Thursday, 2 August 2018


சனாதன தர்மத்தில் - 33 கோடி தேவர்கள் கடவுள்கள் தானா ?





முதலில் ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேவதை-தேவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் வேறு. கடவுள் என்ற சொல்லால் குறிக்கப்படுபவர் வேறு.


கடவுள் உலகைப் படைக்கும் போது ஜீவாத்மாக்கள் ஜென்மாந்தரங்களில் செய்த புண்ய-பாவ கர்மங்களுக்கு ஏற்ப அவர்களுக்குப் பிறவியை அளிக்கிறான். அந்த அடிப்படையில் தேவப்பிறவி, மனிதப்பிறவி, மற்றும் விலங்குகள், பறவைகள் - இப்படி ஜீவாத்மாக்களுக்கு அவரவர்களின் கர்ம வினைகளுக்குத் தக்கபடி பிறவிகள் ஏற்படுகின்றன.


தேவதை-தேவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஜீவாத்மாக்கள் தான் அவர்கள் செய்த மிகுந்த புண்ய கர்மத்தின் காரணமாகவே அவர்கள் தேவர்களாகப் பிறவி எடுக்கிறார்கள். அவர்களுக்குரிய கர்ம வினைக்காலம் முடிந்ததும் அவர்களும் அழிந்துவிடுகின்றார்கள் அவர்களும் தேவர்களாக இருந்த காலத்தில் மோக்ஷத்துக்குரிய பாதையில் சென்றிருந்தால் மறுபடி பிறக்காமல் பரமனை அடைந்து விடுகிறார்கள். பிறவிக்குரிய கர்மங்களில் ஈடுபட்டிருந்தால் மறுபடியும் தேவனாகவோ, மனிதனாகவோ பிறக்கிறார்கள்.


மிக அதிகமாகப் புண்யம் செய்த ஜீவாத்மாக்கள் தேவர்களாகப் பிறக்கிறார்கள்.

அவர்களின் புண்ய பலனுக்கேற்ப சில உயர்ந்த சக்திகள் பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணனால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களிடம் உள்ள உயர்ந்த சக்தியால், தங்களை உண்மையோடு வழிபடுபவர்களுக்கு வேண்டிய பலன்களை அந்த தேவதைகள் அளிக்கின்றன. அந்த தேவர்களும் ஜீவாத்மாக்களே என்பதால் மோக்ஷம் தவிர்த்த மற்ற பலன்களை மட்டுமே அவர்களால் அவர்களை வழிபடுபவர்களுக்கு அளிக்க முடியும்.

தங்களுக்கு வேண்டியவற்றை அந்த தேவதைகள் வழங்கி விட்டதால், அவையே பரம்பொருள் என்று அந்த தேவதைகளின் பக்தர்கள் மயங்கி விடுகிறார்கள்.


நடைமுறை வாழ்க்கையில் நமக்குப் பல நன்மைகள் செய்த ஒரு மனிதரை அபிமானத்தால் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசுகிறோமல்லவா! அதைப் போலத்தான் படைக்கப்பட்ட ஜீவாத்மாக்களான தேவர்களைப் பரம்பொருளாகக் கருதுவதும், இப்படிப்பட்ட மயக்கங்களில் விளைந்தவைதான் சைவம், சாக்தம் முதலிய உட்பிரிவு மதங்கள்.

மேலும் அப்படிப்பட்ட மயக்கங்களில் உள்ளவர்கள் நாளடைவில் அல்லது ஜென்மாந்தரங்களில் மயக்கம் தெளிந்துநாம் வழிபடும் தேவதை பரவஸ்துவன்று. பரவஸ்து ஸ்ரீமந் நாராயணனேஎன்பதை உணர்ந்து அந்தப் பரவஸ்துவை அடையும் முயற்சியில் ஈடுபட வாய்ப்பு உண்டு. இம்மாதிரி உட்பிரிவு மதங்கள் கூட ஒருவகையில் இறுதி இலக்கை அடைய உதவும் படிக்கட்டுகள்தான். 

பரம் பொருளில்லாத ஒரு தேவதையை பரம்பொருள் என்று மயங்கி வழிபடுபவன் அந்த தேவதையின் தன்மையை, சக்தியை நாளடைவில் உணர்ந்து, இறுதியில் உண்மையான பரம்பொருளை நாடி விடுவான். இது ஒருவகையில் தகுதி அடிப்படையிலான பதவி உயர்வு பெறுவதைப் போலக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment