Wednesday, 19 July 2017



நாரதர் ஒரு கோமாளியா..?


யாரேனும் ஒருவர் இரு தரப்பினரிடையே சண்டை மூட்டிவிட்டால், அவரைநாரதர்என்று அழைத்து கிண்டல் செய்வது இந்தியாவில் வழக்கம். நாரதர் என்றவுடன் பலரும் கூறுவது: “, நாரதரா, கலகம் மூட்டுபவர்தானே.” ஆனால் அவர்கள் அனைவரும் நாரதரை தவறாக புரிந்து வைத்துள்ளனர்.

மாபெரும் பக்தரும் தெய்வீக ரிஷியுமான நாரதரை ஒரு கோமாளியாக சித்தரித்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளதே இதற்கு காரணமாகும். புராணங்களையும் இதிகாசங்களையும் முறையாகப் படிப்பவர்கள் யாரும் நாரதரை கேலிக்கு உரிய நபராக கனவிலும் நினைக்க மாட்டார்கள். புராணக் கதைகளை திரைப்படமாக வெளியிட்டு பணம் சம்பாதிக்க விரும்பும் மனசாட்சியற்ற தயாரிப்பாளர்கள் தங்களுடைய திரைப்படங்களில் நவரசங்களும் வேண்டும் என்ற எண்ணத்தில், யாரேனும் ஒருவரை நகைச்சுவை கதாபாத்திரமாக காட்ட விரும்பி, ஏதோ காரணத்தினால் எங்கேயோ ஆரம்பிக்கப்பட்டு, நாரதர் நகைச்சுவை கதாபாத்திரமாக ஆகிவிட்டார்.



தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இருப்பதே இத்தகைய மூடத்தனத்திற்கு வழிவகுக்கின்றது. அதனால், அவரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் எல்லா குழப்பங்களையும் மக்கள் மனதிலிருந்து விலக்கும் என்னும் நோக்கத்துடன், இக்கட்டுரை  அர்ப்பணிக்கப்படுகிறது.

நாரதர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, சாதாரண ரிஷியோ சாதுவோகூட அல்ல, சராசரி விஷ்ணு பக்தரும் அல்ல. அவர் பகவான் விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரும் பிரம்மதேவரின் மானஸ புத்திரரும் ஆவார். அதாவது, சாதாரண மனிதர்களைப் போல ஆண் பெண் உறவினால் பிறந்தவர் அல்ல அவர், மாறாக, பிரம்மதேவரின் பக்குவமான சிந்தனையினால் அவரது மனதிலிருந்து தோன்றிய உத்தம புருஷர். பௌதிக வாழ்க்கை என்னும் இருண்ட கிணற்றினுள் மூழ்கிக் கிடக்கும் கட்டுண்ட ஆத்மாக்களை உய்விப்பதற்காக, அவர் மூவுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஹரி பக்தியை பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் அவர் மிகச்சிறந்த சமூக சேவகர் என்றும் பண்பாளர் என்றும் போற்றப்படுகிறார்.



முக்தி பெற்ற தளத்தில் நித்தியமாக வீற்றுள்ள நாரதர், அவரது தந்தை பிரம்மதேவரால்கூட எளிதில் செல்லவியலாத, வைகுண்ட லோகத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்லும் தகுதி பெற்றவர். வேத மந்திரங்களை ஆகாயத்திலிருந்து கிரகிக்கக்கூடிய விஷேச தன்மை பெற்ற ரிஷிகளில் ஒருவராக நாரதர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார், ஸாம வேதத்திலும் இவர் சிறப்பிடம் பெறுகிறார். பிரபஞ்சங்களின் பல்வேறு இடங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் விஷேச தூதராகவும் நாரதர் செயல்படுகிறார். இசைக்கருவியான வீணையைக் கண்டுபிடித்தவரும் இவரே.

பகவான் கிருஷ்ணரின் அவதாரங்கள் ஆறு வகைப்படுவர், அவற்றில் ஒன்று சக்தி-ஆவேஷ அவதாரம். பகவானால் சில குறிப்பிட்ட காரியங்களுக்காக விஷேசமாக சக்தியளிக்கப்பட்டு அவதரிக்கும் ஜீவன்கள், சக்தி-ஆவேஷ அவதாரம் என்னும் பிரிவினுள் அடங்குவர். அதன்படி, நாரதர் பகவான் விஷ்ணுவின் மிக முக்கியமான சக்தியான பக்தி சக்தியினால் சக்தியளிக்கப்பட்டு, சக்தி-ஆவேஷ அவதாரமாக இப்பிரபஞ்சத்தில் அவதரித்துள்ளார். பகவானின் அவதாரங்களைப் பட்டியலிடும் ஸ்ரீமத் பாகவதம் அப்பட்டியலில் ஸ்ரீ நாரதரையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 தர்மத்தை அறிந்துகொள்ளுதல் மிகவும் சிரமமானதாகும். மிகச்சிறந்த ரிஷிகள், தேவர்கள், சித்தர்கள், அசுரர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், மனிதர்கள் என எவராலும் அறிய முடியாத தர்மத்தின் இரகசியங்களை மஹாஜனங்களின் பாதையினைப் பின்பற்றுவதால் புரிந்துகொள்ள முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் உட்பட எல்லா சாஸ்திரங்களும் எடுத்துரைக்கின்றன. அத்தகு மஹாஜனங்களாக ஸ்ரீமத் பாகவதம் பன்னிரன்டு பெயர்களைப் பட்டியலிடுகின்றது. மனித குலத்திற்கு வழிகாட்டும் அந்த பன்னிருவரில் ஸ்ரீ நாரதரும் ஒருவர்.

 தனது முந்தைய பிறவியில் ஒரு வேலைக்காரியின் மகனாக இருந்த நாரதர், பக்தியிலும் ஞானத்திலும் சிறப்பு பெற்ற பக்திவேதாந்திகளின் சங்கத்தினால் தூய்மையடைந்து, இறையுணர்வில் பக்குவநிலையைப் பெற்றார். அந்த பக்குவநிலையினால் அவர் தனது அடுத்த பிறவியில் முக்தி பெற்ற ஜீவனாக, நாரதர் என்னும் பெயரில், பிரம்மதேவரின் புதல்வராக அவதரித்துள்ளார். எவ்வளவோ தேவ ரிஷிகள் இருக்கும்போதிலும் நாரதரின் ஸ்தானம் மிகமிக விஷேசமானது என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து அறியலாம். தேவர்ஷீணாம் நாரத:, “தேவ ரிஷிகளில் நான் நாரதன்என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாரதரை தன்னுடைய விசேஷ வைபவமாக குறிப்பிடுகிறார் (பகவத் கீதை 10.26).


நாரதரால் முக்காலத்தையும் உணர முடியும். உதாரணமாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விருந்தாவனத்தில் சந்தித்த நாரதர், கிருஷ்ணர் வருங்காலத்தில் நிகழ்த்தவிருந்த லீலைகளை எடுத்துரைத்தார். மேலும், கிருஷ்ணர் துவாரகையில் வசித்தபோது, அவரது 16,000 ரூபங்களையும் நாரதரால் தரிசிக்க முடிந்தது என்பதும் அவரது சிறப்பினைக் காட்டுகிறது.



இவ்வெல்லா காரணங்களினால், நாரதர் சில நேரங்களில்பகவான்என்று சாஸ்திரங்களில் விளிக்கப் படுவதை நாம் காண்கிறோம்.

எண்ணற்ற மக்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் தஞ்சமடையச் செய்யும் உன்னத காவியமான ஸ்ரீமத் பாகவதம் தோன்றுவதற்கு ஸ்ரீ நாரதரே மிக முக்கிய காரணமாவார். ஸ்ரீல வியாஸதேவர், பல்வேறு வேதங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்களைத் தொகுத்திருந்தபோதிலும், பகவான் கிருஷ்ணர் மற்றும் அவரது பக்தித் தொண்டின் உன்னத நிலையினைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்காத காரணத்தினால், திருப்தியற்றவராக காணப்பட்டார். அச்சமயத்தில், வேத ஞானத்தின் கனிந்த பழமும் பரமஹம்சர்களால் சுவைக்கப்படுவதுமான ஸ்ரீமத் பாகவதம் என்னும் மாபெரும் பொக்கிஷத்தை மக்களுக்கு வழங்கும்படி ஸ்ரீல வியாஸதேவருக்கு அறிவுறுத்தியவர் ஸ்ரீ நாரதரே.

 அதுமட்டுமின்றி, நாரதர் வழங்கியுள்ள நாரத பக்தி சூத்திரம் என்னும் நூல் பக்தியை எடுத்துரைக்கும் மிக அற்புத நூல்களில் ஒன்றாகும், மேலும், நாரத ஸ்மிருதி, நாரதீய ஷிக்ஷா, ஸங்கீத மகரந்தம் ஆகியவையும் நாரதரால் இயற்றப்பட்டவையாகும். நாரத பரிவிரஜக உபநிஷத், நாரதீய புராணம், நாரத பஞ்சராத்திரம் ஆகியவையும் நாரதரால் தூண்டப்பட்ட வேத இலக்கியங்களாகும்.

நாரதரிடம் பல்வேறு விசேஷ தன்மைகள் உள்ளபோதிலும், அந்த விசேஷ தன்மைகளுக்கெல்லாம் விசேஷ தன்மையாக விளங்குவது அவரது ஹரி பக்தி பிரச்சாரமே. பகவத் கீதையில் (18.68-69)பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப் பற்றி பிரச்சாரம் செய்யும் பக்தனே தனக்கு மிகப் பிரியமானவன் என்றும், அவனைக் காட்டிலும் பிரியமானவன் வேறு யாருமில்லை என்றும் தெளிவாகக் கூறுகிறார். மூவுலகமும் சுற்றித்திரிந்து பகவத் பக்தியை பிரச்சாரம் செய்யும் நாரதர் அத்தகு மிகமிக பிரியமான பக்தராக விளங்குகிறார். நாரதர் தன்னுடைய பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு தூய பக்தர்களை உருவாக்கியுள்ளார். நாரதரால் பிரச்சாரம் செய்யப்பட்டு மனம் மாறியவர்களின் எண்ணிக்கை ஏராளம். பிரகலாதர், துருவன், வியாஸர், வால்மீகி, வஸுதேவர், யுதிஷ்டிரர், பிராசீனபர்ஹிஷத், பிரசேதர்கள், சித்ரகேது, சது:-ஸனர்கள், ஹர்யஷ்வஸ் ஆகியோர் நாரதரால் பிரச்சாரம் செய்யப்பட்டவர்களில் பிரதானமானவர்கள்.

 தனது சீடர் வியாஸதேவரால் வழங்கப்பட்ட வேத நூல்களின் மூலமாக (குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்தின் மூலமாக) நாரதர் இன்றும் சாதாரண மனித சமுதாயத்தினருக்கும் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், நாரதரிடமிருந்து வரும் பரம்பரையில் தஞ்சமடையும் ஒவ்வொரு பக்தரும் ஒருவிதத்தில் நாரதரால் பிரச்சாரம் செய்யப்படுபவர்களே. இன்று பக்தித் தொண்டினை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் நாரதருக்கு நன்றிக் கடன்பட்டவர்களே.

ஹிரண்யகஷிபுவின் மனைவியான கயாதுவை பாதுகாப்பாக வைத்தது மட்டுமின்றி, அவளது கருவிலிருந்த பிரகலாதருக்கு பாகவத தத்துவத்தினையும் நாரதர் எடுத்துரைத்தார். பிற்காலத்தில், பிரகலாதர் மாபெரும் பக்தராக உருவெடுத்ததற்கு, அவர் தனது தாயின் கருவில் இருந்தபோது நாரதரிடமிருந்து கேட்ட உபதேசங்களே காரணமாகும்.


நாரதரின் பிரச்சாரம் எல்லா வர்ணங்களையும் ஆஷ்ரமங்களையும் தாண்டியதாகும். உதாரணமாக, பிராமணரான வியாஸர், சத்திரியனான துருவன், சூத்திரனான செருப்புத் தொழிலாளி, பிரம்மச்சாரியான ஹர்யஷ்வஸ், கிருஹஸ்தரான சித்ரகேது, துறவியான பிரசேதர்கள் மட்டுமின்றி, அசுர குலத்தவரான பிரகலாதர், வேடனான வால்மீகி ஆகியோருக்கும் நாரதர் பிரச்சாரம் செய்துள்ளார்.

 குடி போதை, பெண்களின் சங்கம், மற்றும் செல்வச் செழிப்பினால் மயங்கியிருந்த குபேரனின் இரு மகன்களான நளகுவேரன், மணிக்ரீவன் ஆகியோருக்கு நாரதர் சாபமளித்ததை நாம் பாகவதத்தில் காண்கிறோம். தவறு செய்த அவர்களுக்கு சாபம் வழங்கியதன் மூல மாக, நாரதர் அவர்களுக்கு மிகவுயர்ந்த வரத்தினையும் வழங்கினார். அதன்படி, கிருஷ்ணரின் பால்ய லீலைகள் நடைபெற்ற கோகுலத்தில் நந்த மஹாராஜரின் இல்லத்தில் மரங்களாக மாறிய அவ்விரு சகோதரர்களும், கிருஷ்ணரின் பால்ய லீலைகளை நேரில் காணும் நற்பேற்றினைப் பெற்றனர். “கிருஷ்ணரால் விடுவிக்கப் படுவீர்கள்என்று நாரதர் உறுதியளித்திருந்த காரணத் தினால், தனது பக்தனின் வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, கிருஷ்ணர் அவர்கள் இருவரையும் விடுவித்தார். அனைவருக்கும் நன்மை செய்யும் நாரதரின் தன்மையையும் பகவானையே இணங்கச் செய்யும் நாரதரின் பக்தியையும் இதில் காணலாம்.

தெய்வீகச் செய்தியாளரான நாரதர் இடையறாது மூவுலகமும் சுற்றி தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுக்கு வேண்டிய தகவல்களை வழங்கி வருகிறார்; அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் நண்பனாக, குருவாக மற்றும் வழிகாட்டியாக திகழ்கிறார். நரம் பரமாத்மா விஷ்யாகம் ஜ்ஞானம் தததி இதி நாரத:, “கடவுளைப் பற்றிய ஞானத்தை வழங்குபவர் நாரதர்என்று ஷப்த-கல்பத்ரும கூறுகிறது.



வைஷ்ணவ அபராதம் வேண்டாம்

முன்னரே கூறியபடி, பகவத் கீதையின் பிரச்சாரகர்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள். பகவான் கிருஷ்ணர் தன்னை ஏளனம் செய்பவர்களையும் தன்னுடைய எதிரிகளையும்கூட மன்னித்துவிடுவார். ஆனால் தன்னுடைய பக்தர்களை நிந்திப்பவர்களை அவர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். எனவே, அதுபோன்ற குற்றங்களிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


இவ்வளவு சிறப்புமிக்க நாரதரை ஏளனம் செய்வது மாபெரும் குற்றமாகும். ஏதேனும் ஓரிடத்தில் யாரேனும் ஒருவர் கலகம் செய்தால், அவரைநாரதர் வேலை செய்கிறார்என்று கூறுவது சற்றும் பொருத்தமற்ற முட்டாள்தனமான கூற்றாகும். ஏதோ காரணத்தினால், முன்னரே கூறியபடி மனசாட்சியற்ற திரைப்பட இயக்குநர்களினால், மக்கள் நாரதரைப் பற்றி தவறான அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நீங்களும் அத்தகு குற்றத்தை செய்தவராக அல்லது செய்பவராக இருந்தால், தயவுசெய்து தங்களுடைய மனதினை மாற்றிக்கொள்ளுங்கள். நாரதரின் மகத்துவத்தை உணருங்கள், அதன் மூலமாக மாபெரும் பாவமான வைஷ்ணவ அபராதத்திலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


சிலர்நாரதர் கலகம் நன்மையில் முடியும்என்றும், “நாரதர் ஒரு கலகப் பிரியர்என்றும் முடிவு செய்கின்றனர். ஆனால் இவ்வாறு கூறுபவர்களில் பெரும்பாலானோர் நாரதரின் மகத்துவத்தைப் பற்றி சற்றும் அறியாத மூடர் களாவர். பகவானின் தெய்வீக லீலைகளில் விசேஷ இடத்தைப் பெற்றுள்ள ஸ்ரீ நாரதர், அந்த லீலைகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு மிகவும் சாதுரியமான முறையில் சில செயல்களைச் செய்வதுண்டு. ஆயினும், மஹரிஷியான நாரதரின் எல்லாச் செயல்களுக்கு பின்னும் மாபெரும் அர்த்தங்கள் பொதிந்து காணப்படுகின்றன. இதனை அறியாதவர்கள் அச்செயல்களை கலகம்என்று நினைக்கின்றனர்.

 அப்படியே அச்செயல்களை கலகம் என்று எடுத்துக் கொண்டால்கூட, தெய்வீக நிலையில் நிலைபெற்றுள்ள நாரதரின் தெய்வீக கலகத்திற்கும் பௌதிக உணர்வில் ஊறித் திளைத்துள்ள சாதாரண மக்களின் கலகத்திற்கும் பெருத்த வேற்றுமை உண்டு, இது தங்கத்திற்கும் இரும்பிற்கும் உள்ள வேற்றுமையைப் போன்றதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் சில நேரங்களில் சில சாதுரியமான காரியங்களை நிகழ்த்துவதுண்டு. கிருஷ்ணர் தெய்வீகமானவர் என்பதால், அவரது சாதுரியமான காரியங்கள் பக்தர்களால் ரசிக்கப்பட்டும் போற்றப்பட்டும் வருகின்றன. அதுபோலவே, தெய்வீக ரிஷியான நாரதரின் செயல்களும் பக்குவம் பெற்ற நபர்களால் போற்றப்பட்டு வருகின்றன. பக்குவமற்ற சில அயோக்கியர்கள் நாரதரின் செயல்களை சாதாரண கலகம் என்று நினைக்கின்றனர்.

பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் நாரதரை ஏளனம் செய்வோரை என்னவென்று சொல்வது? முட்டாள்கள், அயோக்கியர்கள், அறிவிலிகள் போன்ற வார்த்தைகளால் அவர்களைச் சாடினால்கூட, அது போதுமானதாக இருக்காது. மாபெரும் மஹாஜனரான நாரதர் இந்நாட்டில் அவமதிக்கப்படுவது நிச்சயம் இந்நாட்டினரின் முழு முட்டாள்தனத்தையே காட்டுகிறது.


எனவே, நாரதரைப் பற்றிய அறியாமையிலிருந்து விடுபட்டு, நாரதரின் பெருமைகளை உணர்ந்து, நாரதர் வகுத்த பாதையினைப் பின்பற்றி, நாமும் பகவான் நாராயணரின் திருவடிகளை அடைவோமாக.

Tuesday, 18 July 2017



திருவள்ளுவர் கூறும் வேத கடவுள்கள் !


சங்க தமிழ் நூல்களான புறநானூறு, அகநானூறு, பத்து பாட்டு, சிலப்பதிகாரம்,... இப்படி எல்லா நூல்களிலும் வேத கலாச்சாரமும், வேத இறைவனான விஷ்ணுவை தான் புகழ்கிறது.

இது போலவே தான், திருவள்ளுவரும் தனது நூலான திருக்குறளில் பகவான் விஷ்ணு / கிருஷ்ணரை மையமாக வைத்தே அவரது கடவுள் வாழ்த்து பழல்களை எழுதியுள்ளதை நாம் இங்கே பார்க்கலாம்....

மேலும், இதை போல் வேத கடவுள்களான விஷ்ணு (திருமால்), லட்சுமி (திருமகள்), யமன், இந்திரன், பிரம்மா ஆகிய வேத கடவுள்களை தனது நூலில் குறிப்புடுகிறார் !

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.



திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–


அடி அளந்தான்திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
 அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)
 ஆதி பகவன் – 1
 யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083
 பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை
 பிரம்மாஉலகு இயற்றியான் 1062
 இந்திரன் – 25
 கண்ணன்தாமரைக்கண்ணான் 1103
 லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,
 மூதேவிமாமுகடி 617, 936
 பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258



திருமால் (விஷ்ணு ) பற்றி வள்ளுவர்:


அடி அளந்தான்திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

 அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)



1 . குறள் 1103 - இன்பத்துப் பால் - அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்


தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?   
-
பொருள்:  'தாமரை கண்ணணுடைய உலகம் தான் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ'

அவர் வேறு எந்த தேவரையும் தேவ உலகத்தையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை.

எல்லோரையும்விட உயர்தவரான தாமரை கண்களையுடைய கிருஷ்ணரே ஆதிபகவான் என்பதை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர் இந்த குறளை படைத்திருக்கிறார்.


2.  குறள் 610 - பொருட்பால் - அதிகாரம்: மடியின்மை


மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு


மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக வின்னையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.


3.  பகவான் கண்ணனை பற்றி கூறுகிறார்...


அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை


பகவான் கண்ணனை பற்றி கூறுகிறார்...

தவைவனுக்காக காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும்புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன் ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.



லக்ஷ்மி பற்றி வள்ளுவர்:

(குறள் - 617, 179, 519, 920 )

1.  குறள் 617 - பொருட்பால் - அதிகாரம்: ஆள்வினையுடைமை


மடி உளாள் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.


பொருள்:: “ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்”.


2.  குறள் 179 - அறத்துப்பால் - அதிகாரம்: வெஃகாமை


அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.

பொருள்:: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.


3.  குறள் 519 - பொருட்பால் - அதிகாரம்: தெரிந்து வினையாடல்


             வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.

பொருள்: தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.


4.  குறள் 920 - பொருட்பால் - அதிகாரம்: வரைவில் மகளிர்

             இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

பொருள்: உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.


இந்திரன் பற்றி வள்ளுவர்:


குறள் 25 - அறத்துப்பால் - அதிகாரம்: நீத்தார் பெருமை

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
               

பொருள்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்



யமன் பற்றி வள்ளுவர்:

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083


குறள் 269 - அறத்துப்பால் - அதிகாரம்: தவம்


            கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

பொருள்: தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்



பிரம்மா பற்றி வள்ளுவர்:

பிரம்மாஉலகு இயற்றியான் 1062


குறள் 1062 - பொருட்பால் - அதிகாரம்: இரவச்சம்


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.     

 பொருள்: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.



எனவே, திருவள்ளுவர் கூறும் பகவான் விஷ்ணு / கிருஷ்ணரே என்பதை இதன் மூலம் அறியலாம். மேலேம், இவர் தனது திருக்குறளில் வேத கடவுள்களை மட்டுமே தான் சொல்கிறார் !