Saturday 4 November 2017

கடவுள் / இறைவன் என்பது என்ன ? அது யார் ?




கடவுள் என்ற சொல் எல்லாவற்றையும் கடந்து நிற்கக் கூடிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பரம சத்தியத்தை அதாவது பரம்பொருளைக் குறிக்கும் அப்படிப்பட்ட பரவஸ்து ஒன்றாகத் தான் இருக்கமுடியும்.

ஒன்றுக்கு மேற்பட்டு இருக்க முடியாது. அந்த ஒன்றேயான பரவஸ்து தான் ஸர்வவல்ல செயல்திறன் மிக்க கடவுள்.

மக்கள் யார் யாரை எல்லாம் வழிபடுகிறார்களோ அவர்கள் எல்லாம் கடவுள் ஆகிவிட முடியாது.

வேதத்தில் பல தேவதைகளைப் பற்றிய துதிகள் வருகின்றன வேள்விகளிலும் பல தேவதைகள் துதிக்கப்படுகிறார்கள். நாட்டிலும் மக்கள் பல்வேறு தேவதைகளுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்கிறார்கள்.

அதனால் ஸநாதந தர்மத்தில் (இந்துமதத்தில்) பல கடவுள்கள் இருப்பதால் பலரின் கருததாக உள்ளது.

முதலில் ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவதை-தேவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் வேறு.
கடவுள் என்ற சொல்லால் குறிக்கப்படுபவர் வேறு.

கடவுள் உலகைப் படைக்கும் போது ஜீவாத்மாக்கள் ஜென்மாந்தரங்களில் செய்த புண்ய-பாவ கர்மங்களுக்கு ஏற்ப அவர்களுக்குப் பிறவியை அளிக்கிறான். அந்த அடிப்படையில் தேவப்பிறவி, மனிதப்பிறவி, மற்றும் விலங்குகள், பறவைகள் - இப்படி ஜீவாத்மாக்களுக்கு அவரவர்களின் கர்ம வினைகளுக்குத் தக்கபடி பிறவிகள் ஏற்படுகின்றன.

தேவதை-தேவர்கள் என்று சொல்லப்படுபவர் களும் ஜீவாத்மாக்கள் தான் அவர்கள் செய்த மிகுந்த புண்ய கர்மத்தின் காரணமாகவே அவர்கள் தேவர்களாகப் பிறவி எடுக்கிறார்கள்.

அவர்களுக்குரிய கர்ம வினைக்காலம் முடிந்ததும் அவர்களும் அழிந்துவிடுகின்றார்கள் அவர்களும் தேவர்களாக இருந்த காலத்தில் மோக்ஷத்துக்குரிய பாதையில் சென்றிருந்தால் மறுபடி பிறக்காமல் பரமனை அடைந்து விடுகிறார்கள்.

பிறவிக்குரிய கர்மங்களில் ஈடுபட்டிருந்தால் மறுபடியும் தேவனாகவோ, மனிதனாகவோ பிறக்கிறார்கள்.

பாவம்-புண்ணியம் - என்ற இருவகைக் கர்ம வினைத்தளைகளிலிருந்தும் யார் முழுமையாக விடுபடுகிறார்களோ அவர்களே பிறவியில்லாப் பெருவாழ்வு என்று சொல்லக்கூடிய மோக்ஷத்தை அடைகிறார்கள் மோக்ஷத்தை அடைந்தவர்கள் மறுபடி பிறப்பதில்லை.

ஜீவாத் மாக்கள் கர்ம வினைகளால் ஏற்படும் பிறவித்தளையிலிருந்து விடுபட்டு பரமாத்மாவை சென்றடைந்து மறுபடி பிறக்காத நிலையை அடைந்திருப்பதுதான் ஒவ்வொரு ஸநாதந தர்மத்தவரின் வாழ்க்கை லட்சியமாக இருக்க வேண்டும் என்பதே ஸநாதந வைதிக மதத்தின் மையக்கருத்து.

ஸநாதந மதம் சொல்லும் இறுதி இலக்கு இதுதான் இதை அடைய பற்றற்ற மனத்தோடு பற்றற்ற பரம்பொருளை வழிபடுதல் வேண்டும்.

தேவர்களும் பரமாத்மா-பரம்பொருளால் படைக்கப் பட்டவர்கள்தான். அவர்களுக்கும் முடிவு உண்டு என்பதால் அவர்களை வழிபட்டால் முக்தி கிடைக்காது.

ஆகவே எல்லாவற்றுக்கும் காரணமானவனை வழிபடுவதுதான் முக்திக்கு வழி.
அதனால் தான்காரணம் து த்யேய:” என்று வேதமும் கூறிற்று.

அப்படியானால் ஸநாதந வைதிக மதத்தில் அதாவது இந்து மதத்தில் அனைத்துக்கும் காரணமான பரம்பொருள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

வேதங்கள், பிராஹ் மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துக்கள், வேத அங்கங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸ புராணங்ள் - இவை அனைத்திலும் ஸர்வ வல்லமை மிக்க செயல்திறன் கொண்ட கடவுளாக, அனைத்துக்கும் காரணமான பரவஸ்துவாகச் சொல்லப்படுபவன் ஸ்ரீமந்நாராய ணனே.

வேதத்தின் உத்தர பாகமான உபநிஷத்துக்கள் பரம் பொருளைப்ரஹ்மம்என்ற பொதுச்சொல்லால் குறிப்பிடுகின்றது அந்த ப்ரஹ்மம் ஸ்ரீமந்நாராயணனே என்பதைநாராயண:பரம் ப்ரஹ்மஎன்று வேதத்தின் நாராயணாநுவாகம் மிகத் தெளிவாகக் காட்டிவிட்டது.

ரிக்வேதத்தில் விஷ்ணு என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், வேறு சில இடங்களில் வாஸுதேவன் என்று அழைக்கப்படுபவனும் இந்த நாராயணன்தான் என்பதை
  
 “நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
  தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்” 

என்ற மற்றொரு வேதவாக்யம் கல்வெட்டாகக் காட்டிவிட்டது.
வேறு எந்த ஒரு தேவதைக்கும் இப்படிப்பட்ட பரம்பொருளுக்குரிய தன்மையை வேதங்களோ, அவற்றைத் தழுவிய இதிஹாஸ புராணங்களோ சொல்லவில்லை.

ஆகவே, ஸநாதந வைதிக மதத்தின் அதாவது இந்து மதத்தின் ஸர்வ வல்லவை மிக்க செயல் திறன் கொண்ட கடவுள் ஸ்ரீமந்நாராயணனே.

இப்படிச் சொல்லும் போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழக் கூடும்.

    “அப்படியானால் இந்து மதத்திற்குள்ளேயே சைவர்கள் சிவன்தான் பரம்பொருள் என்றும், சாக்தர்கள் சக்தி தான் பரம்பொருள் என்றும் கூறுகிறார்களே அது எப்படி?” - என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம்.
உங்கள் கேள்வி நியாயமானதே. அதாவது மிக அதிகமாகப் புண்யம் செய்த ஜீவாத்மாக்கள் தேவர்களாகப் பிறக்கிறார்கள்.

அவர்களின் புண்ய பலனுக்கேற்ப சில உயர்ந்த சக்திகள் பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணனால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தங்களிடம் உள்ள உயர்ந்த சக்தியால், தங்களை உண்மையோடு வழிபடுபவர்களுக்கு வேண்டிய பலன்களை அந்த தேவதைகள் அளிக்கின்றன.

அந்த தேவர்களும் ஜீவாத்மாக்களே என்பதால் மோக்ஷம் தவிர்த்த மற்ற பலன்களை மட்டுமே அவர்களால் அவர்களை வழிபடுபவர்களுக்கு அளிக்க முடியும்.

தங்களுக்கு வேண்டியவற்றை அந்த தேவதைகள் வழங்கி விட்டதால், அவையே பரம்பொருள் என்று அந்த தேவதைகளின் பக்தர்கள் மயங்கி விடுகிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் நமக்குப் பல நன்மைகள் செய்த ஒரு மனிதரை அபிமானத்தால் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசுகிறோமல்லவா! அதைப் போலத்தான் படைக்கப்பட்ட ஜீவாத்மாக்களான தேவர்களைப் பரம்பொருளாகக் கருதுவதும், இப்படிப்பட்ட மயக்கங்களில் விளைந்தவைதான் சைவம், சாக்தம் முதலிய உட்பிரிவு மதங்கள்.

மேலும் அப்படிப்பட்ட மயக்கங்களில் உள்ளவர்கள் நாளடைவில் அல்லது ஜென்மாந்தரங்களில் மயக்கம் தெளிந்துநாம் வழிபடும் தேவதை பரவஸ்துவன்று. பரவஸ்து ஸ்ரீமந் நாராயணனேஎன்பதை உணர்ந்து அந்தப் பரவஸ்துவை அடையும் முயற்சியில் ஈடுபட வாய்ப்பு உண்டு.

இம்மாதிரி உட்பிரிவு மதங்கள் கூட ஒருவகையில் இறுதி இலக்கை அடைய உதவும் படிக்கட்டுகள்தான்.

பரம் பொருளில்லாத ஒரு தேவதையை பரம்பொருள் என்று மயங்கி வழிபடுபவன் அந்த தேவதையின் தன்மையை, சக்தியை நாளடைவில் உணர்ந்து, இறுதியில் உண்மையான பரம்பொருளை நாடி விடுவான்.

இது ஒருவகையில் தகுதி அடிப்படையிலான பதவி உயர்வு பெறுவதைப் போலக் கொள்ள வேண்டும்.

    ஸூர்யஸ்யைவது யோ பக்த: ஸப்த ஜந்மாந்தரம் நர:
    தஸ்யைவது ப்ரஸா தேந ருத்ர பக்த ப்ரஜாயதே
    †ங்கரஸ்யைவது யோ பக்த: ஸப்த ஜந்மாந்தரம் நர:
    தஸ்யைவது ப்ரஸா தேந விஷ்ணு பக்த ப்ரஜாயதே.
    வாஸுதேவஸ்யது யோ பக்த: ஸப்த ஜன்மாந்தரம் நர:
    தஸ்யைவது ப்ரஸா தேந வாஸு தேவப்ரலீய தே!

என்ற எல்லோரும் அறிந்த ப்ரமாண வசநத்தின்படி

ஒருவன் ஏழு ஜென்மம் சூரிய பக்தனாக இருந்து, அந்த ஏழாம் ஜென்ம முடிவில் சூரியனின் அநுக்ரஹத்தால் ருத்ரபக்தனாகிறான்.

ஏழு ஜென்மம் ருத்ர பக்தனாயிருந்து அந்த ஏழாம் ஜென்ம முடிவில் ருத்ரனின் அநுக்ரஹத்தால் விஷ்ணு பக்தனாகிறான்.

ஏழு ஜென்மம் விஷ்ணு பக்தனாயிருந்து அந்த ஏழாம் ஜென்ம முடிவில் அவன் அருளால் அவனையே அடைகிறான்.
   
    ஆகவே இந்த ஸநாதந மதத்தில் வேறு ஒரு தேவதையை பரம்பொருள் என்று நினைத்துக் கொண்டிருப் பவன் கூட அந்த தேவதையின் அருளாலேயே ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்பதை ஜென்மாந்தரத்தில் உணர்ந்து அவன் மீது பக்தி செய்து முக்தியடைந்து விடுகிறான்.

    பரம்பொருள் அல்லாதவற்றைப் பரம்பொருள் என்று நினைத்து மயங்கியிருப்பவர்களின் மயக்கத்தைத் தீர்ப்பதற்காகவே பகவான் ஸ்ரீமந்நாராயணன், ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்து உண்மையை உலகுக்கு உணர்த்தினான்.

பகவான் கீதையில்

    அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்ப மேதஸாம் I
    தேவாந் தேவயஜோயாந்தி மத்பக்தா யாந்தி மாமபி II (கீதை - 7-23)

அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் மற்ற தேவதைகளிடமிருந்து அடைந்த பலன்கள் அழியக்கூடியவை.
தேவர்கள் வழிபடுபவர்கள் தேவர்களை அடைகிறார்கள்.
என் பக்தர்கள் என்னையே அடைகிறார்கள் என்று கூறுகிறான்.

மற்ற தேவர்களை வழிபடுவதற்கும் பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனை வழிபடுவதற்கும் இடையில் உள்ள வேற்றுமை மிகத் தெளிவாக இந்த கீதாச்லோகத்தில் வெளிப்படுகின்றது.

    தானே எல்லாவற்றுக்கும் காரணம் என்றும், தன்னை வழிபடுவது ஒன்றே அழிவற்ற பலனான மோக்ஷத்தைத் தரும் என்றும், வேதங்களால் சொல்லப்பட்ட பரம்பொருளே கண்ணனாக அவதரித்துத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறான்.

    யேச வேதவிதோ விப்ரா:
        யே சாத்த்யாத்ம விதோ ஜநா: I
    தே வதந்தி மஹாத்மாநம்
        கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் II
                -மஹாபாரதம் - 3.48-267

என்றபடி வேததர்மமான ஸநாதன தர்மத்தின் (இந்து மதத்தின்) ஸர்வ வல்லமை மிக்க செயல்திறன் மிக்க கடவுள் ஸ்ரீமந் நாராயணனே. / பகவான் கிருஷ்ணரே .

2 comments:

  1. லிங்கம் என்பது என்ன என்னும் கட்டுரையில் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் இடையே யார் பெரியவர் என்று ஏற்பசட்ட போட்டியில் ஜோதி பிழம்பாக சிவன் எழுந்தருளினார். அவருடைய அடி முடி கண்டுபிடிக்க முடியாததால் இருவருடைய ஆணவமும் அழிந்தது என்று சொல்லியுள்ளீர்கள்.

    ஆனால் இங்கே நாராயணனே முழுமுதற் கடவுள் என்று சொல்லியுள்ளீர்கள்.
    உண்மையில் யார் பெரிய கடவுள்?

    ReplyDelete
    Replies
    1. ////லிங்கம் என்பது என்ன என்னும் கட்டுரையில் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் இடையே யார் பெரியவர் என்று ஏற்பசட்ட போட்டியில் ஜோதி பிழம்பாக சிவன் எழுந்தருளினார். அவருடைய அடி முடி கண்டுபிடிக்க முடியாததால் இருவருடைய ஆணவமும் அழிந்தது என்று சொல்லியுள்ளீர்கள்./////////////

      அது அந்த கதையில் சிவனின் மேன்மையை உயர்த்துவதற்காக பகவான் நாராயணரால் நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகமே !

      மேலும், வேதங்களில் பகவான் நாராயணரின் விரிவங்கமே இந்த விஷ்ணு என்கிறது.


      புராணங்களில் மூன்று வகையுண்டு: ஸாத்வீக புராணங்கள், ராஜஸீக புராணங்கள், மற்றும் தாமஸீக புராணங்கள்.

      புராணங்களுக்கு மத்தியில் ஏதேனும் அபிப்பிராய பேதங்கள் இருப்பின், ஸாத்வீக புராணங்களின் கருத்தினை ஏற்க வேண்டும் என்று பத்ம புராணம்,மத்ய புராணம்,மனுவும் தனது ஸ்மிருதி சாஸ்திரத்தில் கூறுகிறார்.

      பதினெட்டு புராணங்கள் மூணு பிரிவுகளை பத்ம புராணம் (உத்தர காண்ட 236.18-21) இல் , சிவபெருமான், உமா தேவிக்கு சொல்கிறார் ...


      "ஓ அழகான பெண் (உமா தேவி):- விஷ்ணு, நாரத, பாகவத, கருடன், பத்ம மற்றும் வராக புராணங்கள் நற்குணத்தின் (சத்வ குண) புராணங்கள் என்பதை அறிய வேண்டும். ப்ரஹ்மாண்ட, பிரம்மா வைவர்த்த, மார்க்கண்டேயர், பவிஷ்ய, வாமன மற்றும் பிரம்மா ஆகியவை தீவிர (ரஜோ குண) புராணங்களாக உள்ளன. மத்ஸ்ய, கூர்ம, லிங்க, சிவ, ஸ்கந்த அக்னி ஆகியவை அறியாமை (தமோ குண) புராணங்களாக உள்ளன. "

      மேலும், மத்ஸ்ய புராணம் , 290 வது அத்தியாயத்தில் கூறுவது
      மத்ஸ்ய புராணம் (53.65, 68-69)

      " ஸாத்விக புராணங்கள் பகவான் ஹரியின் புகழையும். ரஜோ குண புராணங்கள் பிரம்மா புகழையும், தாமச குண புராணங்கள் சிவன் மற்றும் அக்னி ஆகியோர்களின் புகழை சொல்கிறது “


      அதன்படி, எல்லா புராணங்களிலும் விஷ்ணுவின் உயர்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ள சமயத்தில், மேற்குறிப்பிட்ட கதையினை நாம் தாமஸீக புராணமான லிங்க புராணத்தில் காண்கிறோம். விஷ்ணுவே பரம்பொருள் என்னும் வேதஞானத்தின் இறுதி முடிவிற்கும் ஸாத்வீக புராணங்களின் அதே முடிவிற்கும் இக்கதை முரண்பட்டதாக இருப்பதால், இது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

      இதனை ஸ்கந்த புராணத்தில் சிவபெருமானே முருகனிடம் கூறுகிறார்.

      ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத்
      பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம் மோக்ஷ -ஸ்தானம்
      ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி
      ஸ்கந்த புராணத்தில் சிவபெருமான், கார்திகேயனிடம் கூறுகிறார் ..

      'சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி. அதுவே எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது' என்கிறார்.

      எனவே, மேற்குறிப்பிட்ட கதையானது அறியாமையினால் கவரப்பட்டு கிருஷ்ணரின் உயர்தன்மையை அறிய இயலாமல் இருக்கும் சிவபெருமானது பக்தர்களிடம் நம்பிக்கையை அதிகரிப்பதற்கானதாகும்.

      ஏதேனும் ஒரு தேவரின் மீது வைக்கப்படும் நம்பிக்கை அவர்களை படிப்படியாக உயர்த்தும் என்பதால், அந்த நம்பிக்கையை கிருஷ்ணரே பலப்படுத்துகிறார் என்பதை நாம் கீதையில் (7.21) காண்கிறோம்

      Delete