மாயோன் (பகவான் கிருஷ்ணர்) - சங்க தமிழ் கூறும் முதன்மை தெய்வம் -!
இன்று பல இடங்களில் பலர் தமிழரின் சமயம் சனாதன தர்மம் (இந்துமதம்) அல்ல எனவும் ! தமிழர்கள் வழிபாடு, கலாச்சாரம், பண்பாடுகள் எல்லாமே வேறு என கூற கேட்டுளோம். இது தவறானது !
ஏனெனில், தமிழர்களின் இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்......, இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் சிவன், விஷணுவை போற்றி பாடல்கள் உள்ளதே....?
இந்த இலக்கிய நூல்கள் இல்லாமல் தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை நிறுவ முடியுமா....? அல்லது காப்பாற்றத்தான் முடியுமா......?
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு செல்வோம். தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாட்டை பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.
தொல்காப்பியம் கூறும் வேத கடவுள்கள் !
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
-
தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05
வேத கால தெய்வங்களான
விஷ்ணு (மாயோன்), இந்திரன் (வேந்தன்), வருணன், ஸ்கந்தன் சேயோன் (சிவப்பு நிறமானவன்)… ஆகியோரே தமிழர்களின் தெய்வங்கள் என்று தொல்காப்பியர் தெளிவாக சொல்லிவிட்டார்.
சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி
(மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை ,மருதம் , நெய்தல் மற்றும் பாலை எனப் பிரிப்பதை நாம் அறிவோம். தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: முல்லை – மாயோன் - திருமால் (விஷ்ணு), குறிஞ்சி – முருகன், (கார்த்திகேயன் அல்ல்து ஸ்கந்தன்), மருதம் – இந்திரன் , நெய்தல் – வருணன், பாலை – கொற்றவை (சக்தி) என தான் மேலே சொல்கிறார் !
அதே தொல்காப்பியத்தில் மற்றொரு முறை மாயோன் குறிப்பிடப்படுகிறார்.
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும். - தெல்.பொருள்.புறத் 5/9
பொருள் - பூவை நிலை எனப்படுவது யாதென்றால் மன்னனை நிலைத்த பெரும் புகழை உடைய மாயோனோடு ஒப்பிட்டுப் பாடுவது ஆகும்.
பகவான் கிருஷ்ணரை (மாயோன்) பற்றி கூறுகிறார்...
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ் பூவை நிலையும் - தொல்காப்பியம்
பொருள் - மாயோனுடைய அளவிடற்கரிய புகழைப் போற்றுவதைப் போல மன்னனைப் போற்றுவதே பூவை நிலை எனப்படும்! திருமாலைப் போலவே மன்னனைப் போற்றுவதற்கு என்று தனித்துறையே வகுத்துள்ளனர் தமிழ் முன்னோர்! வேறு எந்த தெய்வத்திற்கும் தரப்படாத முதல் இடம்! காரணம் மன்னர்கள் திருமாலின் வழிவந்தவர்கள்.. அவரின் ப்ரதிநிதியாக உலகைக் காத்து அருள்பவர்கள் என்பதே ஆகும்.!
தொல்காப்பியர் கூறுகிற மாயோன் என்கிற கடவுளை தான் அதன் பின் வந்த எல்லா தமிழ் நூல்களும் சொல்கிறது.
பரிபாடல் கூறுகிறது..
மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே" [பரிபாடல் 3 - 2,3]
"மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே (கிருஷ்ணரே!)"
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5
“திருமாலே!
ஆயிரம் தலைகளினாலே ஆதிசேஷன் உனக்குக் குடை ஏந்துகிறான்! உன் மலர் மார்பில் திருமகள் இருக்கிறாள். சங்குபோன்ற வெண்மை நிறமுடையவனும், கலப்பை யாகிய ஆயுதத்தையும், பனைக்கொடியையும் , ஒரு குழையையும் உடைய பலதேவனாகவும் நீ இருக்கிறாய்! “
இதில், மாயுடை மலர் மார்பின்'- 'மாயோனின் மலர் மார்பில் என திருமால்/விஷ்ணுவை சொல்கிறது.
கலித்தொகை கூறுகிறது.. ...
திருமால் வழிபாட்டின் தொன்மைக்குக் கலித்தொகையும் சான்றாக அமைகின்றது. இந்நூலில் திருமாலின் அவதாரமாகக் கூறப்படும் கண்ணனின் பால சரித நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. கலித்தொகையில் உள்ள
26,36,103,104,105,119,123,124,127 ஆகிய எண்களுடைய பாடல்களில் இத்தகைய குறிப்புகள் எழில் பெற இடம் பெறக் காணலாம்.
"மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞண்டு,
இன்னன்கொல் மாயோன் என்று உட்கிறறு, என் நெஞ்சு!'
- கலித்தொகை -103
பொருள்: “தோழியே (ஒரு காளையை அடக்கும்) காயாம்பூவாலான கண்ணி சூடி நிற்கும் இவன் அழகைப் பார்! பகைவர் ஏவிய குதிரை அரக்கனை, அதன் வாயைப் பிளந்து கொன்றொழித்த அன்று, திருமால் இவனைப் போலவே தோன்றினான் போலும் என்று எண்ணி நடுங்குகிறது என நெஞ்சு”
அதாவது, இது மஹாபாரதத்தில் வரும் கதையான, கம்சனால் ஏவப்பட்ட குதிரை வடிவ 'கேசி' என்னும் அசுரனை கொன்ற மாயோன் (கிருஷ்ணன்) போல ஏறு தழுவிய (ஜல்லிக்கட்டு) வீரன் இருந்தான்' என்று கூறுகிறது.
மேலும், கலித்தொகை தம்நாட்டு வேந்தனாகிய பாண்டியன் உலகெங்கும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்னும் நாட்டுப்பற்றுடன் திருமாலின் அருளை மனமாரப் போற்றும் மக்களின் பக்திப் பெருக்கினையும் கலித்தொகையில் இடம்பெறும் 104:78-80, 105:71-75 ஆகிய எண்களுடைய பாடல்கள் காட்டுகின்றன.
மாயோனும் வாலியோனும் - கிருஷ்ண பலராமன்
மாயோன் கிருஷ்ணனே என்பதை உறுதி செய்யும் வகையில்... மாயோன் பாடப்படுகின்ற இடத்தில் அவரோடு இணைத்து வாலியோன் அதாவது கிருஷ்ணனது அண்ணன் பலராமனும் பாடப்படுகிறான்.
கபிலர் நற்றிணையில் குறிஞ்சித்திணை பாடலில்
"மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி" - நற்றிணையில் (32)
“திருமாலுடன் (மலை போன்ற கரும்பச்சை நிறமுடையவன்) வெள்ளருவி நிறமுடைய பலராமனையும் குறிப்பிடுகிறார்."
இங்கே பலராமரின் நிறத்தை சொல்கிறார்.
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து
நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப
- கலித்தொகை - 36
பொருள்: "கொடிய வலிமை கொண்ட கலப்பைப் படைக்கலனைக் கொண்டவன் நாஞ்சிலான் என்னும் பலராமன். அவன் மரா மரம் போல வெண்ணிறம் கொண்டவன்."
மேலே, 'மாயோன்' என்பது கேசி என்கிற குதிரை அசுரனை அழித்தவன் என்கிறது, அதை தொடர்ந்து கலித்தொகை-104 இல் காளையை கிருஷ்ணரும், பலராமனும் அடக்குவதை சொல்கிறது. கிருஷ்ணர் கருமை நிறம் எனவும், பலராமன் வெண்மை நிறத்தவன் என்கிறது.
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
- கலித்தொகை-104
பொருள் :"பனை மரக் கொடி உடையவன் பலராமன். அரில்வன் பால் போல் வெள்ளை நிறம் கொண்டவன். அவனைப் போன்ற குற்றமற்ற வெள்ளை நிறம் கொண்ட காளை"
பதிற்றுப்பத்தில்……
சங்க நூல்களிலேயே பழமையானது பதிற்றுப்பத்து என்பர். அந்நூலிலும் திருமால் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
கமழ்குரல் துழாஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி - (31, 8-9)
(கமழ்குரல் துழாஅய் அலங்கல் = மணங்கமழ்கின்ற பூங்கொத்துக்களையுடைய துளசி மாலை; செல்வன் = திருமால்)
என்பதில் திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலில் மக்கள் அவனைப் பரவிய செய்தி இடம் பெற்றுள்ளது.
திருமாலை வழிபட்ட மக்களை மட்டுமன்றி, ‘மாயவண்ணனை மனன் உறப்பெற்ற’ செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேரமன்னனைப் பற்றியும் பதிற்றுப்பத்து ஏழாம்பத்து குறிப்பிடுகின்றது.
(மாயவண்ணனை மனன் உறப்பெற்ற – கரிய நிறத்தையுடைய திருமாலைத் தன் மனத்திலே மிகப் பெற்ற) அரவணையில் துயிலும் திருமாலைப் பற்றி முதன்முதலிற் கூறும் நூல் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையாகும். அந்நூலின் பாட்டுடைத் தலைவனான தொண்டைமான் இளந்திரையன் என்பான் திருமால் மரபில் உதித்த சோழர்களின் வழி வந்தவனாகக் கொண்டாடப்படுகிறான்
(29-31).
மதுரைக் காஞ்சியில்…
ஆண்கள் தம் மனைவி மக்களுடன் சென்று மலரும் தூபமும் கொண்டு திருமாலை வழிபட்ட செய்தி (461-65) இடம் பெற்றுள்ளது. அந்நூலிலேயே சங்ககாலத் தமிழர், திருமாலுக்குரிய ஓணநன்னாளினைக் கொண்டாடிய குறிப்பும் காணப்படுகின்றது.
சுணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓணநன்னாள் - 590-91
இவ்வாறு சங்கத் தமிழர் கொண்டாடிய ஓணத்திருநாள் சான்றுகள் உள்ளன. இதிலும் 'மாயோன்' என்கிற விஷ்ணுவை தான் சொல்கிறது. புராணங்களில் பகவான் வாமனராக வந்து, மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி நிலத்தை பெறுவதற்காக வானுயர வளர்ந்த விக்ரமன் என்பதை நினைவு கூற தமிழர்கள் ஓணம் கொண்டாடியதை இங்கே சொல்கிறது.
இதிலிருந்து மாயோன் என்பவர் தமிழரது பெருந்தெய்வம்... திணை தெய்வம் மட்டுமல்ல என்று தெரிகிறது. இப்படி மாயோன் - பகவான் கிருஷ்ணர்/விஷ்ணுவை தான் குறிப்பிடுவதாக பண்டைய தமிழ் நூல்கள் மூலம் உறுதியாக அறியலாம்.
No comments:
Post a Comment