Thursday 17 August 2017


திருமண மந்திரங்களில் ஆபாச வார்த்தைகள்
உண்மையா ?



சமூக விரோதிகளால் திரித்து பொருள்கூறப்பட்ட திருமண மந்திரம் திரித்து கூறப்பட்டதன்  உண்மையான விளக்கம் ....

சோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தரI
த்ரிதீயோ அக்னி இஷ்டேபதி: துரீய மனுஷ்யஜா II
 சோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே  I
ரயிம் ச புத்ரான் தாதாத் அக்னி மஹ்ய மதோ இமாம்  II 

                                     – ரிக்வேதம் 10. 85, 40. 41

வார்த்தை அர்த்தம் :

சோம: - சோமன்; ப்ரதமோமுதலில்; விவிதே- பாதுகாத்தான்; கந்தர்வோ- கந்தர்வன்; விவித- பாதுகாத்தான்; உத்தர:- (அதன்) பின்னால்; த்ரிதீயோ- மூன்றாவதாக; அக்னி- அக்னியானவன்; இஷ்டே- தலைமை கொண்டான்; பதி: - பாதுகாத்தான்; துரீய- நான்காவதாக; மனுஷ்யஜா- மனிதனாகிய நான் உன்னை; சோமோசோமன்; ததத்அளித்தான்; கந்தர்வாய-கந்தர்வனிடம்; கந்தர்வோ-கந்தர்வனோ; ததத்அளித்தான்; அக்னயே-அக்னிக்கு; ரயிம் -செல்வங்களை; - மற்றும்; புத்ரான்- மக்கள்பேறு; தாதாத்கொடுக்கட்டும்; அக்னி- அக்னி; மஹ்ய-எனக்கு; மதோ-ஆகிய; இமாம்- தரட்டும்.

பொருள்:

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான், பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான், மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான், நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இவ்வாறு சந்திரன் கந்தர்வனிடமும் கந்தர்வன் அக்னியிடம் உன்னை பாதுகாத்து ஒப்படைத்தான். அப்படி உன்னை பெற்ற அக்னி, எனக்கு செல்வத்தையும் புத்திர பாக்கியத்தையும் அளிக்கட்டும் " ரிக்வேதம் 10. 85, 40 & 41

இதன் உட்பொருள்:

1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.

ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

          ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)

இந்த வசனத்தில், 'விவித' என்பதற்கு அர்த்தம் பாதுகாப்பது என்றே பொருள் வரும். "விவிதோ ரணே" என்ற பதம் மிகவும் பிரசித்தி வாய்ந்த பதம். இது பல கவசங்களில் வரும் வார்த்தை ஆகும். இதன் பொருள் "ரணங்களில் இருந்து என்னை காப்பாற்று". இதில் 'வித' என்பது சூழ்ந்து, 'விவித' என்பது நன்றாக சூழ்ந்து என்பதே. இங்கே சூழ்வது என்ற பொருளில் உள்ள வேர்ச்சொல் சூழ்ந்து காப்பது என்ற பொருளில் பயன்படுத்த படுகிறது!

          மேலும்,, இந்த வசனத்தில், பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான். இந்த மந்திரத்தில்அக்கினிபதி என்று சொல்லப்படுவதால் சமஸ்க்ருதம் ஒழுங்காகத் தெரியாத மூடர்கள் அக்கினி பெண்ணின் கணவன் என்று மொழிபெயர்க்கிறார்கள்

பதி என்பதற்கு அரசன், ஆட்சியாளர், காப்பாளர், தலைவர், கணவர் என்று ஐந்து பொருட்களுண்டு. இடத்துக்குத் தகுந்தவாறு பொருள் கொள்ள வேண்டும். இந்த மூடர்கள் ராஷ்ட்ரபதி (குடியரசு தலைவர்) என்பதைத் தேசத்தின் கணவர் என்று மொழிபெயர்க்கக் கூடியவர்கள்.

இதில் ‘பதி’ என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்?
  
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.


Dr .R .L காஷ்யப் (Director of the Sri Aurobindo Kapali Sastry Institute of Vedic Culture.) அவர்கள் தொகுத்த உரையில் - திருமணம் குறித்து அமைந்த ரிக் வேதம் பத்தாம் மண்டலம், 85 வது அத்தியாயம், 40வது பாடலில் பதி என்பதற்கு பாதுகாவலர் என்றே குறிப்பிட பட்டுள்ளது. உரையில் அந்த பாடலின் உள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு:



திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?


இந்திய சமுதாயத்தின் மிகச் சிறந்த நாகரிக சிந்தனையான இந்த செய்யுள்,

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்

திருமணத்தின் போது மணமகன்தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்தமாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனாஎன்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவனவாழ்க்கையில், ஹேதுனாஇன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானேஇந்த மங்கல நானை

கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபாகேமிகச் சிறந்த குண நலன்களை உடையவளே

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரதஆண்டுசதம்நூறு)

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும்இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.


அர்த்தமுள்ள இதோ ஒரு திருமணத்தில் சொல்லப்படும் மொத்த மந்திரங்களின் தமிழாக்கம் ...

இதில் எங்கே ஆபாசம் உள்ளது ?


முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ,அடுத்ததாக நவக்கிரக பூஜைபிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறதுமணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்:

‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’



பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்:

‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’

மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்:

‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று.

மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது:
‘‘ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க,

மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை,

‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’

அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்:

‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’


இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன்,

‘‘ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’

பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இதுசப்தபதிஎனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்:

‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவிதை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்:

‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! , மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது:

‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’ 

சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான்.

இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள்.

‘‘ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்:

 ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’

பின் மணமகள் சொல்வது:

‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’

கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்:

‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’

பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்:

‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’


இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள்.


2 comments:

  1. தயவுசெய்து வேதங்களிலும் உபநிஷத்களிலும் இறைவன் யார் என்பதை ஆதாரத்துடன் விளக்குகள் எனக்கு அது தான் மிகவும் குழப்பமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. இதே லிங்க் மேலே விளக்கம் உள்ளது !

      இதோ லிங்க்..

      இந்துமதம் கூறும் இறைவன் பகவான் நாராயணர் / விஷ்ணு / கிருஷ்ணரே ...

      http://worldsanathanadarmam.blogspot.com/2018/12/blog-post_26.html

      கடவுள் / இறைவன் என்பது என்ன ? அது யார் ?

      http://worldsanathanadarmam.blogspot.com/2017/11/blog-post.html

      Delete