Friday, 12 January 2018

நரகாசுரன் தமிழனா?




பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்ற நன்னாளை நாம் அனைவரும் தீபாவளியாகக் கொண்டாடுகிறாம். நரகாசுரன் நாட்டின் எந்தப் பகுதியைச் சார்ந்தவன்? அவன் ஒரு தமிழனா?

வருணனின் குடையையும் அதிதியின் குண்டலங்களையும் திருடிய நரகாசுரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். மேலும், பல்வேறு நாடுகளைச் சார்ந்த 16,100 இளவரசிகளைக் கடத்தி வைத்து துன்புறுத்தினான். எனவே, கிருஷ்ணர் ஸத்யபாமாவுடன் சென்று போர் புரிந்து, இறுதியில் தமது சுதர்ஸன சக்கரத்தின் மூலமாக அவனைக் கொன்றார்.

நரகாசுரனின் தலைநகரம் பிராக்ஜோதிஸபுரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன (ஸ்ரீமத் பாகவதம் 10.59.2, 12.12.39). இவ்விடம் இன்றைய அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஒரு பகுதியாகும்.

நரகாசுரனின் வரலாறு அஸ்ஸாம் மாநிலத்தில், குறிப்பாக பிரபலமான காமாக்யா கோயிலை உள்ளடக்கிய காமரூபம் என்ற பகுதியில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காமாக்யா தேவியை திருமணம் செய்துகொள்ள விரும்பி நரகாசுரன் செய்த விசித்திர செயல்கள் யாவும் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய வரலாற்றில் நன்கு அறியப்படும் கதைகளாகும். கௌஹாத்திக்குத் தெற்கிலுள்ள ஒரு மலை நரகாசுரனின் பெயரில் அங்கே அமைந்துள்ளது.

நரகாசுரனின் மகனான பகதத்தனை பிராக் ஜோதிஸ புரத்தின் மன்னனாக மஹாபாரதத்தில் பல இடங்களில் காண்கிறோம். பிற்காலத்தில் கௌரவர்களின் சார்பாக அவன் குருக்ஷேத்திர யுத்தத்தில் கலந்து கொண்டான் என்பதையும் போரின் பன்னிரண்டாவது நாளில் அர்ஜுனனால் கொல்லப் பட்டான் என்பதையும் மஹாபாரதம் அறிந்தவர்கள் அறிவர். பிற்காலத்தில் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்த மூன்று வம்ச மன்னர்களும் நரகாசுரனின் வழிவந்தவர்களாக அறியப்படுகின்றனர்.


உண்மை இவ்வாறு இருக்கையில், தமிழ்நாட்டில் ஸநாதன தர்மத்தின் கொள்கைகளை மறுத்துப் பேச வேண்டும் என்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, கொஞ்சம்கூட அறிவின்றி செயல்படும் சில முட்டாள்கள், நரகாசுரன் தமிழ்நாட்டைச் சார்ந்தவன் என்றும், தீபாவளிப் பண்டிகை தமிழர்களின் (அல்லது திராவிடர்களின்) மீதான ஆரியரின் படையெடுப்பு என்றும் பிதற்றுகின்றனர்.

உண்மையை அறியாத சில மக்களும் நரகாசுரனை நல்லவன் என்றும், தமிழன் என்றும் நம்புகின்றனர். என்னே விந்தை!

பல முறை ஒரு பொய்யைத் திருப்பிச் சொல்லி அதனை மக்கள் மனதில் பதித்து விடுகின்றனர்.

நரகாசுரன் தமிழன் என்றால், அவன் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?
சாஸ்திரங்கள் அவனது இடம் பிராக்ஜோதிஸ புரம் என்று கூறுகின்றன. அஸ்ஸாம் பகுதியில் அந்த இடம் தொன்றுதொட்டு நரகாசுரனின் இடமாக அறியப்பட்டு வருகிறது. அதுபோன்ற இடம் தமிழகத்தில் உண்டா என்றால், நிச்சயம் இல்லை. சாஸ்திர ஆதாரமும் கிடையாது, வரலாற்று ஆதாரமும் கிடையாது.

ஆனால் ஒன்றுமறியா அப்பாவி மக்களை ஏமாற்ற வாய்க்கு வந்ததை உளறுகின்றனர். இதில் பெரிய வேடிக்கை என்னவெனில், நரகாசுரனைத் தமிழனாகக் கூறும் கேடு கெட்ட முட்டாள்கள் கிருஷ்ணர் என்று ஒருவர் வாழ்ந்ததையே ஏற்க மறுப்பவர்களாக (அதாவது, நாஸ்திகர்களாக) இருக்கின்றனர். கிருஷ்ணர் என்று ஒருவர் வாழவே இல்லை; ஆனால் அவர் நரகாசுரனைக் கொன்றார்.” இந்த முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது.

இஃது ஒருபுறம் இருந்தாலும், கன்னிப் பெண்களைக் கடத்திச் சென்று அடைத்து வைத்து துன்புறுத்துபவன் யாராக இருந்தாலும், அவனை யாம் எதிர்க்க வேண்டியது அவசியம். அவன் தமிழன் என்பதால், அவனை எதிர்ப்பதைக் கைவிட்டு ஆதரிக்கத் தொடங்கினால், அஃது எந்த விதத்தில் நியாயம்?

நரகாசுரனை ஆதரிப்பவர்கள் தங்களது மகள் அல்லது தங்கைமார்களை யாரேனும் ஒரு தமிழன் (வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்) கடத்திச் சென்று துன்புறுத்தினால், அவ்வாறு துன்புறுத்தியவனை நல்லவனாக நினைத்துக் கொண்டாடுவார்களா? சிந்திப்பீர்!

யார் எதைக் கூறினாலும் அதை நம்புவதற்கு ஓர் அப்பாவிக் கூட்டம் உள்ளது.
16,100 பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நரகாசுரனைக் கொன்று மக்களுக்கு மகிழ்ச்சியூட்டிய கிருஷ்ணரை எண்ணி தீபாவளியைக் கொண்டாடுவோமாக.


No comments:

Post a Comment