற்கும் இறைவனை அடையும் வழிகளை குறிப்பிடப்பட்டுள்ளது ! முக்கியமாக, கலியுகத்தில்  முக்திற்க்கான வழி என கலிசந்திரன உபநிஷத்து, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை தெளிவாக கூறுகிறது.

க்ருதே யத் தியாயதோ விஷ்ணும் த்ரேதாயாம் யஜதோ மகை I
துவாபரோ பரிச்சர்யயாம் கலௌ தத் கீர்த்தநாத் II


சத்திய யுகத்தில் விஷ்ணுவை தியானிப்பதாலும், த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதாலும், துவாபர யுகத்தில் பகவானுக்கு திருவடி சேவை செய்வதாலும் பெறக்கூடிய பலன்களை, கலியுகத்தில் ஹரி நாமத்தை உச்சரிப்பதாலேயே பெறமுடியும்" -ஸ்ரீமத் பாகவதம் 12.3.52

இதி ஷோடசக நாம் நாம் கலி கல்மஷ நாஷனம்
தத: பரதரோவய: சர்வே வேதேஷு  திரிக்ஷயதே

"16 வார்த்தைகளடங்கிய ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் கலியின் கேடுகளை எதிர்த்து அளிக்கும் சக்தி வாய்ந்தது" - கலி சந்திரன உபநிஷத்

இப்படி வேத இலக்கியங்களில் கலியுகத்திற்க்கான வழியை தெளிவாக கூறுகிறது ! ஆனால், சிலர் பல யோக முறைகளையும் இந்த கலியுகத்தில் செய்ய முயலுகிறார்கள். அவைகள் குண்டலினி யோகம், அஷ்டாங்க யோகம்,... இப்படி பற்பல யோக முறைகளை கையாளுகிறார்கள்.

ஆனால், இந்த யோக சூத்திரத்தினை நமக்கு அருளிய முனிவரான பதஞ்சலி என்பவரது கருத்துப்படி யோகம் 8 நிலைகளை உடையது!

யோகம் என்ற சொல்லுக்கு இணைத்தல் அல்லது இணைப்பதற்கான வழிமுறை என்று பொருள். கடவுளையும் ஜீவனையும் இணைப்பதற்கான வழிமுறை யோகம் என்று அழைக்கப்படுகிறது.

யோகப் பயிற்சியில் பல வகைகள் உண்டு, அவற்றில் நான்கு வகையான பயிற்சிகள் மிகவும் பொதுவானவை:

(1) கர்மயோகம் :  பல்வேறு சடங்குகளின் மூலமாக கடவுளுடனான உறவை புதுப்பிக்க உதவுவது

(2) ஞான யோகம்: ஆழ்ந்த சாஸ்திர அறிவினாலும் தவத்தினாலும் கடவுளை அறிய உதவுவது

(3) அஷ்டாங்க யோகம்: எட்டு நிலைகளைக் கொண்ட பயிற்சியின் மூலமாக கடவுளை அறிய உதவுவது

(4) பக்தி யோகம்:  தூய அன்பின் மூலமாக கடவுளை அறியச் செய்வது.
                                               
யோக சூத்திரத்தை அருளிய பதஞ்சலியின் அஷ்டாங்க யோகம் தற்காலத்தில் சாத்தியமா ?

அதில் மொத்தம் எட்டு அங்கங்கள் உள்ளன. அவையாவன:

(1) யம    : செய்யக்கூடாத செயல்களைத் தவிர்த்தல்
(2) நியம : செய்ய வேண்டிய செயல்களைச் செய்தல்
(3) ஆசன        : பல்வேறு ஆசனங்களை பயிற்சி செய்தல்
(4) பிராணாயாம:மூச்சுப் பயிற்சி
5) ப்ரத்யாஹார: புலனின்பப் பொருள்களிலிருந்து விலகுதல்
(6) தாரணா    : மனதை ஒருமுகப்படுத்துதல்
(7) த்யான       : தியானம் செய்தல்
(8) ஸமாதி       : ஸமாதி நிலையை அடைதல்.

அஷ்டாங்க யோகத்தின் முக்கிய குறிக்கோள் தியானத்தின் மூலமாக பரமாத்மாவை உணர்வதே, இதன் எட்டு நிலைகளும் படிப்படியாக பயிற்சி செய்யப்பட வேண்டியவை. அதை விட்டுவிட்டு வெறும் பிராணாயாமத்தையும், ஆசனத்தையும் மட்டும் பயிற்சி செய்தால், அது பரமாத்மாவை உணர உதவாது, உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டுமானால் உதவலாம். வேறு விதமாகக் கூறினால், யோகப் பயிற்சிக்கு உதவாது, உடற்பயிற்சிக்கு வேண்டுமானால் உதவலாம்.

உண்மையில், ஆசனத்தையும் பிராணாயாமத்தையும் பயிற்சி செய்வதற்கு முன்பாக, பன்னிரண்டு வகையான யம, மற்றும் பன்னிரண்டு வகையான நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். (ஸ்ரீமத் பாகவதம் 11.19.34-35) உதாரணமாக, மாமிசம் உண்ணும் பழக்கத்தை உடையவர்கள் ஆசனத்தையும் பிராணாயாமத்தையும் பயிற்சி செய்யும் தகுதியை முற்றிலுமாக இழந்து விடுகின்றனர். தினமும் மூன்று வேளை வயிறு முட்ட உண்பவர்கள், காலை 7 மணி வரை தூங்குபவர்கள், நினைத்தபோதெல்லாம் உடலுறவில் ஈடுபடுபவர்கள் என இன்றைய சராசரி மனிதர்களில் பலரும் அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்வதற்குத் தகுதியற்றவர்கள். (பகவத் கீதை 6.16-17) இவ்வாறு இருக்கும் பட்சத்தில், வெறும் உடல் ஆரோக்கியத்திற்காக சில ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் மேற்கொள்பவர்கள், அதனை யோகப் பயிற்சியாக நினைப்பது தகுமோ!

அஷ்டாங்க யோக வழிமுறையானது இன்றைய உலகத்திற்கு பொருத்தமற்றதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்ய விரும்புபவர்கள் முதலில் தனிமையான புனித ஸ்தலத்திற்குச் சென்று அங்கு அதனைப் பயில வேண்டும் என்று பகவத் கீதை (6.11) கூறுகின்றது. அது மட்டுமின்றி, கட்டுப்படுத்தப்பட்ட மனதுடன், குளிர், மழை, வெப்பம், காட்டு விலங்குகள் என எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, முழு பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்து தியானம் செய்ய வேண்டும். (பகவத் கீதை 6.14) 

மனம், வார்த்தை, செயல் ஆகிய மூன்றிலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லா இடங்களிலும் ஒருவன் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அஷ்டாங்க யோகப் பயிற்சியின் மூலமாக பக்குவநிலையை அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். தற்போதைய கலி யுகத்தில் அத்தகைய பயிற்சிகளுக்குத் தேவையான ஆயுளும் நம்மிடம் இல்லை, உடல் பலமும் இல்லை, மன பலமும் இல்லை, சூழ்நிலையும் இல்லை, முறையாக கற்றுக் கொடுப்பவரும் இல்லை.

கிருஷ்ணர் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என நான்கு யோகங்களையும் விளக்குகிறார். இருப்பினும், பக்தி யோகமே தன்னால் பரிந்துரை செய்யப்படுகிறது என்றும், அதுவே எல்லா யோகப் பயிற்சிகளிலும் உயர்ந்தது என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார். (பகவத் கீதை 18.55, 6.47) மற்ற யோகப் பயிற்சிகளை அவர் விளக்கியதன் குறிக்கோள், பக்தி யோகத்தின் உயர்நிலையை தெளிவுபடுத்தவே.


அஷ்டாங்க யோகத்தின் மூலமாக மனதைக் கட்டுப்படுத்துதல் நிச்சயம் கடினமே என்பதை ஒப்புக் கொண்டபோதிலும், முறையான பயிற்சியினாலும் பற்றின்மையினாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். அந்த முறையான பயிற்சி என்பது என்ன?


காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற் போல மருத்துவர்கள் வெவ்வேறு மருந்துகளை சிபாரிசு செய்வதுபோல, சாஸ்திரங்களும் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற் போல வெவ்வேறு யோக வழிமுறைகளை சிபாரிசு செய்கின்றன. ஸத்ய யுகத்திற்கு அஷ்டாங்க யோகத்தையும், திரேதா யுகத்திற்கு யாகங்களையும், துவாபர யுகத்திற்கு கோயில் வழிபாட்டையும் சிபாரிசு செய்துள்ள சாஸ்திரங்கள், கலி யுகத்தில் நாம ஸங்கீர்த்தனமே தீர்வு என்றும் இதுவே எளிமையானது என்றும் இதுவே யுக தர்மம் என்றும் போற்றுகின்றன.

இக்கருத்து ஸ்ரீமத் பாகவதம் (12.3.52), விஷ்ணு புராணம் (6.2.17), பத்ம புராணம் (உத்தர காண்டம் 72.25), பிருஹன் நாரதீய புராணம் (38.97), ஸ்கந்த புராணம், கலி ஸந்தாரண உபநிஷத் என எல்லா சாஸ்திரங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலத்திற்குத் தகுந்த யோகப் பயிற்சியை மேற்கொள்வதால் யோகத்தின் பக்குவநிலையை அடைய முடியும். காலத்திற்கு ஒத்துவராத அஷ்டாங்க யோகத்தை ஏற்று காலத்தை விரயம் செய்யக் கூடாது.

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
 ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தின் வடிவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரித்தல் சாலச் சிறந்ததாகும். இவ்வாறு உச்சரித்து, கிருஷ்ணரைப் பற்றி கேட்டு, அவருக்குத் தொண்டு செய்தல் பக்தி யோகம் எனப்படுகிறது.

மஹா மந்திர தியானம் என்ன ?

சமஸ்க்கிருதத்தில் 'மன்' என்பது மனம், 'த்ரா' என்பது விடுவித்தல் ஆகும். மந்திரம் என்பது நம் மனதை உலக பௌதீக விஷயங்களிலிருந்து விடுதலை செய்யும் உன்னத ஒலி ஆகும்

வேதங்களில் நாம் பற்பல மந்திரங்களை கேள்விப்பட்டுளோம். அந்த ஒவ்வொரு மந்திரமும் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவுகிறது. ஆனால், மஹா மந்திரம் என்பது எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்தது ஆகும். வேத இலக்கியங்களில் 'ஹரே கிருஷ்ணா' மந்திரத்தை மட்டுமே  மஹா மந்திரம் என குறிப்பிடுகிறது. இந்த மந்திரத்தின் பொருள், ' கிருஷ்ணா ! என்னை தங்களுடைய பக்தி தொண்டில் ஈடுபடுத்தி, என வாழ்வை புனிதப்படுத்துங்கள்' என்பதே ஆகும்.

'ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே" 

என்கிற கலிசந்திரன உபநிஷத்தில் கூறப்பட்ட 16 வார்த்தைகள் அடங்கிய மந்திரமே 'மஹா மந்திரம்' என அழைக்கப்படுகிறது ! இம் மஹாமந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினமும் உச்சரித்து /தியானம் செய்து வருவதே 'மஹாமந்திர தியானம்' எனப்படும். 

இதன் மூலம் உங்களுடைய மன சஞ்சலங்கள், மன சோர்வு, மன அழுத்தம், மன குழப்பம் ,தீய சிந்தனை,  பாவ விளைவுகள், சண்டை சச்சரவுகள், .. ஆகிய அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி 'ஹரே கிருஷ்ணா'  மந்திரத்திற்கு இருப்பதால் இதனை  'மஹா மந்திரம்' என வேதங்கள் அழைகிறது.

இம் மஹாமந்திரத்தை சொல்ல கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. எந்த நேரமும், எந்த இடத்திலும்,எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம். மேலும், இந்த மஹாமந்திரத்தை எந்த மதத்தினரும், இனத்தவரும்,மொழியினரும்,ஜாதியினரும், எந்த நாட்டவரும்  சொல்லலாம்.

 உத்தரிக்கும் முறை :

நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ணா மஹாமந்திரத்தை உச்சரித்து வந்தால் மனதில் உள்ள வேண்டாத விஷயங்கள் எல்லாம் படிப்படியாக விலகி அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையை பெறலாம்.


ஜெப மாலையில் 108 மணிகள் உள்ளன. அதில் நடு நாயகமாக ஆதார மணி உண்டு. வலது கை விரல்களில் ஆள்காட்டி விரலை உபயோகப்படுத்தாமல், அதற்க்கு அடுத்ததான நடுவிரலில் மலையை வைத்து ஆதார மணிக்கு அடுத்த மணியிலிருந்து தொடங்கவும், ஒவ்வொரு ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை சொன்னவுடன் கட்டை விரலால் ஒவ்வொரு மணியையும் உள் பக்கமாக நகர்த்தவும். ஆதார மணிக்கு முந்திய மணியோடு 108 மணிகள் நிறைவு பெரும்.

மேலும், ஹரே கிருஷ்ண மந்திரம் ஜெபம் செய்யும் முன்பு இந்த பஞ்ச தத்வ மந்திரத்தை ஒரு தடவை சொல்லவும்.

‘ஜெய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்தியானந்தா
ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாஸாதி கௌர பக்த விருந்தா' 


இவ்வாறு 108 மணிகள் சொல்லி முடித்தால் ஒரு ஜெபமாலை எனப்படும். இப்படி உங்களால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஜெப மாலைகள் செய்யமுடியுமா செய்யலாம்.

ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் மகிமைகள் :

பகவானின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமைகள் குறித்து வேத சாஸ்திரங்களில் சில :

"யாகங்களில் நான் ஜெப யாகமாக இருக்கிறேன்" - பகவத் கீதை 10.26

"16 வார்த்தைகளடங்கிய ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் கலியின் கேடுகளை எதிர்த்து அளிக்கும் சக்தி வாய்ந்தது" - கலி சந்திரன உபநிஷத்

“சத்திய யுகத்தில் விஷ்ணுவை தியானிப்பதாலும்,த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதாலும், துவாபர யுகத்தில் பகவானுக்கு திருவடி சேவை செய்வதாலும் பெறக்கூடிய பலன்களை, கலியுகத்தில் ஹரி நாமத்தை உச்சரிப்பதாலேயே பெறமுடியும்" -ஸ்ரீமத் பாகவதம் 12.3.52

" ஒரு சிங்கம் கர்ஜிக்கும் பொது பிற விலங்குகள் பயத்தால் ஓடுவதை போல, ஒருவர் பகவானின் நாமத்தினை உதவியத்த நிலையிலோ, விருப்பமில்லாமலோ அல்லது எப்படி உச்சரித்தாலும் அவனுடைய பாவ வாழ்வின் விளைவுகள் அவரை விட்டு நீங்குகிறது" - கருட புராணம்  

"ஹரி நாமம், ஹரே நாமம், ஹரே நாமம், இக்கலியுகத்தில் நற்கதியடைய இதைவிட வேறுவழியில்லை ! வேறுவழியில்லை! வேறுவழியில்லை !" - பிருஹண் நாரதீய புராணம்


இஸ்கான் – (International Soceity for Krishna Conciousness) ISCON

அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம்

கலியுக தர்மமான பகவான் கிருஷ்ணரின் நாம ஜெபங்களை உககெங்கும் பரப்புவதற்க்காகவும், ஜாதிமத பேதமல்லாமல் எல்லோருக்கும் கிருஷ்ண பக்தியை பரப்புவதற்க்காகவும், பகவத் கீதை & ஸ்ரீமத் பாகவதம் ஆகிய வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் கனவை நனவாக்க 1966இல் சுவாமி ஸ்ரீல பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்ட இஸ்கான் இன்று உலகமெங்கும் சுமார் 600 மேற்பட்ட கோவில்கள் & யோகா மையங்களுடன் அறிய பல தொண்டுகளை மக்களுக்கு செய்து வருகிறது.

கிருஷ்ண பக்தி இயக்கம் பகவத்கீதை உண்மையுருவில் எனும் இந்நூலை ஆதாரமாகக் கொண்டதால், நேர்மையானதும் சரித்திரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் இயற்கையானதும் திவ்யமானதுமாகும். அகில உலகிலும்குறிப்பாக இளைய தலைமுறையிடையேமிகவும் பிரசித்தி பெற்று வருகிறது.