Thursday, 13 December 2018


சங்க தமிழ் நூல்களில் வேத கடவுள்களே சொல்கிறது ! 

இன்று பல இடங்களில் பலர் தமிழரின் சமயம் சனாதன தர்மம் (இந்துமதம்) அல்ல எனவும் ! தமிழர்கள் வழிபாடு, கலாச்சாரம், பண்பாடுகள் எல்லாமே வேறு என கூற கேட்டுளோம். இது தவறானது !

ஏனெனில், தமிழர்களின் இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்......, இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் சிவன், விஷணுவை போற்றி பாடல்கள் உள்ளதே....?

                    இந்த இலக்கிய நூல்கள் இல்லாமல் தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை நிறுவ முடியுமா....? அல்லது காப்பாற்றத்தான் முடியுமா......?

           உண்மையை சொன்னால், இதை மறுப்பவர்கள் தமிழை காப்பாற்றுபவர்கள் அல்ல. தமிழை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு தொன்மையான தமிழனின் வரலாற்றை அழிக்கும் தமிழின துரோகிகள்.

இப்படியே விட்டு வைத்தால் தமிழ் நூல்கள் அனைத்தும் அழியும். தமிழ் நூல்கள் அழிந்தால் தமிழ் மொழியும் அழியும். தமிழ் மொழியே அழிந்தால்  வரலாற்றில் இன்று நாம்  அழிந்து போன சிந்து சமவெளி நாகரிகத்தை படிப்பது போல, அழிந்து போன தமிழனின் நாகரிகத்தை பிற்காலத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வரும்.

தமிழர்கள் என்பது தமிழில் பேசுவது மட்டுமல்ல, மொழி,கலாச்சாரம்,பண்பாடு,வாழும் முறைகள், வழிபாடுகள் இவைகள் எல்லாமே சேர்ந்தது தான் தமிழர்கள் எனப்படுகிறார்கள். உண்மையில் இப்படி உள்ளவர்கள் சனாதன தர்மத்தை ( இந்துக்கள்) தமிழர்கள் மட்டுமே தான்.

தொல்காப்பியம் கூறும் வேத கடவுள்கள் !

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு செல்வோம்.  எனக்கு தெரிந்து தொல்காப்பியத்திற்கும் மேலான ஒரு பழமையான நூல் தமிழ் இலக்கியத்தில் கிடையாது.  இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது தொல்காப்பியத்தின் காலம். கி.மு. 5000 ல் இருந்து கி.மு. 8,000 வரையாக பல காலகட்டங்களை   தமிழறிஞர்கள்  பலரும்  குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாட்டை பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"    

-         தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05

           இந்த பாடலில் வரும் மாயோன், சேயோன், வருணன் போன்ற வழிபாட்டு தெய்வங்கள் யார்...?

வேத கால தெய்வங்களான   விஷ்ணு (மாயோன்), இந்திரன் (வேந்தன்), வருணன், ஸ்கந்தன் சேயோன் (சிவப்பு நிறமானவன்)/  ஆகியோரே தமிழர்களின்  தெய்வங்கள் என்று தொல்காப்பியர் தெளிவாக  சொல்லிவிட்டார்.

சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி(மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை ,மருதம் , நெய்தல் மற்றும் பாலை எனப் பிரிப்பதை நாம் அறிவோம். தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: முல்லை  மாயோன் - திருமால் (விஷ்ணு), குறிஞ்சிமுருகன், (கார்த்திகேயன் அல்ல்து ஸ்கந்தன்), மருதம்இந்திரன் , நெய்தல்வருணன், பாலைகொற்றவை (சக்தி) என தான் மேலே சொல்கிறார் ! இது வேத கடவுளை தானே சொல்கிறது !

மாயோன் என்பது பகவான் கிருஷ்ணரே என்பது கலித்தொகை -103 இல் உறுதியாக அறியலாம். இதில் கம்சனால் அனுப்பப்பட்ட கேசி என்கிற அசுரனை அழித்த மாயோன் என்கிறார். எனவே, தொல்காப்பியர் கூறும் மாயோன் என்பது பகவான் கிருஷ்ணர் /விஷ்ணு குறிப்பிடுகிறது.

அதே தொல்காப்பியத்தில் மற்றொரு முறை மாயோன் குறிப்பிடப்படுகிறார்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்
தெல்காப்பியம் பொருள்.புறத் 5/9

பொருள் - பூவை நிலை எனப்படுவது யாதென்றால் மன்னனை நிலைத்த பெரும் புகழை உடைய மாயோனோடு ஒப்பிட்டுப் பாடுவது ஆகும்.

இதிலிருந்து மாயோன் என்பவர் தமிழரது பெருந்தெய்வம்... திணை தெய்வம் மட்டுமல்ல என்று தெரிகிறது.

தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகள.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

-தொல்.பொருளதிகாரம்—1038

பொருள்: “வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்."

 இதில் வேதம் ஓதுகின்ற மாப்பிள்ளை யார்....?  அவன் எந்த வேதத்தை ஓதினான்...?

அதாவது வேத ஓதுவது என்பது தமிழர் பண்பாடு என இதன் மூலம் அறியலாம்.

தொல்காப்பியம் மரபியல்:...

''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய'' (தொடர் எண்- 1570)

முப்புரிநூல், கமண்டலம், முக்கோல் எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி, அமரும் பலகை இவை நான்கும் அந்தணர்க்குரியவைகள். (வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)

''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.'' (தொடர் எண்- 1572)

“அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும். (அரசனும் தவம் செய்ய தகுதியானவன்)

          தொல்காப்பியத்தின் இந்த அந்தணன் யார்...?  ஆரியர்கள் தான் அந்தணன் என்றால் அவன் எப்படி கமண்டலம், முப்புரி நூல், அமரும் பலகை உடன் எப்படி தொல்காப்பியத்திற்குள் வந்தான்...?

அவனுக்குரிய அடையாளங்களை எப்படி தொல்காப்பியரல் சொல்ல முடிந்தது ? அந்த அந்தணனன் எந்த தெயவத்திற்காக காட்டில் தவம் செய்தான்.?

இதிலும் தெளிவாக சொல்கிறது, அந்தணன் என்கிற வேத கலாச்சாரத்தை தான் !

மற்றொரு ஆதாரம்...

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

          - பரிபாடல்-திரட்டு 8:7-12
விளக்கம்:
பூவினுள் பிறந்தோன்- பிரம்மா
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி
கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்
 கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

"பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

தமிழின் பழமையான தொல்காப்பியத்தில் பரி பாடலின் இலக்கணம் எடுத்தாளப்பட்டு இருக்கு. சங்க இலக்கிய காலத்திற்கும் தெளிவாய் தெரிந்திருகிறது வேதத்தின் ஆதி என்பது தமிழே. தமிழின் மந்திர மொழி சமஸ்கிருதம்.

சங்ககால சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறும் தொல்காப்பியர்.

"நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய"

தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71

பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமுள்ள வைணவ சந்நியாசிகளே அக்காலத்தில் சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்பட்டார்கள் என விளங்குகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ நிலைத்து நின்றது என்று நன்கு புலப்படும்.

பகவான் கிருஷ்ணரை பற்றி...

மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே" - பரிபாடல் 3 - 2,3

"மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே (கிருஷ்ணரே!)"

வேறு இடத்தில பகவான் கிருஷ்ணரை (மாயோன்) பற்றி கூறுகிறார்...

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ் பூவை நிலையும்          - தொல்காப்பியம்

பொருள் - மாயோனுடைய அளவிடற்கரிய புகழைப் போற்றுவதைப் போல மன்னனைப் போற்றுவதே பூவை நிலை எனப்படும்! திருமாலைப் போலவே மன்னனைப் போற்றுவதற்கு என்று தனித்துறையே வகுத்துள்ளனர் தமிழ் முன்னோர்! வேறு எந்த தெய்வத்திற்கும் தரப்படாத முதல் இடம்! காரணம் மன்னர்கள் திருமாலின் வழிவந்தவர்கள்.. அவரின் ப்ரதிநிதியாக உலகைக் காத்து அருள்பவர்கள் என்பதே ஆகும்.!

திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார்
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே? 
  - (பரிபாடல்-55).

பொருள்- திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர்.

தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாகஉருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம்.
திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்              - பரிபாடல் - 64 – 71

ஒளிதிகழும் திருபாற்கடலை கடைந்த பொழுது மந்தரமலையின் மத்தானது கடலில் ஆழத்தொடங்கியது. திருமால் ஆமையாக உருவம்கொண்டு (கூர்ம அவதாரம்)தனது சிறப்புடைய முதுகின்மேல் தாங்கி நின்று அதனை நிலைக்கச்செய்தார். மகரமீன்கள் உலாவும் கடலினினத்தே அவ்வாறு மலையை நிலைபெற நிருத்தினான். புகழ்நிரம்பிய தேவரும் அசுரர்களும் இருதிறத்தார்க்கும் அமுதம் கடைய உதவினான்.

வராஹ அவதாரத்தைநோக்குவோம்.இரணியனுடபிறந்த அசுரன் பூமியை சுருட்டிஎடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான்.இச்செய்தியைக் திருமாலிடம் கூறித் தமக்குஉதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டார் திருமால்.

இக்கதையை பரிபாடல் காணலாம்.

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நின் பேணுதும் தொழுது           
  - பரிபாடல் - 16 - 19

ஊழிக்காலத்தால் எங்கும் பெருவெள்ளம் தோன்றின. அவ்வெள்ளத்துள் இவ்வுலகமே மூழ்கியது. திருமாலாகிய நீ தான் அவ்வெள்ளத்துள் மூழ்கினை:ஆங்கு வெள்ளத்தடியில் மூழ்கிய உலகை வெளியே கொணர்ந்து நிலை நிறுத்தினாய்.

நரசிம்ம அவதாரத்தை நோக்குவோம்.இரணியன் தன்னைவிலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும்தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப் படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக்கட்டாயப்படுத்தினான்.

இக்கதையை பரிபாடல் பாடுகிறது.

புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்       
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;
பிரகலாதன் நின்னை புகழ்ந்தான்.     
- பரிபாடல் நான்காம் பகுதி - 10 - 21

அதனை கேட்ட இரணியன் புழுஙஎகியமனத்தோடு தன்மகனாகிய பிரகலாதனை பலவாறு கட்டிப்போட்டு துண்புறுத்தினான்.மனமும் உடலும் ஒடுங்குமாறு துன்புற்ற அவன் தந்தையை இகழ மனம்வராமலஎ துயரை பொறுத்தான். (நரசிம்மரான)நீயோ இரண்யனை இகழ்ந்து பிரகலாதனை பொருந்தினாய். உன்னை இகழ்ந்தும் உம் பக்தனை துன்புறுத்திய இரணியன் , பெருமலைபோன்ற மார்பினினத்து பாய்ந்து அவன் செருக்கழியும்படியாக துண்டாகிப்போன தூண்களுடன் இரணியனது தசை துண்டாகி பலவாறு வீழுமாறு பிளந்தனை, அவ்வாறு வகிர்தலை செய்த நகங்களையுடைய நரசிம்ப பெருமானே!

வாமனஅவதாரம். இந்த திரிவிக்ரம அவதாரத்தை பல மேற்கணக்கு நூல்கள் மட்டுமன்றி பெரும்பாணாற்றுப்படையிலும் (29-31) தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. இதை தவிற கலித்தொகை, உலகப்பெ்துமறை, பரிபாடலிலும் கூறப்படுகின்றது.

திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார்
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால் பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே?   - பரிபாடல்-55

பொருள்- திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம். இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய் (வாமன அவதாரம்). உன் உருவைக் கண்டு கலங்கிய அவுணர் (அசுரர்கள்) சிதறி ஓடினர், அவர்களுள் உன்னைச் சரணடைந்தோர்க்கும் நீயே முதல்வன் ஆகிறாய். அதனால், உனக்குப் பகை என்பதும், நட்பென்பதும் கிடையாது. இதனை உனது மரபை அறிந்தோர் நன்றாக அறிவர்.


சங்கப்பாடல்களில் பல்வேறு இடங்களில் திருமால் போற்றப்படுகிறார். இதில் வாமன அவதாரக் குறிப்பும் உண்டு.

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல              
    - முல்லைப்பாட்டு (1-3)

“தனது பெரிய கரங்களில் சங்கும், சக்கரமும் உடையவனாகிய திருமால் அன்றொருநாள் மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு வந்து , தானமாகப் பெற கையில் தாரை நீரை வாங்கிக் கொண்டே தனது குள்ள உருவிலிருந்து ப்ரமாண்டமாக த்ரிவிக்ரமனாக  வளர்ந்தார். அவரைப் போல கடலிலிருந்து நீரை உறிந்து கொண்டு வானத்தில் மழை மேகங்கள் எழுந்தன

இப்பாடல் மூலம்  வாமன அவதார நிகழ்வானது பண்டைய தமிழர் அறிந்து , பதிவு செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

கலித்தொகை -103 பாடல் ..

"மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞண்டு,
இன்னன்கொல்
மாயோன் என்று உட்கிறறு, என் நெஞ்சு!' 

பொருள்: கம்சனால் ஏவப்பட்ட  குதிரை வடிவ 'கேசி' என்னும் அசுரனை கொன்ற மாயோன்(கிருஷ்ணன்) போல ஏறு தழுவிய (ஜல்லிக்கட்டு) வீரன்  இருந்தான்' என்று கூறுகிறது.


பழந்தமிழரது காதல் தெய்வம் மாயோனே!

காதல் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ராதா கிருஷ்ணரே..

இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்.     
- கலித்தொகை - பாடல் எண் 108

பொருள்: தன் காதலியைப் பார்த்துக் காதலன் சொல்கிறான், "அழகிய என் காதலியே உனக்கு இணையான பெண் இன்னொருத்தி எனக்கில்லை, உன்னையே நான் காதலிக்கிறேன், நீ வருந்தாதே, இது உண்மை என்பதை 'மலைபோன்ற உறுதியான அழகிய மார்பினை உடைய திருமாலின் திருவடிகளை தலையில் வைத்து, இருகைகளால் தொட்டு சூளுரைக்கிறேன் என்கிறான்.

மாயோனும் வாலியோனும் - கிருஷ்ண பலராமன்

மாயோன் கிருஷ்ணனே என்பதை உறுதி செய்யும் வகையில்... மாயோன் பாடப்படுகின்ற இடத்தில் அவரோடு இணைத்து வாலியோன் அதாவது கிருஷ்ணனது அண்ணன் பலராமனும் பாடப்படுகிறான்.

கபிலர் நற்றிணையில் குறிஞ்சித்திணை பாடலில்

"மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி"    
   - நற்றிணையில் (32)

“திருமாலுடன் (மலை போன்ற கரும்பச்சை நிறமுடையவன்) வெள்ளருவி நிறமுடைய பலராமனையும் குறிப்பிடுகிறார்.

இளங்கோவடிகளின் நூலான சிலப்பதிகாரத்திலும்

கதை தலைவன் கோவலன் காடுகாண் காதைப் பகுதியில்..

"நீள் நெடுவாயில்...மணிமண்ணன் கோட்டம் வலஞ்செயாக்கழிந்து" 

என்று முதலில் திருமால் கோயிலை வலம் வந்தான் என்று கூறுவது நோக்கத்தக்கது.

சிலப்பதிகாரத்துக்கு உரை செய்த சைவராகிய அடியார்க்கு நல்லார்.

"கடலாடு காதை" அடி 35 இல்

மாயோன் பாணியும் என்றவிடத்து மாயோன் காவற் கடவுளாய் அருளை அருத்தலான்

"நாராயணா என்னாத நாவென்ன நாவே,
கரியவனைக் காணாத கண் என்ன எண்ணே,
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?"  (சிலப்பதிகாரம்)

தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம் சங்கு சக்கரம் ஏந்திய திருக்கைகளுடன் மலை மீது எம்பெருமான் திருமலையில் நிற்கும் எழிலை வர்ணிக்கிறது

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமீசை ....
நன்னிற மேகம் நின்றது போலப் பகை அணங்காழியும் பால்வெண்சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி... செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்” 
(காடுகாண் காதை 41-57)

          இளங்கோவடிகள் திருப்பதியில் மலைமீது கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கற, செங்கண் நெடியோனாகிய திருமால் என்கிறார்.

இராம அவதாரம் பற்றிய புராணக் கதையைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. இராமாயணக் கதை சுருக்கமாகச் சிலப்பதிகாரத்தில் இரு இடங்களில் பேசப்படுகிறது.

                தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ          
- சிலம்பு. ஊர்காண் காதை. 46-49

“இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?”

இப்பகுதி, கோவலனுக்குச் சொல்லப்படும் ஆறுதல் மொழியாக இடம்பெற்று உள்ளது.


திருமாலைப் போற்றி இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும் அவனது இராம அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.

மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே                   -         (சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)

திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன் தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான். மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க, இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.

அகநானூறு & புறநானூறு !

புறநானூற்றில்  இராமாயணத்தில் வரும் குரங்குகள் அணிந்த நகைகள் பற்றி குறிப்பிடுகிறது ...

கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே    
  - புறநானூறு ( 378: 18-22)

ராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச்சோழன் கோயிலில்பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது

புறநானூற்றில் 58ஆம் பகுதியில் 14ஆம் அடிமுதல் 16அடிவரை நோக்கின் பின்வரும் செய்யுளை காணலாம்.

பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு
பால்நிறப்பனை கொடியோனும் (பலராமர்)நீல வண்ணத்திருமாலும் இருதெய்வமும் ஒருங்கே உள்ளீர்கள்
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி  

       - (நற்றிணை-32)

என்று திருமாலுடன் (மலை போன்ற கரும்பச்சை நிறமுடையவன்) வெள்ளருவி நிறமுடைய பலராமனையும் குறிப்பிடுகிறார்.


அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமாயணக் காட்சி - பறவைகளின் ஒலியும் இராமனும் பற்றி இதில் வர்ணிக்கிறார். ..

வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.           
   - (அகம். 70)

இராமனைப்பற்றி  சில செய்திகளைத் தருகின்றன.

மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் இருக்கும் 70 வது பாடல்

கருத்து: கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறை ஓதிக்கொண்டிருந்தான். அவனது மறையொலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், அவனது படைகளும் சிறிதும் ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தன.

பரசுராம அவதாரத்தை  அகநானூற்றில் 220பகுதியில் 5ஆம் அடி தொடக்கம் 9ஆம் அடிவரை....

 திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமிக்கப்படுகிறது.

மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல
மதம் பொருந்திய யானைகூட்டம்

எல்லா போர் முனையிலே அழியுமாறு மன்னர்கள் பரம்பரையையே வேறுடன் அறுத்த பரசாகிய வாளினுடைய பரசுராமன் முன்காலத்தில் அரிதாக செய்துமுடித்த வேள்வியிடத்தில் கயிற்றினை அரையிலே கட்டியிருந்த காணத்தகுந்த அழகுடைய அரிய காவலையுடைய வேள்வித்தூண்போல என்று உவமையணி கையாளப்பட்டுள்ளது.

கிருஷ்ணருடைய லீலாவினோதங்களில் ஒன்றான கோபிகா வஸ்திராபரணத்தை அகநானூற்றுப்பாடலில் காணலாம்.

வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல்
 - அகநானூற்றுப்பாடல்,59 இல் 3 - 6

வடக்கின் கண்ணதாகிய நீர்வளம் அறாத யமுனையாற்றில் நெடியமணலையுடைய ஆற்றங்கரையில் நீராடிய ஆயர்மகளிர் தண்ணிய தழையாடியனையை உடுத்துக்கொள்ளுமாறு குருந்த மரத்தை வளைத்து தந்த திருமாலான கண்ணன்

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு    
- கலித்தொகை. 103 இல் 53-55

கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன்கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி.

"இனை வனப்பின், மாயோய்!
நின்னின் சிறந்தார்  நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்"  

-  கலித்தொகை பாடல் எண் 108

பொருள்: தன் காதலியைப் பார்த்து காதலன் செல்கிறான்,"அழகிய என் காதலியே உனக்கு இனையான பெண் இன்னொருத்தி எனக்கில்லை, உன்னையே நான் காதலிக்கிறேன், நீ வருந்தாதே இது உண்மை என்பதை 'மலைபோன்ற உறுதியான அழகிய மார்பினை உடைய திருமாலி் திருவடிகளை தலையில் வைத்து இருகைகளால் தொட்டு சூளுரைக்கிறேன் என்கிறார்.

திருவள்ளுவர் கூறும் வேத கடவுள்கள் !

திருவள்ளுவரும் தனது நூலான திருக்குறளில் பகவான் விஷ்ணு / கிருஷ்ணரை மையமாக வைத்தே அவரது கடவுள் வாழ்த்து எழுதி உள்ளார் . மேலும், அவர் வேத கடவுள்களான விஷ்ணு (திருமால்), லட்சுமி (திருமகள்), யமன், இந்திரன், பிரம்மா ஆகியோர்களை தான் தனது நூலில் குறிப்புடுகிறார் !

திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–

அடி அளந்தான்திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610),  அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து),  ஆதி பகவன் – 1,  யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083,  பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை,  பிரம்மாஉலகு இயற்றியான் 1062, இந்திரன் – 25,  கண்ணன்தாமரைக்கண்ணான் 1103,  லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920, மூதேவிமாமுகடி 617, 936,  பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258

திருமால் (விஷ்ணு ) பற்றி வள்ளுவர்:

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?    - குறள் 1103

பொருள்:  'தாமரை கண்ணணுடைய உலகம் தான் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ'

எல்லோரையும்விட உயர்தவரான தாமரை கண்களையுடைய கிருஷ்ணரே ஆதிபகவான் என்பதை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர் இந்த குறளை படைத்திருக்கிறார்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு        - குறள் 610

மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக வின்னையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.

பகவான் கண்ணனை பற்றி கூறுகிறார்...

அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

தவைவனுக்காக காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும்புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன் ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.

இப்படி அனேகமான சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெருமாள் பற்றி ஏராழமான பாடலடிகள் உள்ளன அத்தனையும் பதிவில் குறிப்பிட முடியாது.

இவ்வாறு பெருமாளின் அவதாரமகிமைகளை தமிழ்சுவை சொட்ட பாடி வணங்கியுள்ளனர் நம் சங்கத்தமிழர்கள். எனவே இவை மூலம் அறியவேண்டியது என்னவெனில் வடமொழி புராணங்களுக்கு சலைக்காமல் ஈடு இணையில்லா இறைவனை புகழ்ந்துரைக்கிறது தமிழ் இலக்கியங்கள். எனவே நாராயணனை துதிக்காதவன் தமிழனாகவே இருக்கமுடியாது.

நாராயணா என்னாத நாவென்ன நாவே,
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? (சிலப்பதிகாரம்)

எனவே, நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் கடவுள் என்றால் அது திருமாலே (ஸ்ரீமந் நாராயணர்) என்பது உறுதி !

1 comment:

  1. மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற பாடல் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் அருளிய கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் ஆகும். உலகினைக் காக்கும் கடவுளான திருமாலின் திருப்பெயர்களைக் கூறிக் கொண்டிருந்தால் நம்முடைய பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல பொசுங்கி விடும் என்பதை இப்பாடல் விளக்குகிறது

    ReplyDelete