Friday, 29 December 2017

தையில் புது வருடமா?










சங்கத் தமிழ் நூல்களில்தைஎன்பது திருநாளாகச் சொல்லப்படவில்லை. அது ஒரு விழாவும் அல்ல. மார்கழியும், தையும் மேற் சொன்னாற்போல் பாவை நோன்பு நோற்கும் காலம். ஆவணியில் துவங்கிய மழைக் காலம், (சேர நாடும் சேர்ந்த அன்றைய தமிழகத்தில்) கார்த்திகை மாதம் வரையில் நன்கு பெய்யும். காட்டாற்று வெள்ளமாக நீர் நிலைகள் நிரம்பியும், குழம்பியும் இருக்கும். மார்கழி மாதத்தில் மழை பெய்வது நின்று, ஆற்று நீர் தெளிந்து ஆங்காங்கே குளம்போல் விளங்கும். மார்கழிக்கு எதிர்புறத்தில் உள்ள புனர்பூசம் நட்சத்திரம் குளம் எனப்படும். அதனாலும், மார்கழி மாதத்தைக் குளம் என்பர். (இந்த செய்தியை பரிபாடல் 11 -இல் காணலாம்.)

தை பிறக்கும் போது, தண்ணீர் நன்றாகவே தெளிந்து விடும். இயற்கையையும், நீர் நிலைகளையும் தெய்வமாக நினைத்த அந்நாள் மக்கள், ‘தவத்தை நீராடுதல்என்பதை ஒரு தவமாகவே செய்தனர்.

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

தாயும் மகளுமாக பனி நீரில் மூழ்கி எழுந்து, ஆங்கே நதிக்கரையில் ஆதிரையோனுக்குச் செய்யும் ஹோமத்தீயை வலம்வந்து, முன்பிறவியில் செய்த தவப்பயனோ இன்று நாம் இருப்பதும் இந்த வைகையில் குளிப்பதும் என்று வியந்து, கண்ணாடி போலத் தெளிவாகத் தெரியும் நீரே, எம் வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நீ தைத்துக் கொள்ளும் வண்ணம் தெளிவாக இருக்கிறாய், தை நீரே, நீ தான் எங்கள் வேண்டுதல்களை வாங்கிக்கொள்ளத் தக்கவள் என்று கூறுவர்

நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்என்மாரும்”, என்கிறது பரிபாடல் 11.

மார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம். அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி, மக்கள் எண்ணங்களை தைத்துக் கொள்கிறாள். தை- என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது. தை என்றால், தைத்தல் என்று பொருள். தைத்தல், பின்னுதல், பொருத்துதல், சேர்த்தல் என்னும் பொருளிலேயே வருகிறது. கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் தம் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. இந்த மாதத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மாதம், தைக்கப்பட்ட எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்தார் போல கண்ணாடி போல் இருக்கும்ஆடிமாதம் என்றாயிற்று.

தையில், நீரில் கண்ட பிம்பம், ஆடியில்கண்ணாடியில் நேர் முகமாகத் தெரிய வேண்டும். தையில் உள் வாங்கிய வேண்டுதல்கள், ஆடிக்குள் நிகழ்ந்து விட வேண்டும். இதுவே தவம். நீரின் கண் நின்றும் செய்யும் தவம், மற்றும், நெருப்பின் கண் நின்று (ஹோம குண்டம் சுற்றி) செய்யும் தவம், ஆக பாவை நோன்பு முடித்து, “தவத்தை நீராடி” (பரி பாடல் 11), புலனடக்கி, காக்கும் தெய்வமான ஆற்று நீரின் கண், தங்கள் வேண்டுதல்களைக் கொட்டி செய்யப்படுவதேதை- நீராடல்ஆகும்.

இதன் ஆரம்பம் தை மாத முதல் தினமல்ல. மார்கழி பௌர்ணமியிலேயே ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய பின்புலம் கொண்ட தை மாதம் எங்ஙனம் வருடப் பிறப்பாகும்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியுள்ளனரே என்பார்கள். யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு. அப்படிக் காத்திருக்கும் கன்னியர் எல்லோருக்குமே திருமணம் ஆகி விடுவதில்லை.

காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம் மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான், “நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?” (கலித் தொகை 59)

இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று நக்கல் பேச்சு பேசுகிறான். இப்படியெல்லாம் அக வாழ்கையின் ரசனை ததும்ப ஓடும் கருத்துக்களைக் கொண்டதால் அந்த மாதமே வருடப் பிறப்பு என்று எப்படி சொல்லலாம்?

மேலும் தையை தொடர்ந்து வரும், மாசி மாதம் எப்படிப்பட்டது? ‘மாகூர் திங்கள்என்னும் பதிற்றுப் பத்து பாடல் (59), மாக்கள் குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிகொள்ளும் மாசி மாதம், மாகூர் மாசியாகும் என்கிறது. அந்தப் பாடலில், பாணன் எப்பொழுதுதான் குளிர் நீங்கி, வெயில் வரும் எனக் காத்திருக்கிறான். பொதுவாக, விடியலுக்கு முன்னாலேயே பாணர்கள் அரசனைக் காணக் கிளம்பி விடுவர். அப்பொழுதான், வெயிலுக்கு முன் அரண்மனை சென்று அடைய முடியும். ஆனால் மாசி மாதத்தில் விடிகாலையில் கிளம்ப முடிவதில்லை. குளிரும் பனியும் அதிகம். மேலும் மாசித் தன்மை உடையதால் அது மாசி என்று உரை காரர் கூறுகிறார். மாசி என்றால் மேகம் என்றும் பொருள். மேகமே இறங்கி வந்தாற்போல், பனி மூட்டம் நிலத்தின் மீது பரவி இருப்பதால் அது மாசி என்றாயிற்று.

நெடு நல் வாடையிலும், (6) ” மாமேயல் மறப்ப, மந்தி கூறஎன்று கூறுகிறது. மாசி மாதம், மாடுகள் குளிர் காரணமாக மேயச் செல்லாது மந்தி உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கும். “தையும் மாசியும் வையகத்து உறங்குஎன்று பதிற்றுப் பத்து உரைகாரர் கூறுகிறார். வையம் உறங்கும், தைமாதமா வருடப் பிறப்பு என்னும் முக்கியத்துவம் பெற முடியும்?

பொங்கல் திருநாளும், வருடப் பிறப்பும். பொங்கல் திருநாள் தமிழர் திருநாள். அதனால் அன்றே வருடப் பிறப்பு கொண்டாடுவது தக்கது என்று ஒரு வாதம். தமிழர் திருநாள் என்று, தமிழருக்கே உள்ள பிரத்யேகமான பண்டிகை என்று ஒன்று இருக்குமானால் அது கார்த்திகை தீபம் மட்டும்தான். அதைத் தமிழர் தவிர வேறு யாரும் கொண்டாடுவதில்லை. நான் அறிந்த அளவிலேயே, மூன்று இடங்களில் அகநானூறில் கார்த்திகை தீபத்தை எவ்வாறு பழந்தமிழர் கொண்டாடினர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகை பற்றி சொல்லப்படவில்லை.
மக்கள் பொங்கலாடுவர்எல்லாப் பண்டிகையிலும்.

பூவும், புகையும், பொங்கலும் சொரிந்துகடவுளை வணங்கி, இந்திர விழாவில் கொண்டாடினர் என்று சிலம்பு கூறுகிறது. இன்றைக்கும், எந்த விசேஷ நாளிலும் அம்மனுக்குப் பொங்கலிடுவர். தையில் மட்டும் அல்ல, மார்கழியிலேயே பொங்கல் பொங்குதல் ஆரம்பித்து விடுகிறது.

அறுவடையைக் கொண்டாடிப் பொங்கலிடுவர். புது அரிசியைப் பொங்கலிட்டுப் படைத்து விட்டுதான் உண்பர். புது அரிசி உண்பதற்கு நேரம் காலம் பார்த்துதான் சமைத்து உண்ண வேண்டும். இதற்கென்றே சோதிட விதிகள் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று, நாடு முழுவதுமே மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.ஆனால் பொங்கலாடுதல் என்று ஒரு சொல்லாட்சி தமிழில் உண்டு. “பெய்து புறன் தந்து பொங்கலாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போலஎன்று 6 -ஆம் பதிற்றுப் பத்தில், 5 -ஆம் பாடலில், காக்கைப் பாடினியார், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிச் சொல்கிறார்.

பொங்கலாடுதல் என்றால், நன்கு பெய்து ஓய்ந்த மேகமானது, பஞ்சினைப் போல வெண்மையாக, பரவி, விரிந்து, பொங்கி, வானத்தின் மேலே போய் நிற்கும். அதைப் போல் சேரமானும், நன்கு சிறப்பாக வாழ்ந்து, விரிந்து, உயர்ந்து, பரந்து பொங்கலாடுவது போல் பல்லாண்டுகள் வாழ்கிறான்.

நன்கு வாழ்ந்து, மனம் நிறைந்து, மகிழ்ந்து, நல்ல பலன் தந்த மேகம் பஞ்சு போல் பரவிப் பொங்கியதைப் போல இருத்தல் பொங்கலாடுதல் ஆகும். திருப்தியான அறுவடை செய்துகிடைத்த அரிசியைக் களைந்து போட்டபின், வெண்மையாகப் பொங்கும் அந்த உணவும், அதனால் பொங்கல் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். மன நிறைவு ஒரு முக்கிய காரணம் என்பதால், விழாக்களிலும், பண்டிகையிலும், அறுவடை முடிந்த பின்னும், பொங்கலிடுதல் வழக்கமாக இருந்திருக்கின்றது.

கரும்பும் அதே போல் தான். இந்நாளில் தைப் பொங்கல் பொழுதுகளில்தான் கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களைப் பார்த்தால், கரும்பு வருடம் முழுவதும் விளைந்த பயிர் என்பது புலனாகிறது. கரும்பும், பூவும் இல்லாமல் ஒரு விழாவும் கிடையாது. இது பற்றிய செய்திகள் பதிற்றுப்பத்து, புறநானூறு முதலியவைகளில் உள்ளன.

எனவே பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை என்று சொல்லி வருடப் பிறப்பை அன்று கொண்டாடுவது சரியல்ல.


 https://indianhistoriography.wordpress.com/2010/01/17/கருணாநிதியின்-புத்தாண்ட/

No comments:

Post a Comment